வெயில் என்றவுடன் ஞாபகம் வரும் இடம் விருதுநகர். பல நகரங்களில் சமீப காலமாக
தான் அனைத்து தெருக்களும் சிமெண்ட் ஹாலோ பிளாக்களுக்கு மாறி வருகின்றன. ஆனால் விருதுநகர்
தெருகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிமெண்ட்க்கு மாறி விட்டன. இதன் காரணமாகவும் வெயிலின்
தாக்கம் அதிகம். அத்தோடு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே சென்று விட்டது. சூரியன் கிழக்கில் உதிப்பதாக பள்ளியில் படித்தாலும்
விருதுநகரில் உதிப்பதாகவே நான் எண்ணிவருகிறேன்.
வியாபாரம் என்றால் விருதுநகர் அதே சமயம் வறட்சி என்றாலும் விருதுநகர் என்றே பெயர் பெற்றுவிட்டது.
இங்கே ஒவ்வொரு தேர்தலிலும் குடிநீர் பஞ்சம் தீர்ப்பதாகவே சொல்லி ஓட்டு வேட்டையாடுவர்
அரசியல்வாதிகள். தமிழகம் முழுவதும் நடைபெறும் நடைமுறை தான் என்கிறீர்களா? ஆம் இங்கே
கொஞ்சம் ஜாஸ்தி.
விருதுநகர் சுற்றிய நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளன. விருதுநகரிலிருந்து
அருப்புகோட்டை செல்லும் வழியில் கவுசிக மகாநதியில் குல்லூர் சந்தை அணை உள்ளது. மழை காலங்களில் வடமலைக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கண்மாய் களில்
இருந்து உபரிநீர் கவுசிகா மகாநதி வழியாக ஓடி குல்லூர் சந்தை அணையை அடையும். குல்லூர் சந்தை அணையை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பொழுது
கட்டப்பட்டு எதிர்புறம் குழந்தைகள் விளையாட்டு பார்க்வுடன் 1986ல் திறக்கப்பட்டது.
இன்று குழந்தைகள் விளையாட்டு பார்க் ஐ பார்த்தாலே தெரிந்து விடும் அணையின் பராமரிப்பில்
அரசு செய்த மெத்தன தன்மை. ஆம் குழந்தைகள் விளையாடும்
சருக்குகளும், ஊஞ்சல்களும் துருவேறி அரசியல்வாதிகளின்
உள்ளங்களை போன்றுள்ளது.
இந்த குல்லூர் சந்தை அணையின் கொள்ளவு 127 மி.க. அடி. இந்த அணையின் மூலம் சுற்றுப்புற
கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் விவசாய பாசனம் பெற்று வந்தனர். தற்பொழுது தேர்தல்
நெருங்கும் நேரத்தில் கவுசிகா நதி மற்றும் குல்லூர் சந்தை அணை தூர் வாருவதற்கு நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. கவுசிகாநதி தூர்வார ரூ3 கோடியும் குல்லூர்
அணையை தூர்வார சுமார் 6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
விருதுநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நதி மற்றும் அணையை தூர்வார நடவடிக்கை
எடுத்த பகுதி எம்.எல்.ஏ மா.பா. பாண்டியராஜன் போற்றத்தக்கவர். இருந்த போதும் பகுதி அரசியல்வாதிகள்
கோடிகளில் நிதி ஒதுக்கி போலி டெண்டர் மூலம் தேர்தல் செலவுக்கு பயன் படுத்திவிடாமல்
இருக்க வேண்டும் என்கின்றனர் பகுதி பொதுமக்கள். அத்தோடு தொடர் பராமரிப்பு செய்யாமல்
மீண்டும் இதே நிலைக்கே திரும்பிவிடும் அபாயம் இருப்பதாகவும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்
பகுதி வாழ் பொதுமக்கள். பலவகை பறவைகள் வந்து செல்லும் மிதமான சரணாலயமாகவே குல்லூர்
சந்தை அணை உள்ளது. இன்றைய குல்லூர் சந்தை நிலவரங்களை எனது புகைப்படம் மூலம் நாம் அறியலாம்.
எனது புகைப்படங்களை முகநூலில் பார்த்த பின்பே விருதுநகரை சேர்ந்த பலரும் அணைக்கு சென்று
பறவைகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
கழிவுநீர்களிலேயே நாமகோழிகள் அதிகம் வாழும்.
இவ்வளவு பராமரிப்பு இல்லாத நிலையிலும் நாமக்கோழிகள்
அதிகம் இல்லாததால் நீர்நிலையை சரி செய்துவிடலாம் என்றே நம்புகின்றேன். இந்த தூர்வாரும்
நிகழ்வில் பறவைகள் வரவுகளில் எந்த சுணக்கமும் ஏற்பட்டு விடக்கூடாது என இயற்கையார்வளர்கள்
விரும்புகின்றனர். காவிரியை காப்பது கஷ்டம் தான். நாம் கர்நாடக அரசுடன் காவிரிக்காக போராட வேண்டியுள்ளது. ஆனால் நம்மிடம் உள்ள இது போன்ற அணைகளையாவது உயிர்ப்புடன் வைக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும். விருதுநகர் மக்களின் நீண்ட கால வறட்சி நதி மற்றும் அணையை தூர்வாருதல் மூலம் ஒரு முடிவுக்கு வரும் என உங்களை போன்றே நம்பும்
உங்கள் வஹாப் ஷாஜஹான்,
திருமங்கலம்.
நல்லதொரு பதிவு
ReplyDeleteநன்றி வேல்முருகன் சார்
ReplyDeleteமிக அருமையான பதிவு அண்ணா. வாழ்த்துகள்.
ReplyDelete