வருமானம், வியாபாரம் மீதான விசாலப்பார்வை விருந்து
என்ற தமிழர் பாரம்பரியத்தை விடைபெற செய்துவிடுமோ என்று கவலை கொள்கின்ற எண்ணில்
அடக்காதோர்களில் நானும் ஒருவன். விருந்து என்றவுடன் விரண்டோடும் காலமாய் நகர்புறம்
உள்ளது. சமீபத்தில் கிராமப்புற நண்பர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்திற்குச்
சென்றோம்.. நண்பர் கோழி கறிக்கடை நடத்துபவர். நான் சென்றதன் ரகசியம் உங்களுக்கு தெரிந்திருக்குமே!.
நகரின் வெளிப்புற பகுதியில் குடியிருப்பு. வியாபார நோக்கில் சுமார் 20 வெள்ளாடுகளும்,
50க்கும் மேற்பட்ட நாட்டு சேவக் கோழிகளும் 4 வாத்து சில புறாக்கள் என கண்களுக்கு எங்கு பார்த்தாலும் உயிரினங்கள் மகிழ்வாய்
காட்சித் தந்தன. நாங்கள் சென்ற நேரம் வளர்ப்பு பிராணிகளின் பிரசவ காலமோ என்னவோ பலவும்
குட்டி போட்டிருந்தன. இதில் ஆடு முதல் நாள்
தான் குட்டி போட்டிருந்தது. நாய் சிலநாட்களுக்கு முன்பு தான் குட்டி போட்டுள்ளது. அவர்கள்
வீட்டை ஒட்டிய மரத்தில் அணில் குஞ்சி பொறித்திருந்தது. மற்றொரு மரத்தில் காக்கா முட்டையிட்டு
குஞ்சு பொறிந்து குஞ்சுகள் வெளியே வந்து கொண்டிருப்பதாக மாடியில் இருந்து லைவ் ரீலே
குட்டீஸ்கள் செய்தன.
எந்த பறவையின் கூடுகளையும் நான் படம் பிடிப்பதில்லை.
அத்துடன் அதன் முட்டைகள், குஞ்சுகள் என்றால் அறவே தவிர்த்து விடுவேன். எனவே அனைவரையும்
கீழ் இறங்கக்கூறினேன். தொடர்ந்து அழைத்தன குட்டீஸ்கள். சரியென மாடிக்கு சென்றேன். அங்கு காக்கா கூடானது நல்ல கேபிள் வயர்கள்,
கம்பிகள் என மிகவும் வலுவாக கட்டியிருந்தது .நான்கு முட்டைகள் பொறிக்கப்படாமலும் ஒரு
முட்டையிலிருந்து குஞ்சி வெளியே வந்து கொண்டிருந்தது. அழகான இக் காட்சிகளை படம் பிடிக்காது
இருந்தேன். ஆனால் அந்த வீட்டு குட்டீஸ்கள் அந்த காக்காவை நீங்கள் தொந்தரவு செய்யாதது
இருக்கட்டும் அது எங்கள் வீட்டில் எத்தனை முறை கோழி முட்டை,கோழிக் குஞ்சிகளை களவாடி
உள்ளது தெரியுமா? என புகார் பிராது (காண்டமே ) கொடுத்தனர். பக்கத்து மரத்தில் ஜோடியாக காக்கைகள் அமர்ந்து நிகழ்வை
கவனித்தன. ஆனால் காக்காவும் யாரையும் கொத்த முயற்சிக்க வில்லை. அபல குரலும் எழுப்பவில்லை.
காகம் பாவம் இந்த நேரத்தில் கூட்டில் அது இருப்பது தான் நல்லது எனக்கூறி குட்டீஸ்கள்
அனைவரையும் மாடியிலிருந்து கீழ் இறக்கினேன்.
ஆட்டு குட்டிகள் இரண்டும் உடலில் கருப்பு மற்றும்
ப்ரவுன் நிறங்களுடன் வெள்ளை கலந்து அழகுற காட்சியளித்தன. உடன் குட்டீஸ்கள் இரண்டிற்கும் முறையே கருவாச்சி, புரவ்னி என சிறிய பெயர்சூட்டு விழா நடத்தி மகிழ்தனர்.
ஆட்டுக்குட்டிகளை கொஞ்சம் பெரிய மரப்பெட்டியில் விட்டனர். அதன் வாசலில் வாத்து காவலுக்கு
நின்றது. சிறு குட்டீஸ்கள் மரப்பெட்டி அருகே சென்றால் விரட்டியது வாத்து.
இதென்ன வாத்து
ஆடுகளின் தாய் போல் செயல்படுகின்றது என்றேன். அதற்கு நண்பர் “நம்ம பழக்க தான். வாத்து
குஞ்ச பெட்டில வைச்சு வைச்சு எடுத்த மரப்பெட்டிக்கு செக்யூரட்டி பொறுப்ப வாத்து தான
எடுத்துக்கும்” என்றார். சரி இவ்வளவு அழகான இக்குட்டிகளின் தாய் ஆடு பற்றி கேட்க மந்தைகளுடன்
மேய சென்று மாலை 7மணிக்கு தான் திரும்பும் என நண்பர் கதைதார். குழந்தை பெற்ற தாய்க்கு
பிரசவ விடுப்பு கிடையாதா? என கேட்க மேய்ச்சலுக்கு சென்று வந்தால் தானே நன்றாக பால்
கொடுக்கும் என்றார்.
மதிய உணவுக்காக நாய்கள் அழைக்கப்பட்டன. ஏழு நாய்கள்
ஓடி வந்தன. இத்தனை நாய்கள் எதுக்கு? நாய் விற்பனையும் நடக்குதா இங்கே? என கேட்டேன்.
அப்படியெல்லாம் இல்லப்பா. முதல்ல ஒரு ஜோடி நாய் வளர்த்தேன். பிறக்குற ஆண் நாய் எல்லாம்
காணாமல் போய்விடும். பொட்டை நாய்கள் தான் பெரும்பாலும் இங்கே தங்கிடுனார். பாருடா நாயிலும்
பெண்கள் பாரம் தானா? என் சமூகபார்வை கொஞ்ச வெளியே எட்டி பார்த்து அட்டண்டன்ஸ் போட்டது.
இப்ப பத்து நாய்க்கும் மேல இங்க இருக்குப்பா என்றார். பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே
நாய்களுக்கு மதிய உணவு வந்தது. நாய்களுக்கு என்ன சாப்பாடு என்றேன். பிரியாணி தான் என்றார்.
கோழிகறிக்கடையில் மிஞ்சும் கறிகளும் கோழி கால்களும் இன்ன பிற அயிட்டங்கள் கொண்டு தினமும்
பிரியாணி தான் என்றார். வாசனை மூக்கை துளைத்தது. நாய்களுக்கு அரிசி உணவை குறைத்து மாமிசமே
அதிகமாக கொடுத்து வருவதாக கூறினார். கறிக்கடை நடத்தினாலும் உயிரினங்கள் மீது அவர் கொண்ட பாசம் கண்டு வியந்தேன். நாய்கள் பிரியாணியை
ஒரு பிடி பிடித்து பீடா போடாத குறையுடன் கலைந்தன.
மதியம் 3 மணியளவில் நாய்கள் ஒருங்கிணைந்து குரைத்தன.
என்னவென வீட்டிலிருந்து வெளியே எட்டி பார்தேன். பெட்டை ஆடு ஒன்று நின்றது. நாய்கள்
நெருங்கி குரைத்தன. நண்பர் அட சிறுக்கி! குட்டிகளை பார்க்காமல் இருக்க முடியவில்லையா?
என்றார். நான் புரிந்து கொண்டேன். குட்டிகளின் தாய் ஆடு தான் இதுவென. அபிமன்யூ சக்கரவியூகத்தினை
உடைத்து போர் புரிந்தது போல் குட்டிக்கு பால் கொடுப்பதற்காக மேய்ப்பனுக்கும் நாயுகளுக்கும்
டிமிக்கி கொடுத்து வந்திருந்தது பின்னால் மேய்ப்பன் வந்ததும் தான் தெரிந்தது. நான் பாவம்ப்பா தாய் ஆடு பால் கொடுக்க
விடுங்கள் இங்கேயே இருக்கட்டும் என்றேன். குட்டிகளும் தாய் சப்தற்கு மரப்பெட்டியிலிருந்து
பதில் சப்தம் எழுப்பின. ஆட்டுக்கூட்டத்தில்
சில ஆடுகள் தாய் ஆட்டின் வழியில் வீடு திரும்ப பார்த்தன. மேய்ப்பனுடன் சேர்ந்து நாய்கள்
லாவகமாக திருப்பி மேய்க்க அழைத்து சென்ற காட்சியும் ஆடு பால் கொடுத்த காட்சியும் மனதினை
விட்டு அகலமறுக்கின்றன.
தாய் ஆட்டின் பாசம் ஒத்தே இன்று வருமானத்திற்காக பிரசவத்திற்கு பின்
குழந்தையை வீட்டில் விட்டு உழைக்கச் செல்லும் தாய்மார்கள் நிலையை நினைத்து வருந்தினேன். இந்த வாரம் அதாவது
ஆகஸ்டு முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக சர்வதேச
அளவில் கடைபிடிக்கப்படுகின்றது நண்பர்களே. தாய்ப்பால் குழந்தைகளின் வளர்ச்சி, நோய்
எதிர்ப்பு, அறிவுதிறன் வளர்ப்பு என சகலவிதமான போஷாக்கும் நிறைந்த பொக்கிஷம் என்பது
நாம் அனைவரும் அறிந்ததே. மத்திய சுகாதார அமைச்சகம்
வெளியிட்ட ஒரு அறிக்கையில் தமிழகத்தில் சுமார் 18% குழந்தைகள் மட்டுமே முழுமையாக தாய்ப்பால்
பெறுவதாக கூறுகின்றது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மையான குழந்தைகள்
தாய்ப்பாலுக்கு ஏங்கி வருகின்றன. நம் வருங்கால சமூகம் தாய்பாலின்றி வளர்ந்தால் போஷாக்கு
குறைந்து உலகளவில் போட்டியிட முடியாமல் பின்தங்க
வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சில தாய்மார்கள் தங்கள் அழகு குறைந்து விடுவதாக எண்ணி
பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர்.
நம் மக்கள் கரையான் புற்றுகளில் பாம்பு வந்து பால்
குடிக்கும் என பால் ஊற்றுவர். ஆனால் உண்மையில் பாம்புகள் பால் குடிப்பதில்லை என்கின்றனர்
விலங்கியல் ஆர்வலர்கள். அதே நேரத்தில் சரியாக பால் கொடுக்கும் தாய்மார்களை புற்றுநோய்
தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆம் நண்பர்களே ஊட்டசத்துகள் குறைந்த
இக்காலத்தில் தாய்ப்பால் எல்லா குழந்தைகளுக்கும் அவசியமானது என விளக்கும் நோக்கத்துடன் இக்கட்டுரையை படைக்கின்றேன். விருந்திற்கு சென்று
விபரம் பல கற்றது போல மேலான தங்கள் விமர்சனங்கள் மூலம் புதிதாக கற்க விரும்பும் உங்கள்
உழைப்பாளி..
புற்றுக்கு
பால் தேவையில்லை.
பால்
கொடுத்தால் புற்றில்லை.
ஆழகுக்குட்டிகளின் செல்லங்கள்,,,/
ReplyDeleteஇவையெல்லாம் நம் மண்ணின்
சொத்துகளும் பொக்கிஷங்களுமாகும்/
மிக்க நன்றி விமலன் சார்
ReplyDelete