ஊர்
சிறப்பு:-
தாண்டிக்குடி
கடல் மட்டம் 3500 அடி உயரத்தில் 3500 ஆண்டுகால பழமையான சின்னங்களை கொண்டது. இப்பகுதி மக்கள் முருக கடவுளின்
ஆதிதளம் தாண்டிக்குடி என்கின்றனர். முருகன் இம் மலையிலிருந்து தாண்டிக்குதித்து பழனிமலை
ஐ அடைந்ததாக ஐதீகம். தாண்டிக்குதி என்பது மருவி தாண்டிக்குடி என மாறியதாம். மனிதர்களின்
ஆரோக்கிய வாழ்விற்கு சித்தர்கள் கண்டுபிடிப்பு காயகல்பம். காயகல்பம் தயாரிப்பில் மிக
முக்கிய இடம்வகிப்பது தாண்றிக்காய். தாண்றிக்காய் அதிகமாக விளைந்ததாலும் இப்பகுதிக்கு
தாண்டிக்குடி பெயர் காரணமாம். இப்பகுதி மக்கள் கண்ணகி மதுரையிலிருந்து கிளம்பும் பொழுது
மூத்தன் முதுவன் என்ற கூட்டத்தினரை அழைத்து வந்து இப்பகுதியில் குடியமர்த்தியதாயும்
பெருமை கொள்கின்றனர்.
தமிழகத்திற்கு
இயற்கையின் மிகப்பெரிய கொடை மேற்கு தொடர்ச்சி மலை. இம்மலையின் இயற்கை அழகினை இன்று
ஓரளவேனும் அச்சு அசலாக மிச்சம் காண சிறந்த இடம் தாண்டிக்குடி.. கொடைக்கானல் செல்லும்
வழியிலிருந்து வலப்பக்கமாக பிரிந்து 35கிமீ தொலைவில் உள்ளது. மலைத்தேன், காய்கறி, கனி
வகைகள் என செழிப்பாக வளரும் பகுதி. ஊரின் செழிப்பினையும் இயற்கை வளத்தினையும் எனது
புகைப்படம் வாயிலாகவும் நீங்கள் அறியலாம்.
கற்பதுகைகள்:-
3500
ஆண்டுக்கால பழமையான கற்பதுகைகள், கற்திட்டைகள் அதிகமாக காணப்படும் பகுதியாக தாண்டிக்குடி
உள்ளது. கற் பதுகை, கல் வட்டம், குடைக்கல் போன்றவை பெருங்கற்காலத்தில் நிலவிய சவ அடக்க முறையாகும்.தாண்டிக்குடியின்
பூர்வக்குடி மக்களின் கலைநயத்தினை கற் பதுகைகளின்
அமைப்பு, அதனுள் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஓவியங்கள் மூலம் அறியலாம். சுமார் இரண்டு
டன் எடையினை கொண்ட கற்களை பயன்படுத்தியதிலிருந்து அப்பகுதி மக்களின் உடல்வலுவின் தரத்தினை
தெரிந்துகொள்ளலாம். கற் பதுகையினுள்ள ஓவியங்களில் ஒட்டகங்கள் அமைந்து இருப்பது சிறப்பாகும்.
இம்மக்கள் மேற்கு தொடர்ச்சி மலை முழுமைக்கும் பயணங்கள் மேற்கொண்டதற்கு சான்றாக அமைந்துள்ளது.
ஊர்
மக்கள் நிலை:-
முன்னோர்
காலத்தில் இயற்கை வனமாக சிறந்து விளங்கியது தாண்டிக்குடி. மக்களும் இங்கு கிடைத்தவைகளை கொண்டு ஆரோக்கியமாக
வாழ்ந்தனர். ஆங்கில ஆட்சியில் ஆட்சியாளர்கள் ஓய்வெடுக்கும் பகுதிகளாக மாறியது பழனிமலை
என்றழைக்கப்படும் இப்பகுதி மேற்கு தொடர்ச்சி
மலை. அவர்களால் வனங்கள் வியாபாரமாக்கப்பட்டன. வனச்சட்டங்களை நிறைவேற்றி கொஞ்சம் கொஞ்சமாக
ஆட்சியாளர்கள் பிடியில் சிக்க வைத்தனர். இவர்களும் பணப்பயிர்களான ஏலம், தேயிலை, மிளகு உற்பத்திக்கு நல்ல விலை கிடைக்க அவர்களின் மாய வலையில்
சிக்கினர். ஒரு காலத்தில் எண்ணெய், உப்பு, புளி தவிர்த்து அனைத்தும் கிடைக்கும் இடமாக
தாண்டிக்குடி செழிப்புடன் இருந்தது. முதலில் ஏலத்தையும் பின்பு வாழையும் அதற்கு பின்பு
காப்பியும் வளம் கொடுக்கும் என நம்பினர்.
பசுமைபுரட்சியின் வேதிஉரங்களால் நிலங்களின் உற்பத்தி திறனை குறைத்து வாழ்க்கை தரத்தினையும் குறைத்து கொண்டனர். தற்பொழுது கொடைக்கானல் பகுதியினை வன உயிரியல் சரணாலயமாக மாற்றம் செய்வதன் மூலம் மேலும் அடிமைகளாகி விடுவோம் என அச்சப்படுகின்றனர் பகுதி வாழ்மக்கள். வன உயிரியல் சரணாலயம் அமையும் பட்சத்தில் வன விலங்குகளை கவரும் மா, பலா, வாழை, கரும்பு பயிரிட அரசு விடாது. இப்பயிர்களை பயிரிட்டவர்கள் மாற்று பயிர் செய்கையிலும் அரசிடம் அனுமதி பெறவேண்டும். மலை ஆற்றுப்படுகைகளில் விவசாயம் செய்யக்கூடாது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து நடமாட்டம் கூடாது. வீட்டு வளர்ப்பு பிராணிகள் வளர்க்கக்கூடாது. உரங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும். இப்படி சட்டங்களால் தாங்கள் செய்து வரும் சிறிய அளவிலான விவசாயமும் நிறுத்தப்பட்டுவிடும் என அஞ்சி நடுங்குகின்றனர்.
தற்பொழுதே தாண்டிக்குடியில்
அரசு மற்றும் வனதுறையினரின் ஆட்டமும் கபளீகரமும்
தாங்க முடியா நிலையில் உள்ளது. வன உயிரியல் சரணாலயம் என அறிவிக்கப்பட்டால் இன்னும் நிலைமை மோசமாகும். அரசும்
வனதுறையினரும் வன வளர்ச்சியுடனே விவசாய வளர்ச்சியினை பற்றி சிந்திக்க வேண்டும்.
கற் பதுகைகளை காண சென்ற வழியில் வரிசையாக குடிசைகள் காணப்பட்டன. அவைகளை விசாரிக்கையில் பளியர் இன மக்கள் குடியிருப்பு என்றனர். மேலும் விசாரிக்கையில் வனத்துறையினர் இவர்களுக்கு சொந்தமான பல லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளை எடுத்துக்கொண்டு இங்கே குடியமர்த்தியுள்ளதாக அறிந்து கவலையுற்றேன். சென்ற பிரதமர் விவசாயிகளிடத்தில் விவசாயத்தினை விடக்கோரினார், தற்போதைய பிரதமர் வளர்ச்சியின் பெயரால் விவசாயிகளை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூலிகளாக மாற்றும் நடவடிக்கையை தொடர்கின்றார். இந்தியாவில் விவசாயி என்றால் கஷ்டங்களையும் பாதிப்புகளையும் அனுபவிக்காமல் இருப்பது தானே ஆச்சர்யம் என்கிறீர்களா? ஆம். தொடர்ந்து கவலை தரும் நிகழ்வாக படிக்கும் தங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை தரும் பகுதி கீழே….
பசுமை
நடை:-
தாண்டிக்குடி
பயண பசுமைநடையினை கடந்த ஏப்ரல் 24 அன்று தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு
செயலில் இறங்கியது. 25ந் தேதி அதிகாலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில்
இருந்து ஒரு பஸ் நிரம்ப குடும்ப சகிதமாக பசுமைநடையினர் தாண்டிக்குடி கிளம்பினர்.
மழை
சாரலுடனே நானும் இணைந்து கொண்டேன். வத்தலகுண்டுவில்
தேநீருக்கு நிறுத்தப்பட்டது போக நேராக தாண்டிக்குடி கற்பதுகைகள் இடம் நோக்கி சென்றடைந்தோம்.
அழகு அழகு எங்கு நோக்கினாலும் அழகு. மாலை தாண்டிக்குடி பகுதி விவசாயிகள் சந்திப்பு.
விசமிகளின் கையில் அரசு இருக்கையில் விவசாயி
விரக்தியில் விசும்ப தானே வேண்டும். நடைக்கு வந்திருந்தவர்களும் நானும் ஏதாவது
இவர்களுக்கு செய்யதான் வேண்டும் என்ற மன நிலைக்கு சென்றோம்.
26ந் தேதி காலை தாண்டிக்குடி அரசுப்பள்ளி
வளாகத்தில் பசுமைநடை சார்பாக புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
அரசு அதிகாரிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இப்புகைப்பட கண்காட்சி நிரந்தரமாக
தாண்டிக்குடி வரும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. இரண்டு நாட்களும்
தாண்டிக்குடியின் இயற்கை அழகினை கண்டு மயங்கினோம். திரும்பும் இடமெல்லாம் வியப்பு வசீகரம்
பறவைகள் என புகைப்படக்கருவிக்கு வேலை கொடுத்த படியே ரசித்து மகிழ்ந்தேன்.
மதுரையில்
கிரனைட் கொள்ளைகளை ஊடகங்கள் வாயிலாக மட்டும் பெரு வாரியான பொதுமக்கள் கண்டனர். ஆனால்
பசுமைநடை மலைகளின் தொன்மைகளை அறிய அறைகூவல்
விடுத்து கொள்ளைகள் நடந்த இடங்களுக்கே சாமானிய மக்களை அழைத்து சென்ற பெருமை உடையது.
தனது சாமார்த்திய போராட்ட களத்தால் மலை முழுங்கி
மகாதேவர்கள் கம்பி எண்ண வேண்டிய நிலைக்கு தள்ளியது.
இன்றைய தினத்தில் போராட்ட களத்திற்கு
குடும்பத்துடன் கலந்து கொள்வது அரிது. ஆனால் பசுமைநடை தனது ஒவ்வொரு நடை பயணமும் சுற்றுலாவுடன்
கூடிய போராட்ட களமாக கொண்டுள்ளது. ஒருபுறம் இயற்கை சூழலியலை காக்க பசுமைநடை போன்ற அமைப்புகள்
அறை கூவல் விடுத்தாலும் மலையின் இயற்கை சூழல்கள் நாகரீகத்தின் பெயராலும் அரசாலும் சூறையாடப்பட்டு
வருகிறது. தப்புமா தாண்டிக்குடி? வஹாப்
ஷாஜஹான்,
திருமங்கலம்.
No comments:
Post a Comment