Sunday 11 December 2022

கிளியோபட்ரா கிளுகிளு செண்ட்

 


தொலைக்காட்சி விளம்பரத்தில் தேவ தான் தேவ தான்  டியோடர் உடைய எக்ஸ்ட்ரா பாதுகாப்புஎன்று ஒரு ஆண்டி, வயது பையனை பார்த்து ஐடியா மழையை கொட்டுவதை பார்த்திருப்போம். வாசனைப்பொருட்களின் விளம்பரம், முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. சென்ற காலங்களில் வெளிநாடு சென்று திரும்புபவர்களிடம் சரக்கு பாட்டிலோடு சேர்த்து செண்ட் பாட்டில் கேட்பது தான் நமது முக்கிய கோரிக்கையாய் இருக்கும். செண்ட் பாட்டில் கிடைப்பதும் பயன்படுத்துவதும் அதிசயமாக தான் இருக்கும். செண்டை பல பகுதிகளில் சில மைனர்(குஞ்சு)கள் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் தற்பொழுது தண்ணீர் பற்றாகுறையும், மக்கள் தொகை பெருக்கமும், சூடேறிய மாசான பூமியில் கப்பு அதிகரித்து கப்சிப்ன்னு வாசனை திரவியங்களை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. 


மனிதகுலம் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பே சிரியாவில் வாசனை திரவியங்களை பயன்படுத்தியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.இறந்த சடலங்களை மம்மிகளாக பதப்படுத்தும் எகிப்தில் கி.மு 3000லேயே வாசனை திரவியங்கள் தயாரித்ததாக கூறுகின்றனர்.

நான்சும்மா அடித்து விடுவதாக எண்ண வேண்டாம்.

ஹைரோகிளிஃபிக்ஸ் (hieroglyphics) பற்றி கேள்வி பட்டதுண்டா?  ஒரு படமானது குறிப்பிட்ட சொல்லை அல்லது செயலை விளக்குவது ஹைரோகிளிஃபிக்ஸ்  என்பர். பள்ளி பருவத்தில் படம் பார்த்து கதை சொன்னவர்கள் தானே நாம். இது தானே எனக்கு முன்னமே தெரியுமே என்கிறீர்களா. சரி தொடர்வோம். எகிப்தை ஆட்சி செய்த  பாரோ மன்னர்கள் இறந்த பின்பு அவர்களது உடல்கள் மம்மிகளாக மாற்றி பாதுகாக்கப் பட்டன.  மன்னர்களின் ஆட்சி வரிசை கிரகப் படி  மம்மிகள் அமைத்து அதனை சுற்றி  மிகப்பெரிய பிரமிடுகள் அமைத்தனர். பிரமிடுகளுக்குள் மம்மிகளுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்திருத்தனர் எகிப்தியர்கள். இந்த பொருட்கள் விலை உயர்ந்ததாக இருந்ததால் பலகாலமாக கொள்ளையர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து வந்தனர்.  தற்பொழுது நடைபெறும் பிரமிடுகள் குறித்த தொல்லியல் ஆய்வில் பிரமிடுகளுக்குள் கிடைப்பவைகள் விலை உயர்ந்த தங்க வைர முத்துகளின் புதையல்கள் மட்டுமல்ல. எகிப்தின் ஆதி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்த தகவல் சுரங்கங்களாக பிரமிடுகள் பரினமிக்கின்றன. பிரமிடுகளின் உட்புற சுவர்களில் பல வண்ண ஒவியங்களும் ஹைரோகிளிஃபிக்ஸ்களும் அமைந்துள்ளன.


அந்த வரிசையில் வாசனை திரவியம் குறித்த ஹைரோகிளிஃபிக்ஸ்  ஆனது கிஃபி என்ற ஐந்தாவது மற்றும் ஆறாவது பாரோமன்னரின் வம்சாவளி மம்மிகள் இருக்கும் பிரமிடில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த  ஹைரோகிளிஃபிக்ஸ்  கி.மு 2616 முதல் கி.மு 2181 காலகட்டத்தை சேர்ந்தவை என கணித்துள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த காட்சியில் (கிளிஃபிக்ஸ்ஸில்)    இரண்டு பெண்கள் மிகப் பெரிய ஜாடியில் வாசனை திரவியத்தை காய்ச்சி இறக்க முயற்சிப்பது போன்றுள்ளது.  மேலும் சில  பணியாளர்கள் வாசனை திரவிய தயாரிப்பு மூலப் பொருட்களை கொண்டுவருவது போன்று காட்சி அமைந்துள்ளது. இந்த காட்சியில் வாசனை திரவிய மூலப் பொருட்கள் முழுவதும் விரிவாக கிடைக்காவிட்டாலும்  வாசனைப் பொருள் தயாரிப்பு குறித்த விளக்கமாக அமைந்துள்ளது



இது போதாதா நமது மேலைநாட்டு தொல்லியல் அறிஞர்களுக்கு கோடு போட்டால் தான் ரோடே போட்டுவிடுவார்கள் தானே.  பழம் பெருமை வாய்ந்த ஹவாய் பல்கலை கழக பேராசியர்கள் ராபர்ட் லிட்மேன் மற்றும் ஜே சில்வர்ஸ்டெய்ன் என்ற இரண்டு பேராசிரியர்கள்  இணைந்து அக்காலத்து கிரேக்க வாசனை திரவியத்தை மீட்க முயற்சி செய்தனர். இந்த ஆய்வில் உலகின் வாசனை திரவியங்கள் குறித்த பெரும் ஆராய்ச்சி பேராசிரியர்களான ஜெர்மனியைசேர்ந்த  டோரா கோல்ட்ஸ்மித் மற்றும் சீன் கோக்லின் உடன் கைகோர்த்தனர். மதுபான கூடத்தில் சிறந்த பார் டெண்டர் கிடைத்துவிட்டால் அன்றைய காக்டெயில் எப்படி நம்மை துள்ளி விளையாட செய்யும். அது தான் அங்கும் நிகழ்ந்தது. அமெரிக்க மற்றும் ஜெர்மன் கூட்டுணைவு எகிப்தின் ஆதி கிளுகிளு வாசனையை திரும்ப செய்து நமது வியர்வை கப்பர்களின் வயிற்றில் பால் வார்த்தனர். பாலா? ஆம் அதுவும் கழுதை பால். தங்களது கண்டுபிடிப்பின்  இறுதியில் கிளியோபாட்ராவின் கிளுகிளு செண்ட்டை மீட்டுவிட்டதாக அறிவித்தனர். கிளியோபாட்ராகிளுகிளு செண்ட்டா


கிரங்கடிக்கும் கிளியோபாட்ரா குறித்து கிளியரா நமது வாசகர்களுக்கு தெரியப் படுத்துவோமா? கிளியோபட்ரா எகிப்து பேரழகி மற்றும் பேரரசி. அவளின் நிறம்  கருப்பா? சிவப்பா? மஞ்சளா? என்பதில் கொஞ்சம் அல்ல நிறையவே டவுட். சந்தேகமேயில்லாமல் கழுதை பால் குளியல்காரி. சகோதரர்களையும் எதிரியையும் மணந்தவள். ஆண்களை போல் ஆடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தவள். பாம்பால் கடிபட்டு அல்லது கடிக்க விட பட்டு மரணித்தவள். அவள் மரணத்தில் சந்தேகம் இருந்தாலும் வாசனை திரவியங்கள் மீது வெறி கொண்டவள் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.


கடல்முத்துகளை வினிகரில் கரைத்து அருந்தினாள்.நமது கொற்கைதுறைமுகத்திலிருந்து முத்துகளை எகிப்திற்கு இறக்குமதி செய்தாள். இவள் ஏழாவது கிளியோபட்ரா என அழைக்கப்பட்டவள். மேலும்  




ஏழு மொழிகள் பேசவும் எழுதவும் தெரிந்தவள். ஏழுவிதமான வாசனை திரவியங்கள் தயாரித்தவள்.  கிளியோபட்ரா ரோஜா இதழ்களின் சாற்றினை கொண்டு சருமபாதுகாப்பும், முகத்திற்கு என சிறப்பாக முதலை சாணத்தையும் பயன்படுத்தியவள்,

கிளியோபட்ரா  கழுதை பாலை பதப்படுத்தி சருமத்திற்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் வாசனை திரவியம் தயாரித்தார். மூலிகைகளையும், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர், இதழ், இலைகள் மற்றும் ஆலிவ் மரப்பட்டைகள் சூடான காய்கறி எண்ணெய்கள்  என இயற்கை சூழல் சார்ந்து  கிளுகிளு செண்ட் தயாரித்தவள். சரி கிளியோபட்ராவின் வாசனை திரவியம் மீட்டு எடுக்கப்பட்டுவிட்டது.  உலகின் மூத்த குடியான  தமிழ்குடி சீனாவின் பட்டு பாதை(SILK ROUTE)க்கு முன்பே உலகில் நறுமண பாதை உருவாக்கியவர்கள் என்பது அறிவோமா? பிரமிடுகளையும் ஹைரோகிளிஃபிக்ஸ்களையும் பாதுகாத்ததால் இன்று அவர்களால் கிளியோபட்ராவின் கிளுகிளு செண்ட்டை மீட்டு எடுக்க முடிந்தது. ஆனால் நம்மிடம் தொல்சான்றுகளை பாதுகாக்கும் பழக்கவழக்கங்கள் இல்லாத காரணங்களால் நமது ஆதி வாசனையும் கிளியோபட்ராவை விட அழகான ஆதி தமிழச்சியின் வரலாறும் நம்மிடம் இல்லாது போய்விட்டது. இனியாவது இருக்கும் தொல்லியல் சான்றுகளை பாதுகாப்போம்.

                                                             ஷாஜி.