நீங்கள் உங்கள்
முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண்
கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம்
சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு
கனவில் நடனமாட சென்று விடுவீர்கள். நடனமாட தெரியாதவராக இருந்தால், “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம்
என்ன?” இப்பாடலை முணுமுணுக்கவாவது
செய்வீர்கள் இல்லையா. ஆம் நண்பர்களே கட்டுரையின் நாயகி இப்படி தான். அவள் சாம்பல் நிற மேனியாள். ஆனால் அவள் முகமும்
நெஞ்சும் வெந்நிறம். மூக்கில் இருக்கும்
சிவப்பு மச்சம் நம்மை சுண்டி இழுக்கும். ஆனால் அவள் மனித பதர்களை கண்டால் உடனே ஜகா வாங்குவது போல்
ஜகா வாங்கி பதர்களை பதைபதைப்புடன் கவனிப்பாள். மிகுந்த வெட்க குணத்தாள். இவள்
நடந்தால் பின்பக்கம் சற்று தூக்கியபடி குட்டை வாலுக்குப்பின் செந்நிற இறகுகள்
நம்மை கிறங்கடிக்கும்.
இவள் குளம், குட்டை ,
நாணல் வளர்ந்த சிறு குட்டைகள், மலை ஊரனிகள், கோரைகள் அடர்ந்த நீர் தேக்கத்தினை
ஒட்டி இருப்பாள். இவளுக்கு மிக தெளிவான கண்பார்வையும் மனித நடமாட்டம் அறியும்
தன்மையும் உடையவள். ஜோடியாகவும் சில இடங்களில் தனியாகவும் வாழ்பவள். ஓடையை ஒட்டிய புதர்களிலும் சிறிய வகை மரங்களின்
மேலும் அடைகாத்து குஞ்சு பொரிப்பாள்.
சுமார் ஆறு அல்லது ஏழு முட்டைகள் இடுவாள். ஜோடி இருவரும் அடைகாப்பர். குருளை
குருளையாக சிறு சிறு குஞ்சுகள் பார்க்க மனசு கொள்ளை கொள்ளும். இவளை வெள்ளை நெஞ்சு
நீர்க்கோழி, சம்புக்கோழி, கம்புள்கோழி என்றழைப்பர். நம்மில் மொடாக்குடி நண்பர்களை
நீர்க்கோழி என அழைப்போம் அல்லவா அவர்கள் அல்ல இவள். நீர்க்கோழி அதிகாலை நேரங்களில்
திறந்தவெளிப்பகுதிக்கு வந்து இரை தேடுவாள். சவுண்டு விட்டா சும்மா எண்ணெய் செக்கு
ஓட ஆரம்பிக்கும் பொழுது வர “கீர்ர்ர் குவ்வாக் கீர்ர் குவாத்” என கர்ண கொடூரமா
சவுண்டு இருக்கும். இவளின் முக்கிய உணவாக புழு, பூச்சி, நத்தை, செடி தளிர்களை லபக்
செய்வாள்.
இலக்கியத்தில்
நீர்க்கோழி
தமிழ்ச் சமுதாயம் நிலங்களின் வகை சார்ந்து ஐந்தாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,
பாலை) இருந்தது இலக்கியம் மூலம் நாம் அறிந்ததே. மருத நிலம் வயலும் வயல் சார்ந்த நிலம்.
ஐந்திணை நிலங்களில் மருதநிலப்பறவைகளாக நாரை, நீர்க்கோழி, அன்னம் இருந்தன. நம்ம நீர்க்கோழி
மருத நிலப்பறவை என்பதோடு ஓரம் போகியார் இயற்றிய
ஐங்குறுநூறு பாடலில் பல இடங்களில் இடம்பெறுகின்றது.
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே.
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி ஊர! நின் மொழிவல்: என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி;
அஞ்சாயோ, இவள் தந்தை கை வேலே?
கம்புள் பறவை காம களியாட்டாம் ஆடும் வயலை உடையவன் நீ. சின்னப்பய
வேலை பார்க்கிறாயே? பரத்தையோடு திரிவதினை கண்டால் ஊர் சிரிக்காதா? உன் வயலில் கம்புள் தன் இணையிடம்
எப்படி நடக்கின்றது என பார்ப்பதில்லையா? என தோழி வினவுகிறாள். கடைசியாய்
தண்டத்தையும் தூக்கிவிட்டாள். ஆம் தலைவியின் தந்தை கையில் வேல் இருப்பதை
நினைவூட்டுகின்றாள்.
கடைசியாய் தோழியின் அட்வைஸ் ஏற்ற தலைவன் தலைவியிடம் சரண்டர்
ஆகிறான். உடன் பரத்தை புலம்புகிறாள்.
குருகு எல்லா வயலிலும் மேய்வது போல் அவன் மேய்கிறான். இனி என் வீட்டுக்கு
வரமாட்டான். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்புவது போன்று வரமாட்டான், அவன்
வரமாட்டான் என்பதாக முடிக்கின்றார் ஓரம் போகியார்.
மயில்கால் கோழி
சிலரை பார்த்தவுடனே பிடிக்கும். சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும்.
தனுஷ் ஒரு படத்தில் கூறும் வசனம் இது. நம்ம மயில்கால் கோழி முதல் ரகம். இப்பறவையை
நகரவாசிகள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் என பாடத் தோன்றும் வகையில் உடல் ஊதா நிறத்தில்
அழகாக இருக்கும். நம்ம வீட்டு வளர்ப்பு நாட்டுக் கோழியை விட சிறியதாக இருக்கும். கால்கள்
மயிலுக்கு இருப்பது போன்று நீண்ட விரலும் உயரம் அதிகமாகவும் இருக்கும். முன்நெற்றி
வழுக்கையாகவும் அலகோடு சேர்ந்து அடர் சிவப்பாக காட்சி கொடுக்கும். இதன் வால் சற்று
வளைந்து காணப்படும். அதில் வெந்நிற இறகுகள் எட்டிப் பார்க்கும். அப்புறம் நம்ம
விசயத்திற்கு வருவோமா?
ஆண் நீர்க்கோழி பெண் நீர்க்கோழியை எப்படி
விநோதமாக டாவடிக்கும் இதை தானே படிக்க ஆர்வமாக உள்ளீர்கள். ஆண் நீலநீர்சேவல்
நீரில் மிதக்கும் செடியை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு பெண் கோழி முன்பு
விதவிதமாக வணங்கிய வண்ணம் சலாம் போடும்.
இதைக் கொண்டு தான் நம்ம பயக பொக்கே கண்டுபிடித்தார்கள் போல. இதை கூர்ந்து
கவனித்தால் பலவழிகளில் பெட்டை கோழியை சுற்றிசுற்றி வந்து சலாம் போடுவது நகைப்பாக
இருக்கும். டாவு டாவு டாவுடா டாவு இல்லாட்டி டையிடா என அசடு வலிந்தவண்ணம்
சுற்றும். இதை கவனித்த ஓரம் போகியார் தனது ஐங்குறுநூறு பாடலில் தலைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தலைவனுக்கு செய்தி
சொல்கின்றார்.
சரி நண்பர்களே உங்களுக்கு நீர்க்கோழி பற்றி விளக்குவதற்காக கொஞ்சம் மொக்கை போட்டிருப்பேன். கொஞ்சம் அல்ல நிறையவே என்று
நீங்கள் கூறுவது கேட்கிறது.
அடுத்து கொஞ்சம் சீரியஸாய். நம்மை கடந்து ஆம்புலன்ஸ், தீ அணைக்கும்
வாகனம் செல்லும் பொழுது முன்பின் அறியாத சக மனிதர்களின் நிலை குறித்து நமது மனம் பதைபதைக்கும்.
அது போன்றே காட்டுக் கோழிகள் மனிதனால் அறுக்கப்பட்ட மரங்கள் மண்ணில் சாயும் பொழுது
கேட்கும் ஓசையினை கேட்டு கேவி தனது பதைபதைப்பினை தெரிவிக்கின்றன என காடோடி புத்தகத்தில்
நக்கீரன் எழுதுகிறார்.
அதனால் தான் நாம் நமது
தமிழ்கடவுள் முருகனின் கொடியில் சேவலை வைத்துள்ளோம். இஸ்லாமியர்கள் சேவல் கூவும் பொழுது
இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனை ஏற்கப்படும் என்கின்றனர். இப்படி இயற்கையின் அழகுகளான நீர்க்கோழிகள் தற்பொழுது
வற்றிய ஓடைகளால் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது. எனவே நமது பகுதி நீரோடைகளை மீண்டும்
உயிர்பிப்போம். கட்டுரை குறித்த விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கும்.
உங்கள் வஹாப் ஷாஜஹான்.
99425 22470
99425 22470
திருமங்கலம்.
வாழ்த்துக்கள் ஷாஜஹான்.
ReplyDelete