எனது பள்ளி,கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும்
பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி.. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக
உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி. பெட்டியை
அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்திற்கு வழங்கும்
பளபளக்கும் வண்ணப்படங்களில் பீலே, மரடோனாவின் காட்சி. இருவரும் 3டி
ஸ்டைலில் கால்பந்து உதைக்க டிரக் பெட்டியை விட்டு வெளியே வந்து பல பழைய நினைவுகளை நினைவுறுத்தின.
இனிப்பான கேசரியை
கிளறி முந்திரியை
தேடி எடுத்து உண்பது போன்றது நம் நல்ல பல பழைய நினைவுகளை அசைபோடுவது.
ஆம் நண்பர்களே,
கோடை விடுமுறை என்றாலே எனது நினைவுகள். திருமங்கலத்தில் தொடர்ந்து நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளையே சுற்றி வரும். எனக்கு கிடைத்த அனுபவம் எனது மகள் மற்றும் மகனுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். 1983 ல் நடைபெற்ற கிரிக்கெட் உலககோப்பையை இந்தியா வென்று கிரிக்கெட் பைத்தியங்கள் அதிகரித்த பொழுதும் திருமங்கலம் கால்பந்தாட்ட ரசிகர்களின் களமாகவே இருந்தது. திருமங்கலத்து கோடை கால்பந்துபோட்டியில் பல ஊர்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் பெயரிலான கால்பந்தாட்ட அணிகள் கலந்து கொள்ளும். ஒரு முறை மோகன்பகான் அணியே விளையாட வந்ததாக கூறுவர். துவக்கம்
முதல் இறுதி போட்டி வரை கால்பந்தாட்டப் போட்டி பார்வையிட பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இறுதிப்போட்டி நெருங்க
நெருங்க விளையாட்டு மிக
மிக சுவாரஸ்யமாக இருக்கும். திருமங்கலம் அணியின் அந்த வருட ஆட்டக்காரர்களின் பெயர்கள் எங்கும் ஒலிக்கும். அவர்கள் தான் எங்களுக்கு கதாநாயகர்கள். எனது தாய் வழி தாத்தா கோடை கால்பந்தாட்டம்
காண திருச்சியிலிருந்து வருவார். நான் வீட்டில் உள்ள பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பி.கே.என். மைதானத்திற்கு மதியம் 3 மணிக்கே வந்து விடுவேன். நண்பர்கள் நமக்கு முன் அங்கு காத்திருப்பர். மக்கள்
உட்காரும் பகுதிக்கு தண்ணீர் தெளிப்பது சுற்றுப் பகுதிகளுக்கு கோலப்பொடியிடுவது PT வாத்தியார் அறையிலிருந்து கொடி கால்பந்துகளை எடுப்பது என வெகு ஜரூராய் சுழன்று சுழன்று நண்பர்களுடன் பணியாற்றுவோம். விளையாட வருபவர்களுக்கு வழங்கும் குளுக்கோஸ் அப்ப்ப்பா அவ்வளவு சுவையாக நாக்கில் கரையும்.
விளையாட்டு ஆரம்பித்து விட்டால் அவ்வளவு தான் பந்துடனே நானும் பயணிப்பேன். விளையாட்டை காணும் எனது கால்களும் கைகளும் வாயும் சும்மா இருக்காது. இடையே வறுத்த அவித்த கடலைப்பருப்பு விற்பனை படுஜோராய் நடக்கும். பி.கே.என் பள்ளி வாசல் நொறுக்குத் தீனி விற்கும் பாட்டி கால்பந்தாட்ட போட்டியை ஒட்டி கிரவுண்ட்
பின்புற வாசலுக்கே
வண்டியை கொண்டு வந்துவிடுவார். கடுகு தாளித்து (தேங்காய் செரட்டை) கொண்டாக்குச்சியில் கரண்டி வைத்து நசுக்கும் பொழுது வரும் வாசனை மைதானம் முழுமைக்கும் வீசும். அவரின் ஸ்பெசல் கல்லாமணி மாங்காய் அதாவது பழமும் இல்லாமல் காயும் இல்லாமல் மாங்காபழம் அறுத்து மிளகாய் பொடி தூவி அப்பப்பா இன்றும் நா ஊறுகிறது.
இப்படியெல்லாம் மகிழ்ந்து
கண்ட கோடைக் கால்பந்து பக்கத்து ஊர் சாதி தலைவர் பெயர் வைத்த அணியுடன் திருமங்கலம்
அணி விளையாண்டு அடிதடி பிரச்சனையுடன் மூடுவிழா கண்டது. அதற்கு
பின்பான கோடைவிடுமுறைகள் கால்பந்தாட்டப்போட்டியின்றி மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தது. இன்றும் பள்ளி கோடை விடுமுறைக் காலம்
வந்தால் என் நினைவுகள் கால்பந்தாட்ட களம் நோக்கியே செல்லும். இப்படி மகிழ்வாய் போட்டியை கண்டு வீடு திரும்பினால் தலையெல்லாம் வேப்பம்பூ
வாய் இருக்கும். ஆம் பாண்டிய மன்னர்கள் சூடும் மலர் வேப்பம்பூ
தானே. அம்மாவின் வரவேற்பும் எண்ணமத்த ராசா பன்னி வேட்டைக்கு போய்
திரும்பி விட்டாயா என்பதாகவே இருக்கும்….. அடுத்த கோடை கொண்டாட்டாத்தில்
சந்திப்போம் நண்பர்களே….
உருண்டோடும் வாழ்க்கைப்பந்து,,,/
ReplyDeleteஆம். நன்றி விமலன் அய்யா
ReplyDelete