Friday 15 April 2016

நீர்க்கோழி போலவே நீந்துவேன்


நீங்கள் உங்கள் முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண் கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம் சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு கனவில் நடனமாட சென்று விடுவீர்கள். நடனமாட தெரியாதவராக  இருந்தால், “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன?”  இப்பாடலை முணுமுணுக்கவாவது செய்வீர்கள் இல்லையா. ஆம் நண்பர்களே கட்டுரையின் நாயகி இப்படி தான். அவள்  சாம்பல் நிற மேனியாள். ஆனால் அவள் முகமும் நெஞ்சும்  வெந்நிறம். மூக்கில் இருக்கும் சிவப்பு மச்சம் நம்மை சுண்டி இழுக்கும். ஆனால் அவள்  மனித பதர்களை கண்டால் உடனே ஜகா வாங்குவது போல் ஜகா வாங்கி பதர்களை பதைபதைப்புடன் கவனிப்பாள். மிகுந்த வெட்க குணத்தாள். இவள் நடந்தால் பின்பக்கம் சற்று தூக்கியபடி குட்டை வாலுக்குப்பின் செந்நிற இறகுகள் நம்மை கிறங்கடிக்கும்.