கண்ணகி கோவிலுக்கு
செல்வதற்கு குமுளியில் ஜீப் பாஸ் வாங்கி பயணத்தினை
தொடர்ந்தோம். குமுளியே கேரளத்து காவல்துறையாலும் பக்தர்களாலும் மக்கள் வெள்ளத்தில்
மிதந்தது. வரிசையில் நின்று பக்தர்கள் ஜீப் வாகனத்தில் ஏறினர். ஏறினர் என்பதை விட பொதி
மூட்டைகளை போன்று ஏற்றப்பட்டனர். செய்தியாளர்கள் ஜீப்பில் 9 பேர் பயணிப்பதே நெரிசலாக
இருந்தது. பக்தர்கள் சுமார் 12பேருக்கு மேல் ஒரு ஜீப்பில் பயணித்தால் நிலையை நீங்களே
ஊகித்துகொள்ளுங்கள்.
புலிகள் காப்பக
வனப்பகுதியில் நுழையும் பொழுதே கேரள வனத்துறையினரால் ஜீப் நிறுத்தப்பட்டது. செய்தியாளர்கள்
வாகனம் என்றவுடன் உள்ளே எட்டி பார்த்துவிட்டு பிளாஸ்டிக் ஏதுமில்லையே என்ற கேள்வியோடு
செல்ல அனுமதித்தனர். பக்தர்களின் பைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டது. விபூதி பாக்கெட்கள்
கூட பிளாஸ்டிக் என நிராகரிக்கப்பட்டது. பக்தர்களை ஜீப்பிலிருந்து இறக்கி ஒவ்வொருவராக
தனிநபர் சோதனை செய்யப்பட்டு பின் ஜீப்பில்
ஏற்றி அனுப்பினர்.
ஆங்காங்கே மருத்துவ
பரிசோதனை மையமும் திறந்திருந்தனர்.
இச்சோதனைகளை தாண்டினால் மலையேறும் வனப்பாதைகள் எங்கும்
சேறும் சகதியுமாக காட்சியளித்தது. உடன் வந்த உள்ளூர் ஊடக செய்தியாளர்கள் நேற்று நல்லமழை
அதனால் சகதியாக உள்ளது என்றனர். அத்துடன் நல்லவேலை மழை பெய்தது இல்லையெனில் தூசியும்
மாசுவும் மலையெங்கும் பரவி நிறம் மாறிவிடுவோம் என சென்ற ஆண்டு கதையை கூறினர். வனமலைப்பாதை
ஒரு ஜீப் செல்லவே சரியாக உள்ளது. எதிர்புறம் ஜீப் வந்துவிட்டால் சாகசம் தான் போங்கள்.
உண்மையில் டிரைவர்களின் சாமர்த்தியத்தினை பாராட்டியே தீரவேண்டும். சகதி ஜீப்பை ஒருபக்கம்
இழுக்க ஜீப் மறுபக்கம் சென்றது.
மலைப்பாதையில் பலபக்தர்கள் பாதயாத்திரையாகவே நடந்தும் சிலர் பால்குடம் தூக்கியும் வந்தனர். அவர்களை விசாரித்த பொழுது இந்த கூட்டத்தில் நின்று அனுமதி பெறவே 12 மணியாகி விடும். அதற்கு பின்பு மேலே சென்றால் 3மணிக்கு அனைவரையும் கீழிறங்க கட்டாயபடுத்துவர். எனவே நடப்பதே மேல் என்றனர். இரண்டு ஜீப்கள் கிராஸ் செய்யும் பொழுது பாதயாத்திரை பக்தர்கள் நிலையோ ரொம்ப மோசம். சகதியில் கால்கள் எல்லாம் பூட்ஸ் போட்டபடி வயதான பெண்களும் பெருசுகளும் நடந்துவந்தது பயமாக இருந்தது.
இதற்கிடையே கேரள
வனப்பகுதி அட்டைகள் தன் பங்குக்கு பக்தர்களின் ரத்தத்தினை கபளீகரம் செய்யத்துவங்கின.
நெடுநாள் விரதம் போல அட்டைகளுக்கு. பக்தர் ஒருவர் தொடைவரை சென்று ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருந்தது.
பக்தர் பட்ட வேதனை சொல்லில் அடங்காது. அங்கே ஒருவர் சொன்னார் அட்டைகள் கடிப்பது நல்லது
தான் விடுங்கள். அது தனக்கு தேவையான ரத்தத்தினை குடித்துவிட்டு அதுவாக கீழே விழுந்துவிடும்
என்றார். அட்டையின் பிடியிலிருந்து மீள உப்புத்தூளே மருந்தாம். உப்புதூளை தூவினால்
ஆளைவிடுங்கப்பா என விலகி கொள்ளுமாம்.
ஒருவழியாய் உச்சிமலையேறும்
பொழுதே எதிர்புறம் பளியங்குடி தமிழகப்பகுதியிலிருந்து கண்ணகி கோயில் நோக்கி நடைபயணமாக
ஏறும் பக்தர்கள் சிறு ஏறும்பு ஊர்வதினை போன்று நகர்ந்து வருவது தெரிந்தது. இப்படி பக்தர்கள்
வெள்ளம் ஜீப், நடைப்பயணம் என கண்ணகி கோவிலை நோக்கி பக்திபரவசமாக வந்த வண்ணம் இருந்தனர்.
பளியங்குடி பகுதியிலிருந்து வந்த பக்தர்களிடம் விசாரித்த பொழுது அச்சாலை இன்னும் மோசமாக
இருந்ததாக கூறினர். மேலே மிகப்பெரிய டவர் ஒன்று காட்சியளித்தது.
படிக்கட்டுகள் துருப்பிடித்து
பயன்பாடின்றி இருப்பதற்கு சான்றழித்தது. அங்கிருந்து கண்ணகி கோவிலுக்குள் செல்ல பக்தர்கள்
வரிசையில் நிற்களானார்கள். கண்ணகி கோவிலின் அழகினையும் அங்கு நடக்கும் கேரள, தமிழக
பக்தர்களின் பிரச்சனைகளை காண அடுத்த கட்டுரை வரை நாமும் காத்திருப்போம் நண்பர்களே.
விரைவில் கண்ணகி கோவில் காக்கப்படுமா? 3
வஹாப் ஷாஜஹான்,
திருமங்கலம்.
No comments:
Post a Comment