பாசமாக பேசுகையிலும்,
படுக்கை அறை கொஞ்சலிலும், பாராட்டுவதற்கும் பயன்படுவது பறவைகள். நமக்கு பிடித்தவர்களை
வர்ணிக்க வார்த்தையில்லை என்போம். பின்பு என் கொஞ்சும் புறாவே, செல்லக் கிளியே, மைனாவே
, என் மயிலே, என் சிட்டே என பலவாறு வர்ணிப்போம். பாராட்டு வார்த்தைகளுக்கு மட்டுமா
பறவைகள். இல்லை இல்லை. வசவு வார்த்தைகளிலும் வண்ண பறவைகள் உள்ளன. ஆக்கம் கெட்ட கூவை,
திருட்டு காக்கா வேல காட்டாத. கள்ளப்பருந்து சேட்டை செய்யாதே,வாத்து மடையா என்போம்.
பலவகைகளில் மனிதனின் வாழ்வில் பறவைகள் ஒன்று கலந்து விட்டன. சரி பில்டப் போதும் கட்டுரைக்கு வாப்பா என நீங்கள் சொல்வது புரிகிறது
நண்பர்களே.
சில்லாட்டை
சில்லாட்டை இன்று இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆம் தென்னை பனை மரங்கள் இன்று காட்சி பொருளாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் காண
கிடைக்கா பொருள் தென்னை, பனை மரங்கள். தென்னை
மற்றும் பனையின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவை என எங்காவது படித்திருப்பீர்கள்.
படிக்காது இருந்தால் இன்று அறிந்து கொள்ளுங்கள். பனை மற்றும் தென்னைகள் இருக்கும் காலமெல்லாம்
பயன் கொடுக்கும். ஆம் மொட்டை பனை தென்னைகள் கூட பறவைகள், பாம்புகள் வாழ்விடமாக இருக்கும்.
பனை தென்னையில் சல்லடை போன்ற நார் பகுதி காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்து
தொங்கும் இதையே சில்லாட்டை என்பர். இது மிகவும்
மென்மையாக இருக்கும். இது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. மழைக்காலங்களில் வெந்நீர்
போட காய்ந்த விறகுகள் கிடைக்காத பொழுது முதலில் சில்லாட்டைகளை எரித்தால் எளிதில் தீ
பிடித்துக் கொள்ளும். கிராமங்களில் யாரையாவது திட்டுவதாக இருந்தால் சில்லாட்டைகளா என
திட்டுவர். சில பகுதிகளில் பன்னாடை எனவும் சில்லாட்டைகளின் மாற்று பெயரிலும் திட்டுவர்.
அங்காடி தெரு படத்தில் கூட கதாநாயகியை கண்டு சொர்ணாக்கா மாதிரி இருக்காப்பா என ஜோக்கர்
சொல்வார். உடன் கதாநாயகன் இவள்க கடக்கிறாள்க சில்லாட்டைகள் என்பார். ஞாபகம் வருகிறதா
நண்பர்களே. என்னப்பா சில்லாட்டைகள் பற்றி சொல்லியதெல்லாம் இருக்கட்டும் சிலுக்கு மர
சில்லைகள் பற்றி என்னப்பா சொல்லவர என நீங்கள் கேட்பது தெரிகிறது.
சில்லைகள்
தமிழகத்தில் பறவை
பார்வையாளர்கள் பலரும் பறவைகளை ஆங்கில பெயரில் தான் குறிப்பிடுவர். ஆனால் உண்மையில்
பறவைகளுக்கான தமிழ் பெயர்கள் பறவைகள் குறித்த அகராதியாக இருக்கும். ஆம் சில்லைகள் விசயத்திலும் இது தெரிய வரும். சில்லாட்டைகளை கொண்டு கூடுகளை
தயார் செய்வதால் இப்பறவைகள் சில்லைகள் என அழைக்கப்பட்டன. சில்வண்டு போன்று சப்தம் எழுப்புவதாலும்
இதற்கு சில்லைகள் என பெயர் பெற்றதாக சில விவசாயிகள் கூறினர்.
இதன் மூக்கு மிகவும் அழகாக
இருக்கும். இதன் அலகானது திணை உண்ண ஏதுவாக இருக்கும். ஆதலால் இதை திணைக்குருவி எனவும்
அழைப்பர்.
சில்லைகளானது சில்லாட்டைகள்,
புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவை சிறகுகள் கொண்டு தனது கூட்டினை அமைக்கும். கூடுகள்
அமைக்கும் பொழுது சில்லைகள் சுறுசுறுப்பு மிக்கதாக இருக்கும். ராட்டினம் போல் சுற்றி
வந்து கூடுகளை அமைக்கும். இதற்கு ராட்டினக்குருவி எனவும் கிராமங்களில் அழைப்பர். சில்லைகள்
பல வண்ணங்களிலும் பல வகைகளிலும் காணலாம். தமிழகத்தில் பெரும்பாலும் காணக்கிடைப்பது
புள்ளிசில்லைகள். இதன் ஆங்கிலப்பெயர்
SCALY BREASTED MUNIA என்றும் SPOTTED MUNIA.
இதனை தமிழில் பொரி ராட்டினம் என்றும் அழைப்பர்.
கருத்தலைச் சில்லை
நாணல் காடுகளில்
அதிகமாக கருத்தலைச் சில்லைகளை காணலாம். கருத்தலைச் சில்லைகளை நெல்லுக்குருவி எனவும்
அழைப்பர். இதன் ஆங்கிலப்பெயர் BLACK-HEADED MUNIA.
சில்லைகளின் மற்றொரு வகையான சிவப்பு சில்லைகளை பெரும்பாலும் குற்றாலம் தென்காசி
பகுதிகளில் காணலாம். இதன் ஆங்கிலப்பெயர்
RED MUNIA. இவைகளை சிவப்பு ராட்டினம் என அழைப்பர். பொதுவாகவே ஆண் பறவைகள் அடர் நிறங்களை
கொண்டு இருக்கும். வடநாட்டில் ஆண் சில்லைகள் “லால்” என அழைக்கப்படுகின்றன. லால் என்ற
உருது வார்த்தைக்கு சிவப்பு என்று பெயர்.
ஆண் சில்லை பெண் சில்லையை அழைக்கும் காட்சி
சில்லைகள் அதிகமாக
இந்தியா , இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணகிடைக்கின்றன. சில்லைகளை
இந்திய வனச்சட்டப்படி வீட்டு செல்லப்பறவைகளாக வளர்க்க தடையிருக்கின்றது. இருந்த போதும்
இந்தியாவில் பலபகுதிகளில் சில்லைகள் வீட்டில்
செல்லப்பறவையாக வளர்க்கப்படுகின்றன. வடநாட்டில் வளர்க்கப்படும் சில்லைகள் புத்ரிகா
எனவும் அழைக்கின்றனர். அதாவது புத்ரிகா என்றால் மகள் என பொருள். தங்களது வீட்டு உறுப்பினராகவே
சில்லைகளை கொண்டாடுவர் வட இந்தியர்.
சில்லைகள் தங்களது
கூடுகளை சிறப்பம்சத்துடன் அமைக்கும். இவைகள் உருவத்தில் சிறியதாக இருப்பதால் இவைகளுக்கு
எதிரிகள் அதிகம். காகம், வால்காகை மற்றம் சிறிய
கீச்சான்கள் அனைத்து பெரிய வகைப் பறவைகளும்
இதன் கூடுகளை பிரித்து மேய்ந்து கபளிகரம் செய்து விடும். அதன் குஞ்சுகளை லபக்கிடுங்கள்.
ஆதலால் பாதுகாப்பிற்க்காக பனை தென்னை கிளைகளின் உள்பகுதிகளில் கூடுகளை அமைக்கும். பெரும்பாலும்
கூட்டங்களாக வசித்தாலும் சில இடங்களில் தனி ஜோடிகளும் வாழும். சில்லைகளின் குரல் விசில்
அடிப்பது போன்றிருக்கும்.
தினமும் காலை காகத்திடமிருந்து சில்லைகளை காப்பாற்றிய படம்
இதன் உணவானது சிறு
புழுக்கள், சிறு மலர்கள், மலர்களில் உள்ள தேன், விதைகள், தானிய வகைகளாகும். பொதுவாக
விவசாயிகளின் எதிரி என சில்லைகளை பலரும் சொல்வதுண்டு. ஆனால் மலர்களில் அயல் மகரந்தசேர்க்கை
செய்வதும் விதைகளை பல இடங்களுக்கு கடத்துவதன் மூலமும் விவசாயிகளுக்கு நன்மையும் செய்கின்றன.
ஆழ் கிணறுகள், நிலக்கரி சுரங்கம் போன்றவைகளில் சில்லைகளை பறக்கவிட்டு சில்லைகள் தலைசாய்ந்து மயங்கியோ
அல்லது மரணித்தாலோ விஷவாயு தாக்குதல் அபாயம் உள்ளது என அறிவர். மிகப்பெரிய சப்தங்களை தாங்கும் சக்தி உருவத்தில்
சிறிய சில்லைகளுக்கு கிடையாது. பட்டாசு வெடிகளை சில்லைகள் இருக்கும் பகுதிகளில் மக்கள்
தவிர்க்கவேண்டும்.
சில்லை கூடுகட்ட முயற்சிக்கும் வீடியோ
கண்டிப்பாக கண்டு மகிழவும்.
நமது வணிக வள நாகரீக வளர்ச்சியில் உலகில் அழிந்து வரும் பறவையின
வரிசையில் சில்லைகளும் உள்ளன. சில்லைகளை காக்க வீட்டில் தோட்டம் அமைத்து மரமும் வளர்ப்போம்.
இணையத்தில் சில்க் குறித்தும் சில்மிஷங்கள் குறித்தும் எழுதினால் வலைப்பூ ரேட்டிங்
ஏறும். சில்லைகள் குறித்து எழுதினால் எங்கே? அதான் தலைப்புல மட்டும் கொஞ்சம் ஜிவ்வு
ஏத்தி கொடுத்திருக்கேன் மக்காஸ். கட்டுரை பற்றி தங்கள் பதில் கண்டு மற்ற பறவைகள் குறித்து
எழுதவுள்ளேன். நன்றி நண்பர்களே,
படங்கள்,வீடியோ, கட்டுரை
வஹாப் ஷாஜஹான்,
திருமங்கலம்.
99425 22470
மிகப்பயனுள்ள தகவல் தமிழில் பறவைகள்,விலங்குகள்பற்றி எழுதுவோர் மிக அரிதாக உள்ளநிலையில் இது சற்றுஆறுதலையும் சந்தோசத்தையும் கொடுக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி
ReplyDelete(முகநூலில் எழுதுங்கள் தமிழ்பறவை ஆர்வலர்களுக்கு பயனளிக்கும்)
தங்களின் ஊக்கம் மிகுந்த பாராட்டிற்கு நன்றி. தொடர்ந்து பறவைகள் குறித்து கட்டுரையை உழைப்பாளியில் பதிவிடுகிறேன். எனது முகநூல் முகவரி wahab shahjahan
Deleteவந்து படிக்கிற வாசகர்கள் எண்ணிக்கையை பெருக்குவது மட்டுமே நோக்கமாகக் கொண்டு வலையுலகம் இயங்கிக் கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நாம் அறியாத இயற்கையை அறிமுகப்படுத்துகிறீர்கள் பாருங்கள்... அங்கே நிற்கிறீர்கள் ஷாஜகான் நீங்கள் - தென்னை மரத்தில் நிற்கிற சில்லையைப் போல!
ReplyDeleteநன்றி.
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
தங்களின் மேலான பாராட்டிற்கு மிக்க நன்றி skk
Deleteமிகவும் காத்திரமான நெருடல் நிறைந்த வு
ReplyDelete