Thursday, 7 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா? 1



திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் எனது அம்மா  . எனது அப்பாவிற்கு மதுரை. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை வரும் பொழுதெல்லாம் கண்ணகி வம்புக்கு இழுக்கப்படுவாள். எங்க கண்ணகி உங்க ஊரு எரிச்சது தான் சரி என்றும் மீண்டும் கண்ணகி வரவேண்டும் எனவும் கூறுவார் அம்மா. அப்பாவோ நான் கோவலனா நடந்துகிடாமா போனது தப்பு தான் என அவரும் அவர் குறைகளை கூறுவார்.  ஆம்பளபிள்ளைகள் தான் எப்பவும் அம்மா சைடு தானே. அதனால் எனக்கு  சிறுவயதிலேயே கண்ணகி பிடித்து போய்விட்டாள். கலைஞரின் பூம்புகார் திரைப்படம் வாயிலாக கண்ணகியின் கஷ்டம்  அறிந்து கண்ணீர் விட்டவன் நான். இலக்கிய ஞானத்தில் சிலப்பதிகாரம் பயின்று கண்ணகியை தெரிந்தவர்கள் ஒரு சிலரே. சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டில் நீதிக்கு போராடி  சேர நாட்டவர்களால் பாடப்பெற்றவள் கண்ணகி. இன்று  கேரளம், இலங்கை பகுதிகளில் ஒருசில மக்களாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் கடவுளாக வணங்கப்படுகிறாள். கண்ணகிக்கு இலங்கையில் 60க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் கண்ணகிக்கு குறிப்பிடதக்க வகையில் கோவில் இல்லை. பல மலைவாழ்ப்பகுதிகளில்  பத்தினி தெய்வ வழிபாடு இருக்கின்றது. பத்தினி தெய்வ  நாட்டார் தெய்வங்களில்   பல கண்ணகியாகவே பார்க்கப்படுகின்றது.



தேனி மாவட்டத்தில் கம்பத்திற்கு அடுத்து உள்ள கூடலூரிலிருந்து பளியங்குடி வழியாக 6கி.மீ சுமார் 5000 அடி உயரம் மலை ஏறினால் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. இதனை கூடலூர் மக்கள் கண்டுபிடித்து உலகிற்கு தெரிவித்தனர். தொல்லியல் ஆய்வாளர்கள் இக்கோவில் 1500 ஆண்டு பழமை வாய்ந்ததாக கூறுகின்றனர். இக்கோயிலுக்கு வாகன வழித்தடம் கம்பத்தினை அடுத்த குமுளி வழியாக 14 கிமீ கேரள வனப்பகுதி வழியாக வரவேண்டும். இங்கு தான் சிக்கல்  ஆரம்பம்.  தமிழகப்பகுதியில் கண்ணகி கோவில் இருந்தாலும் கேரளா வனப்பகுதி வழியாக செல்லும் நிலை உள்ளது. கேரளா வனத்துறையினரின் கெடுபிடிகளும் கேரளத்தவர்களுக்கான சலுகைகளும் அதிகம் என கேள்வி பட்டுள்ளேன். சிதிலமடைந்த கோவிலை செப்பனிட அனுமதிக்க முடியாது என கேரள புலிகள் சரணாலய இயக்குநரின் பேட்டியை படித்தேன். கூடிய விரைவில் தமிழர்களின் வழிப்பாடு மற்றும் வருடத்திற்கு ஒருநாள் சென்று வரும் உரிமையும் தடுக்கப்பட்டு விடும் என உணர்ந்தேன்.

பிரச்சனைகளை நேரில் காண இந்த முறை சித்திரை முழுநிலவு 04.05.2015 அன்று கண்ணகி கோவில் விழாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன். முதல் நாள் இரவு திருமங்கலத்திலிருந்து மதுரைக்கு பஸ் மூலம் கிளம்பினேன். மதுரையை நோக்கி கள்ளழகர் ஆற்றில் இறங்குவதினை பார்க்க செல்லும் பக்தர்கள் வெள்ளம் பஸ்ஸை நிரப்பியிருந்தது. பஸ் ஆரப்பாளையம் சென்று அங்கிருந்து நண்பர் skk வுடன் கம்பம் விரைந்தோம். நடு இரவில் கம்பத்தில் எங்களால் போடப்பட்ட லாட்ஜ் ஐ அடைந்தோம். சில மணி நேரதூக்கத்திற்கு பிறகு அதிகாலை மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் முருகன் அலுவலகம் செல்லப்பட்டது. அங்கு கம்பம் பகுதியின் செய்தியாளர்கள் குழுமி இருந்தனர். இந்த ஆண்டு முதல் புதிதாக செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின்  கையொப்பமிட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டை உள்ள செய்தியாளர்கள் மட்டுமே செல்ல முடியும் என கெடுபிடிகளை நமது பகுதியிலேயே துவங்கிவிட்டனரே என  மன வருந்தினேன்.


அங்கிருந்து  மலைகளில் பிரத்யோகமாக ஓட்டப்பயன்படும் ஜீப் பில் டிரைவருடன் சேர்த்து 8 செய்தியாளர்களும் ஆக 9 பேர் பயணித்தோம். லோயர் கேம்பில் உள்ள சிறு ஹோட்டலில் காலை உணவினை முடித்தோம்.  பின்பு அங்கிருந்து சில கி. மீட்டரில் மலைப்பயணம் குமுளி நோக்கி சென்றது. எங்களை பின் தொடர்ந்து வந்த ஜீப்பில் அறக்கட்டளை நண்பர்களும் செய்தியாளர்களும் வந்தனர். டிரைவர் மலை பாதைகளில் லாவகமாக வண்டியினை செலுத்த குமுளியை அடைந்தோம். குமுளியே  ஏதோ கலவர பூமி போன்று கேரளத்து காவல் துறையினரால் நிரப்பப்பட்டிருந்தது. அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வனத்திற்குள் செல்ல வாகன பாஸ் எடுத்தனர். கண்ணகியினை காண பக்தர்கள் வாகனத்தில் செல்ல அனுமதிக்கு நெடும் வரிசையில் காத்திருந்தனர்.  தொடர்ந்து மலைப்பயணம் நீங்களும் என்னுடன் பயணிக்க தயாராகுவீர். கண்ணகி கோவில் காக்கப்படுமா? 2 விரைவில்
                                       வஹாப் ஷாஜஹான்,
                                               திருமங்கலம்

No comments:

Post a Comment