Tuesday, 10 November 2015

சமணம் தந்த தீபாவளி


இந்தியாவிலிருந்து தன் கொள்கைகளால் உலகம்  கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அதில் மகாவீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தின் மலைகள் தோறும் மகாவீரரின் சிலைகளை காணலாம். இவர் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கராவார். இவர் சமண சமயத்தின் உள்ளடக்க கருத்துகளை வழங்கிய சீர்திருத்தவாதியாகும். மகாவீரர் வர்த்தமானர் என அழைக்கப்பட்டார். பீகார் மாநிலம் வைசாலி அருகே உள்ள குந்திகிராமா என்ற நாட்டின் இளவரசராக பிறந்தார். அரசன் அரசியான சித்தார்தர் திரிசாலாவின் செல்லக்குழந்தையாய் வளர்ந்தார். தனது 30வது வயதில் அரசாட்சி துறந்தார்.





பின்பு இயற்கை செல்வங்களான தாவரங்கள், விலங்குகள் , மனிதர்கள் என அனைவருக்கும் ஊறுவிளைவிக்காத வாழ்வினை தொடர்ந்தார். இவர் கி.மு 599 முதல் கி.மு 527 வரை வாழ்ந்ததாக சமணர்கள் கருதுகின்றனர். வரலாற்று ஆய்வாலர்கள் கிமு 477 வரை வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். சமண மதம் ஜினர், அருகர், நிக்கந்தர், பிண்டியர் என பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. சமண துறவிகள் பெரும்பாலும் ஆடைகள் அணிவதில்லை. சிலர் வெண்ணிற ஆடை உடுத்துவர். சிலைகளை வணங்காத பிரிவினரும் சமணர்களில் உள்ளனர். சமண சமயத்தில் சாதிகள் இல்லை. இன்றும் தமிழ் சமணர்களிடையே சாதிகள் இல்லை. ஆதலால் வேற்றுமையும் இல்லை.


     08.11.2015 அன்று தினகரனில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது 

 சமணர்கள் ஆடைகள் உடுத்தாத காரணத்தால் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைகளில் வாழ்ந்தனர். மலைகளின் குகைகளில் படுகைகளை வெட்டி குடியிருந்தனர். மலைகளை கல்வியும் மருத்துவமும் வழங்கும் தளமாக “பள்ளிகள்” என குறிப்பிட்டனர். மலை குகைகளின் இருட்டினை போக்க தீபம் ஏற்றும் பழக்கம் கொண்டிருந்தனர். சமணர்கள் மலைகளில் தீபங்களை வரிசையாக அமைத்திருப்பர். தீபாவளி என்ற வடச்சொல்லுக்கு தீபங்களை வரிசையாக ஒளியேற்றுவது என்பது பொருள். மகாவீரர் மறைந்து ஜீவசமாதியான பொழுது அனைவரும் வீடுகளிலும் தீபஒளியேற்றினர். இதுவே பின்னாளில் தொடர்ந்து தீபாவளி என கடைபிடிக்கப்பட்டது. 

மகாவீரர் மரணித்த இந்நாளை ஆண்டின் துவக்க புத்தாண்டு தினமாக கொண்டுள்ளனர் சமணர்கள். சமண இலக்கியமான கல்ப சூத்திரம் என்ற நூலினை பத்ரபாகு என்பவர் எழுதினார். வட இந்தியாவிலிருந்து பத்ரபாகு தலைமையில் தான் தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்தனர். இவர் நூலில் தீபாவளி குறித்து மகாவீரர் என்ற தீபஒளி மறைந்ததால் தீபவிளக்கு ஏற்றி ஒளி கொடுப்போம் என்கிறார். நாமும் சாதி எனும் கொடிய இருட்டினை ஒழிக்க மகாவீரரின் வழியில் தீபத்தினை ஏற்றி தீபாவளி கொண்டாடுவோம்.
                                   வஹாப் ஷாஜஹான், திருமங்கலம்.












No comments:

Post a Comment