தமிழகத்தில் தேர்தல்
நெருங்கும் வேளையில் அரசியல் வாதிகளின் அநாகரிக
பேச்சும் அதை வெளியிடும் ஊடகங்கள் நிலையும் மேலே தலைப்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
சமீபத்தில் விஜயகாந்த் ஊடக அன்பர்களை பார்த்து த்தூ…. என்பதில் நியாயமில்லை தான். ஏனெனில்
அவரும் கேப்டன் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு சொந்தக்காரர். ஆனால் இந்தியாவின் நான்காவது
தூண் என போற்றப்படுகின்ற ஊடகத்தின் உண்மை நிலை என்ன? ஊடகத்தில் களப்பணியாற்றுகின்ற
நிரூபர் முதல் நிறுவனத்தின் முதலாளி வரை அறம் சார்ந்த பார்வை கானல் நீராகவே உள்ளது.
இதில் ஒரு சில தனிநபர்களே விதிவிலக்கு. முழுமையாக இந்த ஊடக நிறுவனம் சரியாக செயல்படுகின்றது
என்று சொல்லும் நிலை இன்று இல்லை .
ஒவ்வொரு அரசியல்
கட்சியும் தனது கைப்பாவையாக செயல்படும் ஊடகங்களை
வைத்துள்ளன. ஒவ்வொரு ஜாதி,மத அமைப்புகளும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஊடகங்களை
கையில் வைத்துள்ளன. பொதுமக்கள் தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் தான் சார்ந்த ஊடகங்கள்
வழியாகவே பார்வையிடுகிறார்கள்.
ஊடகவியலாளர்கள் முதலில் தன்னை எந்த ஜாதி, மத அரசியல்,
கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவராக உருவாகி வருதல் வேண்டும். ஊடகங்களால் தான் சார்ந்த மத
ஜாதியினர் தவறிழைத்தால் ஜால்ஜாப்பு செய்யப்படுகின்றது. இதுமாதிரி நிகழ்வு எங்கும் நிகழவில்லையா
என தவறுகளை கண்டும் காணாதும் பிரிதொரு நிகழ்வுடன் ஓப்பிடும் செய்து மூடி மறைக்கின்றனர்.
பாரதியை போன்று தன் சாதியினையும் எதிர்த்து
எழுத முற்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் ஒரு கட்சிக்கோ ஒரு கொள்கைக்கோ அனுதாபிகளாக
இருந்தால் தங்களின் எழுத்துகளுக்கு தாங்களே கடிவாளம் கட்டியதாக அமையும்.
இங்கே ஆட்சியாளர்களின்
ஊடகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வேலையை செய்கின்றன. எதிர்க்கட்சி ஊடகம்
நடக்கும் நிகழ்வுகளில் எரிகின்ற வீட்டில் எண்ணெயை ஊற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
அரசியல் வாதிகள் எந்த ஊடக அதிபரையும் நியாயமாக ஊடகத்தினை நடத்த விடுவதில்லை. பின்பு
ஊடக அதிபர்களும் அரசியல் வாதிகளாக பரிணாமிக்கின்றனர்.
அமெரிக்காவில்
பத்திரிக்கை நடத்தும் நிறுவனம் ஊடகம் சார்ந்த தொலைக் காட்சி, வானொலி ஒளிப்பரப்பு செய்ய
தடை உள்ளது. ஏனெனில் ஊடகங்கள் அனைத்தினையும் ஒரு நிறுவனமே கையில் வைத்திருந்தால் அவர்களின்
எண்ணங்களே நாட்டின் நிகழ்வாய் போய்விடும். ஆனால் இங்கே ஆளுங்கட்சியினர் பத்திரிக்கை,
தொலைக்காட்சி என அனைத்தினையும் ஒருசேர வைத்துள்ளனர். எவ்வளவு பெரிய இயற்கை பேரழிவு
நடைபெற்றாலும் ஒன்றுமே நிகழாதது போல் காட்டும் நிலை வந்துவிட்டது.

அரசு விளம்பரங்கள்
அரசிற்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டு வருவது தொடர்கதை. இதற்காகவே பல
ஊடகங்கள் ஆளும் கட்சியின் ஜால்ராக்களாக மாறி வருகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராய் எழுதுவது
என்பது ஆட்சியின் கடைசி ஐந்தாவது வருடத்தில் தான் நிகழ்கின்றது. மிகப்பெரிய தொழில்நிறுவனங்கள்
கொடுக்கும் விளம்பரம் மூலம் தான் பத்திரிக்கைகள் நடைபோடுகின்றன. இந்த பெருமுதலாளிகளுக்கு
எதிராக ஊடகம் எப்படி எழுதும்.
விஜய் மல்லையா
வைப்பற்றி ஊடகங்கள் எழுதியவுடன் அவரின் டூவிட்டர் பதிவு எப்படி இருக்கின்றது பாருங்கள் நண்பர்களே.
பல வருடங்களாக தன்னிடம் பெற்ற உதவிகள், தான் காட்டிய தயவுகள், தான் அளித்த இட வசதிகள் ஆகியவற்றை செய்தி ஊடக அதிபர்கள் மறந்து விடவேண்டாம் என்றும் மல்லையா எச்சரித்துள்ளார்.
நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் காரணமாக இருந்தாலும்
இவற்றை சுட்டிக்காட்டி சரிசெய்யும் பெரும் பொறுப்பு ஊடகங்கள் கையில் உள்ளது. ஒரு பகுதியில்
தொடர்குற்றங்கள் நடைபெறுகின்றது என்றால் அந்த பகுதியின் அரசு எந்திரங்கள் சரியாக செயல்படாததே முதல் காரணமாக இருந்தாலும் ஊடகங்கள் சரிவர பணியாற்றவில்லை
என்பது அடுத்த காரணமாக அமைந்து விடுகின்றது. வாசிப்பாளர்களும் பிரபல நாளிதழ்களை தவிர்த்து
துணிவுடன் எழுதும் சிற்றிதழ்கள் மற்றும் பகுதி ஊடகங்களுக்கு முக்கியத் துவம் தரவேண்டும்.
பொதுஜன மக்களின் உள்ளத்து வெளிப்பாடே ஊடக செய்தி.
எனவே அந்த த்தூ…. என்ற எச்சில் நம்மீதும் பொழிந்தாக எண்ண வேண்டும். பொதுமக்களாகிய நாமும்
ஊடகங்கள் அத்துமீறும் பொழுது கண்டித்து நமது எதிர்ப்பினை கடிதங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு
தனித்தனியே தெரிவிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும்
ஊடகங்கள் மிகப்பெரிய சவாலாக அமைய வேண்டும், உலகத்திற்கு அறிவுரைகள் கூறும் ஊடகங்கள் முதலில் தங்களுக்கு தாங்களே அறிவுரைகளை செயல்வடிவம்
கொடுக்க முன்வர வேண்டும். அரசுகள் ஊடகங்களை கண்டு அஞ்சியது முன்னொரு கால பழங்கதையாகி
விட்டது. ஊடகங்கள் மக்கள் மதிக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலுடன்.
வஹாப் ஷாஜஹான், திருமங்கலம். 99425 22470
ஊடகங்கள் பணத்திற்கு விலைபோய் விட்டன.....உங்கள் பதிவு சாட்டையடி...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து வலைப்பூகளை கவனித்து படித்து கருத்திடும் தங்கள் பணி சிறப்பானது. தொடரட்டும்...
ReplyDelete