Thursday, 10 December 2015

சிலுக்கு மரமே..சிலுக்கு மரமே..சில்லைகள் கொண்டுவா..


பாசமாக பேசுகையிலும், படுக்கை அறை கொஞ்சலிலும், பாராட்டுவதற்கும் பயன்படுவது பறவைகள். நமக்கு பிடித்தவர்களை வர்ணிக்க வார்த்தையில்லை என்போம். பின்பு என் கொஞ்சும் புறாவே, செல்லக் கிளியே, மைனாவே , என் மயிலே, என் சிட்டே என பலவாறு வர்ணிப்போம். பாராட்டு வார்த்தைகளுக்கு மட்டுமா பறவைகள். இல்லை இல்லை. வசவு வார்த்தைகளிலும் வண்ண பறவைகள் உள்ளன. ஆக்கம் கெட்ட கூவை, திருட்டு காக்கா வேல காட்டாத. கள்ளப்பருந்து சேட்டை செய்யாதே,வாத்து மடையா என்போம். பலவகைகளில் மனிதனின் வாழ்வில் பறவைகள் ஒன்று கலந்து விட்டன. சரி பில்டப் போதும்  கட்டுரைக்கு வாப்பா என நீங்கள் சொல்வது புரிகிறது நண்பர்களே.
சில்லாட்டை
சில்லாட்டை இன்று  இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் தென்னை பனை மரங்கள் இன்று காட்சி பொருளாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் காண கிடைக்கா  பொருள் தென்னை, பனை மரங்கள். தென்னை மற்றும் பனையின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவை என எங்காவது படித்திருப்பீர்கள். படிக்காது இருந்தால் இன்று அறிந்து கொள்ளுங்கள். பனை மற்றும் தென்னைகள் இருக்கும் காலமெல்லாம் பயன் கொடுக்கும். ஆம் மொட்டை பனை தென்னைகள் கூட பறவைகள், பாம்புகள் வாழ்விடமாக இருக்கும். 

Friday, 13 November 2015

நேரு எட்வினா நேசம்

                       
திருமங்கலம் இலக்கியப்பேரவை சார்பாக “இலக்கியத்தில் நட்பு” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்தனர். அதில் என்னையும் சேர்த்து பலர் இதே தலைப்பில் பேச இருப்பதாக கூறினர். நட்பு என்ற தலைப்பில் பலருடன் ஒருவராக பேசுவது என்றவுடன் தயங்கினேன். பின்பு அனைவரும் பேசும் தலைப்புகளை பார்த்த பொழுது  ஆண் பெண் நட்பு குறித்த இலக்கிய உரை இல்லாதது கண்டேன். இன்று நாம் நவநாகரீக தேவைகள் அதிகம் உள்ள உலகத்தில் வாழ்கிறோம். இது குடும்பத்தில் ஆண் பெண் இருவரும் பணம் ஈட்ட வேண்டிய தருணம். இதில் பெண்கள் நாளும் பல குணாதிசிய ஆண்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுக்கிடையே  எப்படி நட்பு கொள்வது மற்றும் நட்பினை தொடர்வது என்று அவசியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு “நேருவின் நட்பு” என தலைப்பில் பேசுவதாக பெயர் கொடுத்து உரையாற்றினேன். அதன் தொகுப்பினை கட்டுரையாக நமது உழைப்பாளி தளத்தில் வெளியிடுகிறேன். படித்து கருத்துரையிடவும்.

Tuesday, 10 November 2015

சமணம் தந்த தீபாவளி


இந்தியாவிலிருந்து தன் கொள்கைகளால் உலகம்  கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அதில் மகாவீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தின் மலைகள் தோறும் மகாவீரரின் சிலைகளை காணலாம். இவர் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கராவார். இவர் சமண சமயத்தின் உள்ளடக்க கருத்துகளை வழங்கிய சீர்திருத்தவாதியாகும். மகாவீரர் வர்த்தமானர் என அழைக்கப்பட்டார். பீகார் மாநிலம் வைசாலி அருகே உள்ள குந்திகிராமா என்ற நாட்டின் இளவரசராக பிறந்தார். அரசன் அரசியான சித்தார்தர் திரிசாலாவின் செல்லக்குழந்தையாய் வளர்ந்தார். தனது 30வது வயதில் அரசாட்சி துறந்தார்.


Wednesday, 21 October 2015

வரிச்சூர் குடைவரை 2


மதுரை, வரிச்சூர் இயற்கை சார்ந்த சூழல் உலாவில் மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன்.  சமணச்சின்னம் ம.குன்னத்தூர் என்ற அரசு விளம்பரப்பலகை கண்டு நின்றோம். அங்கிருந்து பார்த்த பொழுது இயற்கையான பெரிய குகைத்தளம் இருந்தது. குகையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான படுகைகளும், மருந்து தயாரிக்க பயன்படுத்திய குழிகள் இருந்தன. குகையின் மேல் நெற்றிப் பகுதியில் மூன்று பிராமி கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இந்த பிராமிகல்வெட்டுக்கான விளக்க பலகை ஒன்றும் உள்ளது. இங்கு தங்கியிருந்த சமணர்களுக்கு நூறுகலம் நெல் வழங்கியதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. நூறுகலம் நெல் வழங்கப்பட்டது என்றால் குறைந்தது சுமார் 50 சமணர்கள் தங்கியிருக்கலாம்.

Friday, 16 October 2015

வரிச்சூர் குடைவரை


மதுரை என்றாலே மல்லுகட்டு. அதுவும் வரிச்சூர் என்றவுடன் பிரபல ரவுடியின் அடைமொழி என தமிழகம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால் உண்மையில் வரிச்சூர் நான்கு வணங்குதளத்தினை அருகருகே  பெற்ற புண்ணியபூமி. வரிச்சூர் மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி செல்லும் பாதையில் அமைந்துள்ள அழகிய கிராமம். திருமங்கலத்திலிருந்து வரிச்சூர் சென்று குடைவரையை ரசிக்க நான்கு பேர் கொண்ட குழு பயணித்தது. பிரபல பறவையாளர் சலீம் அலி இருசக்கர வாகனப்பிரியர். தனது பெரும் பறவை கண்டுபிடிப்புகளை இருசக்கர வாகனப்பயணத்திலேயே கண்டதாக கூறியுள்ளார். அதனால் நாங்களும் இருசக்கர வாகனத்தில் அதிகாலை பொழுதில் கிளம்பினோம். கிராமங்கள் வழியாக பயணிப்பதே இனிமை. 

திருமங்கலத்திருந்து பி.கே.என் கல்லூரி, விடதக்குளம், விருசங்குளம், ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், வளையபட்டி வழியாக அவனியாபுரம் வந்தடைந்தோம். அதிகாலை பொழுதினை கிராமங்களில் குளிப்பதற்கு வெந்நீர்  போடுவதும் வயலுக்கு செல்வதுமான காட்சிகள் தொடர்ந்தன. அவனியாபுரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து பயணிகளை இறக்கிவிடும் பகுதிக்கு ஊர்ந்துகொண்டிருந்தது.  காலை பொழுதிலும் நெடுஞ்சாலை பயணிகள் பலர் கார்களை நிறுத்தி விமானம் பார்த்து கொண்டிருந்தனர்.

Saturday, 12 September 2015

குல்லூர் சந்தை அணை


வெயில் என்றவுடன் ஞாபகம் வரும் இடம் விருதுநகர். பல நகரங்களில் சமீப காலமாக தான் அனைத்து தெருக்களும் சிமெண்ட் ஹாலோ பிளாக்களுக்கு மாறி வருகின்றன. ஆனால் விருதுநகர் தெருகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட்க்கு மாறி விட்டன. இதன் காரணமாகவும் வெயிலின் தாக்கம் அதிகம். அத்தோடு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே சென்று விட்டது.  சூரியன் கிழக்கில் உதிப்பதாக பள்ளியில் படித்தாலும் விருதுநகரில் உதிப்பதாகவே நான்  எண்ணிவருகிறேன். வியாபாரம் என்றால் விருதுநகர் அதே சமயம் வறட்சி என்றாலும் விருதுநகர் என்றே பெயர் பெற்றுவிட்டது. இங்கே ஒவ்வொரு தேர்தலிலும் குடிநீர் பஞ்சம் தீர்ப்பதாகவே சொல்லி ஓட்டு வேட்டையாடுவர் அரசியல்வாதிகள். தமிழகம் முழுவதும் நடைபெறும் நடைமுறை தான் என்கிறீர்களா? ஆம் இங்கே கொஞ்சம் ஜாஸ்தி.

Saturday, 30 May 2015

மா மதுரை


மதுரை இந்த வார்த்தையை கேட்டவுடன் உணர்ச்சி பெருமிதத்துடன் புலகாங்கிதம் அடைவேன். மதுரைக்காரன் என்ற பெருமை என் மனதில் எப்பொழுதும் ஒரு மமதையே ஏற்படுத்தும். மதுரையை பற்றி தவறாகவும், சாதிய மேட்டிமை கொண்டது என்றாலும் கண்டிப்பேன். தமிழகம் முழுவதற்குமான நிலையே மதுரையிலும் தொடர்கின்றது. எம்.ஏ வரலாற்று மாணவனாக மதுரையின் தளவரலாறு படிக்கையில் மகிழ்வுற்றேன். பசுமைநடையின் வாயிலாக மதுரையின் மூளை மூடுக்கெல்லாம் உள்ள தொல்லியல் தலங்களை கண்டு ரசித்துள்ளேன். பசுமைநடை, மதுரையை மேலும் காதலிக்க செய்தது. மதுரையின் பெருமை பற்றி கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் மதுரையின் தரவுகள் முடிவுறாத விசயமாகும். அமுதசுரபியாக இன்னும் பல புதிய விசயங்கள் நாளும் அறிந்து வருகிறேன்.

அந்த வரிசையில் பாண்டிய வரலாற்று ஆய்வு மையம் சார்பாக “மாமதுரை “ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுவது அறிந்தேன். அய்யா சாந்தலிங்கம் மற்றும் இராசேந்திரன் இணைந்து மதுரையை குறித்து புத்தகம் படைத்து இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். 

Tuesday, 19 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 4 ?


தமிழக கேரள மாநில கண்ணகி அறக்கட்டளையினரின் கூட்டுகூட்ட முடிவின் படி தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் மூன்று பானை பொங்கல் மட்டும் வைத்தனர். ஆனால் கேரள தரப்போ மூன்று பானை பொங்கலை கண்ணகி கோவிலுக்கு அருகிலும் தனியாக மிகப்பெரிய சட்டியில் தனி பொங்கல் ஒன்றையும் வைத்தனர். தமிழக தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க கேரள காவல்துறையும், வனத்துறையும் ஏதுமே நடக்காது போல் தமிழகத்தரப்பினரை அந்த இடத்திலிருந்து நகர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். உடன் தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் செய்தியாளர்களிடம் புகார் தெரிவிக்க அனைவரும் சென்று புகைப்படம் எடுத்தனர். கேரள தரப்போ புகரர் கொடுங்கள், புகைப்படம் எடுங்கள். எங்களுக்கு கேரள காவல், வனத்துறையினர் சப்போர்ட் உள்ளது என ஏளனமாக பார்த்தனர்.

பொங்கல் வைத்து கொண்டு இருக்கும் கேரளா கண்ணகி அறக்கட்டளையினரிடம்  பேச்சு கொடுத்தோம். அவர்களிடம் கண்ணகி கோவிலுக்கான கோரிக்கை தங்கள் அமைப்பின் முயற்சி என்ன? என்பது குறித்து கேட்ட பொழுது அவர்கள் தமிழக தரப்பின் கோரிக்கைகளையே அப்படியே முன்மொழிந்தனர்.

Wednesday, 13 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 3 ?


மக்கள் வெள்ளம் கோவிலுக்குள் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர். செய்தியாளர்களுடன் மக்கள் வெளியேறும் பாதை வழியாக கோவிலுக்குள் நுழைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. சுற்றுச்சுவர்கள் நல்ல பெரிய சைஸ் கற்களால் ஒன்று சொன்னது போல் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது. சுற்றுச்சுவருக்குள் மூன்று சிறிய அளவிலான மண்டபமும் ஒரு மண்டபத்திற்கான பேஸ்மட்டமும் ஆக நான்கு தனி மண்டபங்கள் இருந்தன. 

எந்த மண்டபத்தின் மேலும் கோபுரங்கள் இல்லை.  பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்திருந்தது. சினிமா சூட்டிங் செட் ஏற்பாடு போல் சிதிலமடைந்த கோவில் கோபுரங்கள் மேல் மஞ்சள் துணிகள் கட்டப்பட்டிருந்தன. கோவில் போன்ற தோரணைகள் ரெடிமேடாய் இருந்தது பார்த்ததும் புலனாயிற்று. ஏராளமான பக்தர்கள் கொண்ட  இக்கோவிலை இப்படி கவனிப்பாரற்று சேதமடைய வைத்துள்ளனரே என எண்ணி வருந்தினேன்.

Monday, 11 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 2 ?


கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு குமுளியில் ஜீப் பாஸ்  வாங்கி பயணத்தினை தொடர்ந்தோம். குமுளியே கேரளத்து காவல்துறையாலும் பக்தர்களாலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. வரிசையில் நின்று பக்தர்கள் ஜீப் வாகனத்தில் ஏறினர். ஏறினர் என்பதை விட பொதி மூட்டைகளை போன்று ஏற்றப்பட்டனர். செய்தியாளர்கள் ஜீப்பில் 9 பேர் பயணிப்பதே நெரிசலாக இருந்தது. பக்தர்கள் சுமார் 12பேருக்கு மேல் ஒரு ஜீப்பில் பயணித்தால் நிலையை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள்.

புலிகள் காப்பக வனப்பகுதியில் நுழையும் பொழுதே கேரள வனத்துறையினரால் ஜீப் நிறுத்தப்பட்டது. செய்தியாளர்கள் வாகனம் என்றவுடன் உள்ளே எட்டி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் ஏதுமில்லையே என்ற கேள்வியோடு செல்ல அனுமதித்தனர். பக்தர்களின் பைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டது. விபூதி பாக்கெட்கள் கூட பிளாஸ்டிக் என நிராகரிக்கப்பட்டது. பக்தர்களை ஜீப்பிலிருந்து இறக்கி ஒவ்வொருவராக  தனிநபர் சோதனை செய்யப்பட்டு பின் ஜீப்பில் ஏற்றி அனுப்பினர்.
ஆங்காங்கே மருத்துவ பரிசோதனை மையமும் திறந்திருந்தனர்.

Thursday, 7 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா? 1



திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் எனது அம்மா  . எனது அப்பாவிற்கு மதுரை. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வரும் பொழுதெல்லாம் கண்ணகி வம்புக்கு இழுக்கப்படுவாள். எங்க கண்ணகி உங்க ஊரு எரிச்சது தான் சரி என்றும் மீண்டும் கண்ணகி வரவேண்டும் எனவும் கூறுவார் அம்மா. அப்பாவோ நான் கோவலனா நடந்துகிடாமா போனது தப்பு தான் என அவரும் அவர் குறைகளை கூறுவார்.  ஆம்பளபிள்ளைகள் தான் எப்பவும் அம்மா சைடு தானே. அதனால் எனக்கு  சிறுவயதிலேயே கண்ணகி பிடித்து போய்விட்டாள். கலைஞரின் பூம்புகார் திரைப்படம் வாயிலாக கண்ணகியின் கஷ்டம்  அறிந்து கண்ணீர் விட்டவன் நான். இலக்கிய ஞானத்தில் சிலப்பதிகாரம் பயின்று கண்ணகியை தெரிந்தவர்கள் ஒரு சிலரே. சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் நீதிக்கு போராடி  சேர நாட்டவர்களால் பாடப்பெற்றவள் கண்ணகி. இன்று  கேரளம், இலங்கை பகுதிகளில் ஒருசில மக்களாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் கடவுளாக வணங்கப்படுகிறாள். கண்ணகிக்கு இலங்கையில் 60க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் கண்ணகிக்கு குறிப்பிடதக்க வகையில் கோவில் இல்லை. பல மலைவாழ்ப்பகுதிகளில்  பத்தினி தெய்வ வழிபாடு இருக்கின்றது. பத்தினி தெய்வ  நாட்டார் தெய்வங்களில்   பல கண்ணகியாகவே பார்க்கப்படுகின்றது.

Sunday, 3 May 2015

தப்புமா தாண்டிக்குடி ?


ஊர் சிறப்பு:-
தாண்டிக்குடி கடல் மட்டம் 3500 அடி உயரத்தில் 3500 ஆண்டுகால பழமையான  சின்னங்களை கொண்டது. இப்பகுதி மக்கள் முருக கடவுளின் ஆதிதளம் தாண்டிக்குடி என்கின்றனர். முருகன் இம் மலையிலிருந்து தாண்டிக்குதித்து பழனிமலை ஐ அடைந்ததாக ஐதீகம். தாண்டிக்குதி என்பது மருவி தாண்டிக்குடி என மாறியதாம். மனிதர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு சித்தர்கள் கண்டுபிடிப்பு காயகல்பம். காயகல்பம் தயாரிப்பில் மிக முக்கிய இடம்வகிப்பது தாண்றிக்காய். தாண்றிக்காய் அதிகமாக விளைந்ததாலும் இப்பகுதிக்கு தாண்டிக்குடி பெயர் காரணமாம். இப்பகுதி மக்கள் கண்ணகி மதுரையிலிருந்து கிளம்பும் பொழுது மூத்தன் முதுவன் என்ற கூட்டத்தினரை அழைத்து வந்து இப்பகுதியில் குடியமர்த்தியதாயும் பெருமை கொள்கின்றனர்.


Thursday, 12 February 2015

சிவரக்கோட்டை சிங்கம் 2



அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கடந்த 2014 ம் “ஆண்டின் சிறந்த மனிதர்” விருதினை அறிவித்துள்ளது. விருதானது எபோலா பாதித்தவர்களுக்கு மருத்துவ சேவை அளித்த மருத்துவக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மனிதர் விருதிற்கான இணைய வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுமைக்குமான பிரபலங்கள் இருந்தனர். ஆனால் விருதானது தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய எபோலா மருத்துவக்குழுவிற்கு வழங்கியது டைம். எபோலா மருத்துவக்குழுவினை  வாழ்த்துவோம். வாஷிங்டன் செய்தி பார்தோம் சரி அப்ப நாம வாசிக்கும் ஆனந்தவிகடன் பத்தியும் பாப்போம் வாங்க.  2014 டாப் 10 மனிதர்கள் விருது ஆனந்தவிகடனும் வழங்கியுள்ளது.

நமது சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யாவிற்கு விகடன் இதழ் தமிழகத்தின் டாப் 10 மனிதர் விருது வழங்கியுள்ளது.  இவ்விருதினை எளிதில் பெற்றுவிட வில்லை அய்யா அவர்கள். சிவரக்கோட்டையினை சிங்கப்பூராக மாற்ற போவதாக அரசு அறிவித்தது. அதற்கு 1478 ஏக்கருக்கு சிறிய,நடுத்தர பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவ உள்ளதாக அறிவித்து விவசாய நிலங்களை அரசே கையகப்படுத்தும் சூழ்நிலையை சென்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள். 

Thursday, 5 February 2015

சிவரக்கோட்டை சிங்கம் -1


சூரியன் எத்திசையிலிருந்து உதிக்கின்றது என என்னிடம் கேட்டால் எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் அது விருதுநகரிலிருந்து தான் என அடித்துக்கூறுவேன். எப்பொழுதுமே நம்ம ஊரு நமக்கு சொர்க்கம் தான். மனைவியின் ஊரு மட்டம் தான். எங்கள் வீட்டு பெண்களான அம்மா, மனைவியின் பிறப்பிடம் விருதுநகர். என் அப்பாவின் வழிநடத்துதல் காரணமாக சிறுவயது முதலே விருதுநகர் என்றாலே எட்டிக்காய் தான்.


திருமங்கலம் விருதுநகர்  பாதையில் சிவரக்கோட்டையை சாலைப் பயணங்களில் பார்த்தது தான். ஊருக்குள் சென்றது இல்லை. சென்று பார்க்கும் ஆர்வமும் எப்போதும் இருந்ததும் இல்லை. சென்ற நவம்பர் மாதத்தில் பறவைபார்வையிட சிவரக்கோட்டைப்பகுதி என அழைப்பு வந்தது.

Monday, 19 January 2015

படையல் ருசிச்சு பாரு

சென்னையில் புத்தகக்கண்காட்சி துவங்கி வாசிப்பின் அவசியத்தினை தமிழ் உலகிற்கு அறைகூவல் கொடுத்து வருகின்றது. தமிழ் எழுத்து உலகமே தனது படைப்புகளை சென்னை நோக்கி திருப்பி கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஓர் நிகழ்வு. மதுரை செக்கானூரனியில் காலை சூரியன் தனது கதிர்களை விரிக்க துவங்கிய தருணத்தில் நெற்கதிர்கள்  விளைந்த வயல்வெளிக்கு நடுவே கதிர் பொங்கல் மலர் 2015 “படையல்” வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் மதப்பண்டிகைகளான தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கலுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதிக நாட்கள் பொங்கலுக்கு அரசு விடுமுறை விடப்பட்டாலும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை. பத்திரிக்கை உலகமும் தீபாவளி மலருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கல் மலருக்கு கொடுப்பதில்லை. தற்பொழுது அந்த நிலை சற்று மாறி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் மலர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உறுதி எடுத்ததன்  பலனாய் உதித்தது தான் கதிர் பொங்கல் மலர். புதிதாக எழுத துவங்கிய திருமங்கலம் இலக்கிய சகோதரர்களிடம் படைப்புகளை பெற்று அதனை வெளியிட்டது மேலும் சிறப்பு.  

Friday, 16 January 2015

பொங்கல் விழா


இயற்கை செல்வங்கள் வழங்கிய கொடைகளுக்கு கைமாறு பொங்கல். நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா சற்றே இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. தங்களின் தாத்தாக்களின் தாத்தா வாழ்ந்த கிராமங்களை பற்றி நகரத்தினர் யாரும் நினைக்கக்கூட நேரமில்லை. நாம் உண்ணும் உணவினை கொடுக்கும் உழவர்கள் வாழும் உன்னதமான கிராமத்தினையும், வயல்வெளிகளையும் பார்வையிடும் எண்ணம் கூட நம் நகர மக்களிடம் இல்லை. நகர மக்கள் பலரும் தங்கள் பகுதிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தினை கூட காண செல்வது இல்லை. கிராமங்களைப் பற்றி கேட்டதினையும், படித்ததினையும், திரைப்படங்கள் மூலமும் கிராமம் என்றால் இப்படி தான் என்று நினைத்து வாழ்ந்து வருகின்றனர். கிராம மக்களும் தங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக உருவாகும் நகரங்களின் மாதிரிகளை கொண்டு தங்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகரின் தொண்மையான பகுதிகளுக்கு அழைத்து சென்று அதன் வரலாற்றினை உலக அறிய செய்யும் அமைப்பு பசுமைநடை இது தாங்களறிந்ததே.

Friday, 2 January 2015

பூவே பூச்சூடவா



பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா? இந்த கேள்விக்கான விடையை கடவுள் முதல் கடைகோடி மனிதன் வரை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி நாம் அறிந்தது. சங்கஇலக்கிய நூல்கள்  பெண்கள் கூந்தல் குறித்து பலகாவியங்கள் படைத்துள்ளன. பெண்கள் கூந்தல் பேணுதல் ஒரு தனி கலையே. நறுமண எண்ணெய் தடவி வகிடெடுத்து சடை பின்னி மலர்கள் சூடுதல் அப்பப்பா.. அழகிற்கு அழகு சேர்த்தல் இது தானோ? இம் மண்ணுலகில் மலருக்கு மயங்காதவர் யார் உளர்? பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் காஷ்மீர் மலர்களுக்கு பெயர் போனது.
ஆனால் அங்கு பெண்கள் மலர்களை பெருமளவில் சூடுவதில்லை. கேரளாவில் ஓனம் பண்டிகையின் பொழுது மகாபலி அரசர் வருகைக்காக மலர்களைக் கொண்டு தரைகளையே அழகுபடுத்துவர். தமிழகத்தில் மட்டும் தான் சென்ற நூற்றாண்டுகளில் ஆண்களும், பெண்களும்  கூந்தல் வளர்த்து மலர் சூடியுள்ளனர்.