Sunday, 11 December 2022

கிளியோபட்ரா கிளுகிளு செண்ட்

 


தொலைக்காட்சி விளம்பரத்தில் “தேவ தான் தேவ தான்  டியோடர் உடைய எக்ஸ்ட்ரா பாதுகாப்பு” என்று ஒரு ஆண்டி, வயது பையனை பார்த்து ஐடியா மழையை கொட்டுவதை பார்த்திருப்போம். வாசனைப்பொருட்களின் விளம்பரம், முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. சென்ற காலங்களில் வெளிநாடு சென்று திரும்புபவர்களிடம் சரக்கு பாட்டிலோடு சேர்த்து செண்ட் பாட்டில் கேட்பது தான் நமது முக்கிய கோரிக்கையாய் இருக்கும். செண்ட் பாட்டில் கிடைப்பதும் பயன்படுத்துவதும் அதிசயமாக தான் இருக்கும். செண்டை பல பகுதிகளில் சில மைனர்(குஞ்சு)கள் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் தற்பொழுது தண்ணீர் பற்றாகுறையும், மக்கள் தொகை பெருக்கமும், சூடேறிய மாசான பூமியில் கப்பு அதிகரித்து கப்சிப்ன்னு வாசனை திரவியங்களை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. 


மனிதகுலம் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பே சிரியாவில் வாசனை திரவியங்களை பயன்படுத்தியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.இறந்த சடலங்களை மம்மிகளாக பதப்படுத்தும் எகிப்தில் கி.மு 3000லேயே வாசனை திரவியங்கள் தயாரித்ததாக கூறுகின்றனர்.

நான்சும்மா அடித்து விடுவதாக எண்ண வேண்டாம்.

ஹைரோகிளிஃபிக்ஸ் (hieroglyphics) பற்றி கேள்வி பட்டதுண்டா?  ஒரு படமானது குறிப்பிட்ட சொல்லை அல்லது செயலை விளக்குவது ஹைரோகிளிஃபிக்ஸ்  என்பர். பள்ளி பருவத்தில் படம் பார்த்து கதை சொன்னவர்கள் தானே நாம். இது தானே எனக்கு முன்னமே தெரியுமே என்கிறீர்களா. சரி தொடர்வோம். எகிப்தை ஆட்சி செய்த  பாரோ மன்னர்கள் இறந்த பின்பு அவர்களது உடல்கள் மம்மிகளாக மாற்றி பாதுகாக்கப் பட்டன.  மன்னர்களின் ஆட்சி வரிசை கிரகப் படி  மம்மிகள் அமைத்து அதனை சுற்றி  மிகப்பெரிய பிரமிடுகள் அமைத்தனர். பிரமிடுகளுக்குள் மம்மிகளுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்திருத்தனர் எகிப்தியர்கள். இந்த பொருட்கள் விலை உயர்ந்ததாக இருந்ததால் பலகாலமாக கொள்ளையர்கள் பிரமிடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து வந்தனர்.  தற்பொழுது நடைபெறும் பிரமிடுகள் குறித்த தொல்லியல் ஆய்வில் பிரமிடுகளுக்குள் கிடைப்பவைகள் விலை உயர்ந்த தங்க வைர முத்துகளின் புதையல்கள் மட்டுமல்ல. எகிப்தின் ஆதி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்த தகவல் சுரங்கங்களாக பிரமிடுகள் பரினமிக்கின்றன. பிரமிடுகளின் உட்புற சுவர்களில் பல வண்ண ஒவியங்களும் ஹைரோகிளிஃபிக்ஸ்களும் அமைந்துள்ளன.


அந்த வரிசையில் வாசனை திரவியம் குறித்த ஹைரோகிளிஃபிக்ஸ்  ஆனது கிஃபி என்ற ஐந்தாவது மற்றும் ஆறாவது பாரோமன்னரின் வம்சாவளி மம்மிகள் இருக்கும் பிரமிடில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த  ஹைரோகிளிஃபிக்ஸ்  கி.மு 2616 முதல் கி.மு 2181 காலகட்டத்தை சேர்ந்தவை என கணித்துள்ளனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்த காட்சியில் (கிளிஃபிக்ஸ்ஸில்)    இரண்டு பெண்கள் மிகப் பெரிய ஜாடியில் வாசனை திரவியத்தை காய்ச்சி இறக்க முயற்சிப்பது போன்றுள்ளது.  மேலும் சில  பணியாளர்கள் வாசனை திரவிய தயாரிப்பு மூலப் பொருட்களை கொண்டுவருவது போன்று காட்சி அமைந்துள்ளது. இந்த காட்சியில் வாசனை திரவிய மூலப் பொருட்கள் முழுவதும் விரிவாக கிடைக்காவிட்டாலும்  வாசனைப் பொருள் தயாரிப்பு குறித்த விளக்கமாக அமைந்துள்ளது. 



இது போதாதா நமது மேலைநாட்டு தொல்லியல் அறிஞர்களுக்கு கோடு போட்டால் தான் ரோடே போட்டுவிடுவார்கள் தானே.  பழம் பெருமை வாய்ந்த ஹவாய் பல்கலை கழக பேராசியர்கள் ராபர்ட் லிட்மேன் மற்றும் ஜே சில்வர்ஸ்டெய்ன் என்ற இரண்டு பேராசிரியர்கள்  இணைந்து அக்காலத்து கிரேக்க வாசனை திரவியத்தை மீட்க முயற்சி செய்தனர். இந்த ஆய்வில் உலகின் வாசனை திரவியங்கள் குறித்த பெரும் ஆராய்ச்சி பேராசிரியர்களான ஜெர்மனியைசேர்ந்த  டோரா கோல்ட்ஸ்மித் மற்றும் சீன் கோக்லின் உடன் கைகோர்த்தனர். மதுபான கூடத்தில் சிறந்த பார் டெண்டர் கிடைத்துவிட்டால் அன்றைய காக்டெயில் எப்படி நம்மை துள்ளி விளையாட செய்யும். அது தான் அங்கும் நிகழ்ந்தது. அமெரிக்க மற்றும் ஜெர்மன் கூட்டுணைவு எகிப்தின் ஆதி கிளுகிளு வாசனையை திரும்ப செய்து நமது வியர்வை கப்பர்களின் வயிற்றில் பால் வார்த்தனர். பாலா? ஆம் அதுவும் கழுதை பால். தங்களது கண்டுபிடிப்பின்  இறுதியில் கிளியோபாட்ராவின் கிளுகிளு செண்ட்டை மீட்டுவிட்டதாக அறிவித்தனர். கிளியோபாட்ராகிளுகிளு செண்ட்டா? 


கிரங்கடிக்கும் கிளியோபாட்ரா குறித்து கிளியரா நமது வாசகர்களுக்கு தெரியப் படுத்துவோமா? கிளியோபட்ரா எகிப்து பேரழகி மற்றும் பேரரசி. அவளின் நிறம்  கருப்பா? சிவப்பா? மஞ்சளா? என்பதில் கொஞ்சம் அல்ல நிறையவே டவுட். சந்தேகமேயில்லாமல் கழுதை பால் குளியல்காரி. சகோதரர்களையும் எதிரியையும் மணந்தவள். ஆண்களை போல் ஆடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தவள். பாம்பால் கடிபட்டு அல்லது கடிக்க விட பட்டு மரணித்தவள். அவள் மரணத்தில் சந்தேகம் இருந்தாலும் வாசனை திரவியங்கள் மீது வெறி கொண்டவள் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.


கடல்முத்துகளை வினிகரில் கரைத்து அருந்தினாள்.நமது கொற்கைதுறைமுகத்திலிருந்து முத்துகளை எகிப்திற்கு இறக்குமதி செய்தாள். இவள் ஏழாவது கிளியோபட்ரா என அழைக்கப்பட்டவள். மேலும்  




ஏழு மொழிகள் பேசவும் எழுதவும் தெரிந்தவள். ஏழுவிதமான வாசனை திரவியங்கள் தயாரித்தவள்.  கிளியோபட்ரா ரோஜா இதழ்களின் சாற்றினை கொண்டு சருமபாதுகாப்பும், முகத்திற்கு என சிறப்பாக முதலை சாணத்தையும் பயன்படுத்தியவள்,

கிளியோபட்ரா  கழுதை பாலை பதப்படுத்தி சருமத்திற்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் வாசனை திரவியம் தயாரித்தார். மூலிகைகளையும், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர், இதழ், இலைகள் மற்றும் ஆலிவ் மரப்பட்டைகள் சூடான காய்கறி எண்ணெய்கள்  என இயற்கை சூழல் சார்ந்து  கிளுகிளு செண்ட் தயாரித்தவள். சரி கிளியோபட்ராவின் வாசனை திரவியம் மீட்டு எடுக்கப்பட்டுவிட்டது.  உலகின் மூத்த குடியான  தமிழ்குடி சீனாவின் பட்டு பாதை(SILK ROUTE)க்கு முன்பே உலகில் நறுமண பாதை உருவாக்கியவர்கள் என்பது அறிவோமா? பிரமிடுகளையும் ஹைரோகிளிஃபிக்ஸ்களையும் பாதுகாத்ததால் இன்று அவர்களால் கிளியோபட்ராவின் கிளுகிளு செண்ட்டை மீட்டு எடுக்க முடிந்தது. ஆனால் நம்மிடம் தொல்சான்றுகளை பாதுகாக்கும் பழக்கவழக்கங்கள் இல்லாத காரணங்களால் நமது ஆதி வாசனையும் கிளியோபட்ராவை விட அழகான ஆதி தமிழச்சியின் வரலாறும் நம்மிடம் இல்லாது போய்விட்டது. இனியாவது இருக்கும் தொல்லியல் சான்றுகளை பாதுகாப்போம்.

                                                             ஷாஜி.

Thursday, 27 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-2


சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா? வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) புலி உருவம் இருப்பது அனைவரும் கண்டிருப்போம். மேலும் அரிய வகையாக நாய் உருவம், உலக வரைபடம், சிலுவை, மனித கண்கள் போன்ற உருவங்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோல அந்துப்பூச்சியில் மண்டையோடு, ஆந்தை போன்ற உருவங்கள் கொண்டவை உள்ளன. ஆனால் இவைகளை பார்ப்பது மிகுந்த அபூர்வம். மண்டையோட்டுப் பூச்சியை ஆங்கிலத்தில் லெப்பிடோப்டெரா (lepidoptera)  வகை பூச்சி என அழைப்பர். மண்டையோட்டுப் பூச்சி  பார்க்க பட்டுப் பூச்சியை போன்றே இருக்கும்.

பறவைகள் போல் மண்டையோட்டு அந்துப்பூச்சியும் வலசை செல்கின்றன. மத்தியகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லண்டன், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,வியாட்நாம், மலேசியா , தாய்லாந்து போன்ற பகுதிகளில் அபூர்வமாக தென்படுகின்றன.

Tuesday, 25 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-1

கோலிவுட்டில் பேய்கள் சீசன் களைகட்டுகின்றது. நம் பங்கிற்கு நாமும் கொஞ்சம் த்ரில்லர் கம் மெசேஜ் கொடுப்போம்னு ஒரு முயற்சி. முன்பு எல்லாம் பேய் படங்களில் முன்னணி கதாநாயகிகள் நடிப்பதில்லை.  ஆனால் தற்பொழுது நயன்,திரிஷா,ஹன்சிகா போன்ற  நமது  கனவுகன்னிகள் பேய்களாக வளம் வருகின்றனர். ஆம் நம் கோலிவுட் கடவுளின் நிலைக்கு சென்று விட்டது. எப்படி என்கிறீர்களா? பீடிகை போடவில்லை. தொடர்ந்து படியுங்கள். எலும்புக்கூடு பயம் என்பது இப்பொழுது மட்டுமல்ல. பள்ளி படிப்பு காலத்திலேயே துவங்கி விடும். பள்ளியில் சைன்ஸ் லேப்பை தாண்டும் பொழுதெல்லாம்  இதயம் படபடக்கும். உள்ளே உள்ள எலும்புக்கூடு  பலநாள் தூக்கத்தினை கெடுத்துள்ளது பலருக்கு. அபாய அறிவிப்புகளுக்கு மண்டையோட்டு படங்களை பார்த்திருப்போம். வீட்டில் கரப்பானுக்கே பயப்படும் பெண்கள் மண்டைஓடு படத்தினை பார்த்தால் நடுங்கி தான் போவர். இப்படி குலைநடுங்கச் செய்யும் மண்டையோட்டினை உடைய பூச்சியினை பார்த்திருக்கின்றீர்களா? சரி  கேள்வியாவது பட்டிருக்கின்றீர்களா?

Sunday, 30 April 2017

கோடைக் கொண்டாட்டம்

எனது பள்ளி,கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி.. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி. பெட்டியை அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்திற்கு வழங்கும் பளபளக்கும் வண்ணப்படங்களில் பீலே, மரடோனாவின் காட்சி.  இருவரும் 3டி ஸ்டைலில் கால்பந்து உதைக்க டிரக் பெட்டியை விட்டு வெளியே வந்து பல பழைய நினைவுகளை நினைவுறுத்தின. இனிப்பான  கேசரியை கிளறி முந்திரியை தேடி எடுத்து உண்பது போன்றது நம் நல்ல பல பழைய நினைவுகளை அசைபோடுவது.

Friday, 2 December 2016

புள்ளோடு புது பொங்கல்



பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம். தற்பொழுது பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் (மது) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இங்கே நாம் கூறும் புள்,  பறவையாகும். பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை காப்பாற்றிய  சிபி சோழனையும், மயிலுக்கு போர்வை தந்து உதவிய பேகனையும்,  பறவைகள் , பயம் கொள்ளக்கூடாது என்பதற்காக தேரின் மணிகளை  கழட்டி விட்டு பயணித்த தலைவர்களையும் பெற்றது நம் தமிழகம். இவ்வகையான பாரம்பரியத்தில் வந்த நம் தமிழ் பறவை ஆர்வலர்கள்  திண்டுக்கல், கோவை என்ற வரிசையில் கடந்த மாதம்  திருநெல்வேலியில் பி.எஸ்.என் கல்லூரியில் தங்களது மூன்றாவது ஆண்டு சந்திப்பை  நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஊருக்கே உரிய வகையில் பல  இனிப்பான செய்திகள் கிடைத்தன.

Sunday, 4 September 2016

தே மதுர தேவன் குறிச்சி 2


திண்டுக்கல் பூட்டிற்கு பெருமிதம் கொண்டது என்பதால் திண்டுக்கல் செல்லுபவர்கள் யாரும் வாய்ப்பூட்டு போடுவதில்லை. நன்றாக திண்டுக்கல் பிரியாணியை ஒரு பிடி பிடித்தே திரும்புவர். ஆம்பூர் சென்றால் அன்லிமிட்டா (unlimit)  பிரியாணி சாப்பிடுவது போன்று நம்ம கல்லுப்பட்டி பயணம் உளுந்தவடையில் சிறப்புடையது. தேவன் குறிச்சி ஆஞ்சிநேயருக்கு வடைமாலை படைப்பதுடன் நம் வயிற்றுக்கு வடை வார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 உளுந்த வடையும் சீரணியும் கல்லுப்பட்டி பஸ்நிலையத்தை சுற்றியுள்ள கடைகளில் காட்சி பொருளாக வைத்து அதை நோக்கி நம் நாக்கினை எச்சில் ஊற வைப்பர்.  உளுந்த வடையை தேங்காய் சட்டினியில் ஊறவைத்து குளோப்ஜாமுன் போல் கரைத்து வயிற்றுக்குள் இறக்கி கொண்டே இருக்கலாம்.

தேவன்குறிச்சி ஆதி சமண பெரும் தளமாக இருந்தற்கான சான்றுகள் காண தொடர்வோமா?

Sunday, 21 August 2016

தே மதுர தேவன் குறிச்சி



மலையும் மலை சார்ந்த பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.   6000ம்  ஆண்டுகால தள வரலாறும் , ஆறு விதக்  கடவுள் வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே இணைந்த  அதிசய மலை  தேவன்குறிச்சி .   மேற்கு தொடர்ச்சி மலைகளின்  அழகில் இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது.  இம்மலை  மதுரையிலிருந்து  சுமார் 40கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது.  மதுரை , திருமங்கலம், தே.கல்லுப்பட்டி வழியாக  பேரையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  தே.கல்லுப்பட்டி  என்னும்  ஊரின் பெயரில் தே என்பது  தேவன்குறிச்சி யையே  குறிக்கும். சூழல் உலாவின்  சமீபத்திய பயணமான  தேவன் குறிச்சி (குறிஞ்சி) யின் மறக்கவியலா பயணக்குறிப்புகள் தங்களின் இனிய பார்வைக்கு…

ஆறு கடவுள் வழிபாடு.

“ஸ்ரீ அக்னீஸ்வரர்  கோமதி அம்மன் கோயில்”  என்ற வரவேற்பு நுழைவாயில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும் நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில்  ஒன்றும் உள்ளது.

Saturday, 6 August 2016

பாலுக்கும் புற்றுக்குமான பிணைப்பு



வருமானம், வியாபாரம் மீதான விசாலப்பார்வை விருந்து என்ற தமிழர் பாரம்பரியத்தை விடைபெற செய்துவிடுமோ என்று கவலை கொள்கின்ற எண்ணில் அடக்காதோர்களில் நானும் ஒருவன். விருந்து என்றவுடன் விரண்டோடும் காலமாய் நகர்புறம் உள்ளது. சமீபத்தில் கிராமப்புற நண்பர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றோம்.. நண்பர் கோழி கறிக்கடை நடத்துபவர். நான் சென்றதன் ரகசியம் உங்களுக்கு தெரிந்திருக்குமே!. நகரின் வெளிப்புற பகுதியில் குடியிருப்பு. வியாபார நோக்கில் சுமார் 20 வெள்ளாடுகளும், 50க்கும் மேற்பட்ட நாட்டு சேவக் கோழிகளும் 4 வாத்து சில புறாக்கள் என  கண்களுக்கு எங்கு பார்த்தாலும் உயிரினங்கள் மகிழ்வாய் காட்சித் தந்தன. நாங்கள் சென்ற நேரம் வளர்ப்பு பிராணிகளின் பிரசவ காலமோ என்னவோ பலவும் குட்டி போட்டிருந்தன.  இதில் ஆடு முதல் நாள் தான் குட்டி போட்டிருந்தது. நாய் சிலநாட்களுக்கு முன்பு தான் குட்டி போட்டுள்ளது. அவர்கள் வீட்டை ஒட்டிய மரத்தில் அணில் குஞ்சி பொறித்திருந்தது. மற்றொரு மரத்தில் காக்கா முட்டையிட்டு குஞ்சு பொறிந்து குஞ்சுகள் வெளியே வந்து கொண்டிருப்பதாக மாடியில் இருந்து லைவ் ரீலே  குட்டீஸ்கள் செய்தன.

Tuesday, 26 July 2016

சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி

கிட்டன்ஸ் காலி 3டி வள்ளி
சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி
கடன்பட்டார்  நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். கம்பன் கடன் எவ்வளவு கலக்கம் கொடுக்கும் என்பதை உணர்ந்து எழுதியுள்ளான். கலக்கம் கொடுப்பதால் தானோ என்னவோ கக்கா போற மேட்டருக்கும் காலைக் கடன்  என பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும் கிராமங்களில் அதிகாலையில் செம்புடன் வயங்காட்டை நோக்கி படையெடுக்கும் கூட்டம் எந்த கடனை அடைக்கா விட்டாலும் காலைக் கடன் அடைப்பை அகற்றி விட்டே வீடு திரும்பும்.  நடிகர் கவுண்டமணி சொல்வது போல் நிலத்திற்கு உரம் போடும் பணியில்  தான் தற்பொழுது பலருக்கும் பல பிரச்சனைகள். ஒருசிலருக்கு மலச்சிக்கல் என்றால் மற்றொரு சாராருக்கு வயிற்றுப் போக்கு என  போக்கு காட்டுகிறது கக்கா மேட்டரு.

Sunday, 29 May 2016

ரெட்டவால் திருவிளையாடல்



திருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும்  தெரிந்து வைத்துள்ளோம். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்டஅன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த அற்புதங்களே திருவிளையாடல்.  சிவனின் திருவிளையாடல்கள் பல உயிரின பாதுகாப்பாக இருந்தது. சங்கப்பாடல்கள்  பழம் பெரும் மதுரையின் இயற்கையினை அழகுற கூறியுள்ளன. அவைகள் அனைத்தும் இன்று மிகைத்த கற்பனையோ என எண்ணும் வகையில் மாறி வருகின்றது மதுரை. மதுரைக்கு வருபவர்கள் சுபிட்சம் பெற்றவர்களாய் மாறுவர் என்கின்றது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இப்புராணம் இறைவழிப்பாட்டினை இயற்கை செல்வங்களோடு இணைத்து கொண்டுசெல்கின்றது. சிவனின் திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த  படலம், பரியை நரியாக்கிய படலம், வெள்ளையானை சாபம் தீர்த்தப்படலம், பன்றி குட்டிக்கு முலை கொடுத்தப்படலம் என உயிரினப்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தமைந்துள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கையை பாதுகாப்பது ஆன்மீகத்தின் ஒருபகுதியாக மாற்றி வைத்திருந்தனர்.



ரெட்டவால் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான எனது கட்டுரை

Friday, 15 April 2016

நீர்க்கோழி போலவே நீந்துவேன்


நீங்கள் உங்கள் முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண் கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம் சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு கனவில் நடனமாட சென்று விடுவீர்கள். நடனமாட தெரியாதவராக  இருந்தால், “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன?”  இப்பாடலை முணுமுணுக்கவாவது செய்வீர்கள் இல்லையா. ஆம் நண்பர்களே கட்டுரையின் நாயகி இப்படி தான். அவள்  சாம்பல் நிற மேனியாள். ஆனால் அவள் முகமும் நெஞ்சும்  வெந்நிறம். மூக்கில் இருக்கும் சிவப்பு மச்சம் நம்மை சுண்டி இழுக்கும். ஆனால் அவள்  மனித பதர்களை கண்டால் உடனே ஜகா வாங்குவது போல் ஜகா வாங்கி பதர்களை பதைபதைப்புடன் கவனிப்பாள். மிகுந்த வெட்க குணத்தாள். இவள் நடந்தால் பின்பக்கம் சற்று தூக்கியபடி குட்டை வாலுக்குப்பின் செந்நிற இறகுகள் நம்மை கிறங்கடிக்கும்.

Wednesday, 23 March 2016

காட்டுச் சிறுக்கி ச்ச… பருத்தி...

கோங்கமலர் என்ற காட்டுப்பருத்தி


தங்கம் மஞ்சள் நிறத்தில்  இருப்பதால்தானோ என்னவோ பெண்களையும் தங்கத்தையும் பிரிக்க முடிவதில்லை. மயக்கும் மஞ்சள்வண்ணம். பெண்கள் மிகவும் விரும்பும் வண்ணம், மாம்பழம், மாஞ்சிட்டு, சூரியகாந்திப்பூ என மஞ்சள் மழையில் நனையலாம். வண்ணங்களில் ஆன்மீகத்தினையும், மருத்துவக்குணங்களையும் ஒரு சேர பெற்றுள்ளது மஞ்சள். மலர்களில் ஆவாரம்பூ, சூரியகாந்திப்பூ, கோங்க மலர், சாமந்திப்பூ முக்கிய இடம் வகிக்கின்றன.

Sunday, 13 March 2016

த்தூ……..

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில்  அரசியல் வாதிகளின் அநாகரிக பேச்சும் அதை வெளியிடும் ஊடகங்கள் நிலையும் மேலே தலைப்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. சமீபத்தில் விஜயகாந்த் ஊடக அன்பர்களை பார்த்து த்தூ…. என்பதில் நியாயமில்லை தான். ஏனெனில் அவரும் கேப்டன் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு சொந்தக்காரர். ஆனால் இந்தியாவின் நான்காவது தூண் என போற்றப்படுகின்ற ஊடகத்தின் உண்மை நிலை என்ன? ஊடகத்தில் களப்பணியாற்றுகின்ற நிரூபர் முதல் நிறுவனத்தின் முதலாளி வரை அறம் சார்ந்த பார்வை கானல் நீராகவே உள்ளது. இதில் ஒரு சில தனிநபர்களே விதிவிலக்கு. முழுமையாக இந்த ஊடக நிறுவனம் சரியாக செயல்படுகின்றது என்று சொல்லும் நிலை இன்று இல்லை .

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது கைப்பாவையாக செயல்படும்  ஊடகங்களை வைத்துள்ளன. ஒவ்வொரு ஜாதி,மத அமைப்புகளும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஊடகங்களை கையில் வைத்துள்ளன. பொதுமக்கள் தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் தான் சார்ந்த ஊடகங்கள் வழியாகவே பார்வையிடுகிறார்கள்.

Monday, 29 February 2016

பலாச மலர்கள்

பலாப்பழம் தெரியும். பழரசம் தெரியும். காக்காமுட்டை பழரசமும் தெரியும். பாசமலர் படம் கூட தெரியும். அதென்ன பலாச மலர்? இந்த பெயரில் மலர்கள் இருப்பது குறித்து  பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதி மனிதன் நோய்களுக்கு மலர்களையும், இலைகளையும், வேர்களையும் கொண்டு மருத்துவம் செய்து குணமடைந்து வந்தான். இன்று நாம்  அவர்கள் காப்பாற்றிய மரங்களையும் மருத்துவமுறைகளையும் துலைத்து விட்டோம். மூலிகை மருத்துவத்தில் நாம் தொடர்ச்சியாக ஈடுபடாத காரணங்களால்  வேதிப் பொருட்கள் உட்கொண்டு உடலை விஷமாக மாற்றி வருகின்றோம். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் பெயர்களை நடிகர் சிவக்குமார் வரிசையாக மூச்சுவிடாமல் கூறினால் ரசிப்போம். ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களில் எத்தனையை உயிர்ப்புடன் வைத்துள்ளோம். இன்னும் எத்தனை மலர்கள் நமக்கு அடையாளப்படாமல் இருக்கின்றது. இவை குறித்து கவலை கொள்ள இங்கு எத்தனை பேர்கள் உள்ளோம். இன்றைய அவசர உலகில்  இயற்கை அழகு கொஞ்சும் மலர்களை ரசிப்பதற்கு தான் நமக்கு நேரமிருக்கின்றதா?.

Wednesday, 24 February 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்


வாசிப்பு என்னிடமிருந்து தூரம் சென்ற காலம் போய் தற்பொழுது வாசிப்பு வசப்படும் காலமாக மாறியிருக்கின்றது. இதை தக்க வைக்கும் முயற்சியாக தேர்ந்தெடுத்த நூல்களை வாசித்து வருகிறேன். அர்ஷியா சார் அவர்களின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பில் நேற்று முன் இரவு பொழுது வசப்பட்டது. சிறு குறிப்பு வைத்து கொண்டே வாசிப்பேன். நூல் முழுவதும் படித்து முடித்த பின் சிறுகுறிப்புகள் பலபக்கங்களை உள்வாங்கியிருந்தது. சிறு குறிப்புகளை பதிவாக போடலாம் என எண்ணி இந்த சிறு முயற்சி.  முதல் கதை மெளனசுழியில் மாற்றுமதத்தவரை திருமணம் செய்த மகளுடனான  ரசாபாசத்தினை உளுவ மீனின் ருசிக்கு இடையே விருந்து படைக்கிறார்.  மகள் பெயரில் எழுதும் எழுத்தாளர் என்பதால் முதல் கதையும் மகள் நேசம் குறித்து உருகவைக்கின்றார். 

Thursday, 10 December 2015

சிலுக்கு மரமே..சிலுக்கு மரமே..சில்லைகள் கொண்டுவா..


பாசமாக பேசுகையிலும், படுக்கை அறை கொஞ்சலிலும், பாராட்டுவதற்கும் பயன்படுவது பறவைகள். நமக்கு பிடித்தவர்களை வர்ணிக்க வார்த்தையில்லை என்போம். பின்பு என் கொஞ்சும் புறாவே, செல்லக் கிளியே, மைனாவே , என் மயிலே, என் சிட்டே என பலவாறு வர்ணிப்போம். பாராட்டு வார்த்தைகளுக்கு மட்டுமா பறவைகள். இல்லை இல்லை. வசவு வார்த்தைகளிலும் வண்ண பறவைகள் உள்ளன. ஆக்கம் கெட்ட கூவை, திருட்டு காக்கா வேல காட்டாத. கள்ளப்பருந்து சேட்டை செய்யாதே,வாத்து மடையா என்போம். பலவகைகளில் மனிதனின் வாழ்வில் பறவைகள் ஒன்று கலந்து விட்டன. சரி பில்டப் போதும்  கட்டுரைக்கு வாப்பா என நீங்கள் சொல்வது புரிகிறது நண்பர்களே.
சில்லாட்டை
சில்லாட்டை இன்று  இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் தென்னை பனை மரங்கள் இன்று காட்சி பொருளாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் காண கிடைக்கா  பொருள் தென்னை, பனை மரங்கள். தென்னை மற்றும் பனையின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவை என எங்காவது படித்திருப்பீர்கள். படிக்காது இருந்தால் இன்று அறிந்து கொள்ளுங்கள். பனை மற்றும் தென்னைகள் இருக்கும் காலமெல்லாம் பயன் கொடுக்கும். ஆம் மொட்டை பனை தென்னைகள் கூட பறவைகள், பாம்புகள் வாழ்விடமாக இருக்கும்.