Tuesday, 25 November 2014

மாங்குளம் பசுமைநடை


                         (மீனாட்சிபுரம்)
பயணங்களே  வாழ்க்கை பாடத்தின் பள்ளி. தாம் வாழும் பகுதிகளின் வரலாறு அறியாதவன் மனிதன் என்பதற்கே அருகதையற்றவன். பறவைகள் பூமி முழுமைக்கும் கட்டுப்பாடின்றி பறந்து திறிந்து பயணிகின்றன.  மனிதனோ பயணங்கள் மறந்து கூண்டுகிளிகளாய் வெந்ததை தின்று விதிவந்தால் சாவு என மாறி போகின்றான். தோழர் சேகுவேரா வின் இளமைக்கால மோட்டார் சைக்கிள் பயணங்களே போராட்டங்களுக்கான விதை.

“பயணங்களே மனித மனங்களின் கசடு போக்கும் மந்திரம்”
                                எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.

இந்த மந்திரத்தின் சூட்சமம் தெரிந்ததால் நகரின் தொன்மை வாய்ந்தப்பகுதிகளை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது “பசுமைநடை”.  23.11.2014 அன்று 42 வது பசுமைநடையாக மதுரை மாங்குளம் செல்வதாக பசுமைநடைக்குழு முடிவுசெய்தது.


பனி பொழிவு அதிகமான இந்த மாதத்தில் மனைவி, குழந்தைகள் தவிர்த்து நான் மட்டும் செல்ல முடிவெடுத்தேன். காலை பிள்ளைகள் எழுவதற்கு முன்பு கிளம்பி பசுமைநடையில் கலந்து கொள்வோம் என நினைத்தேன். ஆனால் நடந்ததோ தலைகீழ். பள்ளிநாட்களில் காலையில் பிள்ளைகளை தூக்கத்திலிருந்து விழிக்கச்செய்யவதற்கென்றே தனிப்பாடம் படிக்கவேண்டும். ஆனால் ஞாயிறு காலை 5மணிக்கு அலாரம் அடிக்கும் முன்பு என்னை எழுப்பின என் செல்லங்கள் இரண்டும். என்னப்பா பசுமைநடைக்கு வாங்கனு நண்பர்களை அழைத்தீர்கள் நீங்களே இன்னும் என்ன தூக்கம்? வாங்க போவோம் என்றனர். பனியெல்லாம் உங்களுக்கு ஒத்துவராது நீங்கள் தூங்குங்கள் நான் போய்வருகின்றேன் என்றேன். ஊகூம் நாங்களும் வருவோம் என்று அடம் பிடித்தனர். எப்பொழுதும் போல் அவர்களுக்கே வெற்றி.

எனது ஆசிரியர் திரு.சங்கரன், திருமங்கலம் முத்துகிருஷ்ணன் இருவரும் பசுமைநடைக்கு கார் மூலம் வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர். அவர்களுடன் இணைந்து காரில் மாங்குளம் பயணித்தோம். கடந்த 10 நாட்களாக கதிரவனின் உதயத்தினை தாமதப்படுத்திய வெண் மேகபனிகள்  இன்று கொஞ்சம் மறந்து தூங்கி போயிற்று போல. செவ்வாடை அணிந்த கதிரவனின் உதயம் மேகங்களுக்கிடையே துள்ளி குதித்து எங்கள் காருடனே ஓட்டப்போட்டி நடத்தி வந்தது . 

திருப்பரங்குன்ற கண்மாயில் நாமக்கோழியும் நீர்காக்கைகளும் மீன் பிடிப்பதில் போட்டியிட்டு வந்தன. மரங்களுக்கு மேலே கொக்குகளும் நாரைகளும் ஒற்றைக்கால் தவம் புரிந்தன. மரங்களின்  இலைகளில் இரவினில்  மேகமிட்ட நீரினை கதிரவன் முத்துக்களாக மாற்றி கொண்டு இருந்தான். காரின் பின் இருக்கை இரண்டுபக்க ஜன்னல்களையும் குட்டீஸ்கள் பிடித்து கொள்ள புகைப்படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நகரங்களின் பகுதிகளை இருவருக்கும் சொல்லி விளக்கி கொண்டேவந்தேன் மாட்டுதாவணி பஸ்நிலையத்தில் எழுத்தாளர் ஜே.ஷாஜஹானையும் பயணத்தில் சேர்த்து பறந்தது வாகனம். எனது மகள் அப்பா யானைமலைக்கு சென்று எவ்வளவு நாளாயிற்று மீண்டும் திரும்பும் பொழுது  மலை ஏறிவிட்டு செல்வோம் என்றாள். மலை எவ்வளவு அழகுப்பா என்றான் மகன். யானை மலையினை கடந்து செல்லும் பொழுதெல்லாம் மதுரையின் காவல் தெய்வமாகவே எண்ணி பார்த்துமகிழ்வேன். அப்பழக்கம் எனது குழந்தைகளும் தொற்றிக்கொண்டது மனமகிழ்வினை தந்தது. மாட்டுதாவனியிலிருந்து சற்று தொலைவில் பாலத்திற்கு இடதுபுறம் சிறிய குறுக்குசாலையில் மாங்குளம் (மீனாட்சிபுரம் ) என்ற போர்டு உதவி கொண்டு பயணித்தோம்.

இரண்டு புறங்களும் விவசாயவிளைநிலங்கள் அழகுற காட்சியளித்தன. ஒரு சிறு மலையினை கிரானைட் மாபியாக்கள் குதறிவைத்து இருந்தது பார்க்க கவலையளித்தது. வழியெங்கும் பனைமரங்கள் வரிசையாக அழகுற காட்சியளித்தன. இது மதுரை தானா எனச்சந்தேகம் எழுப்பியது. இடையிடையே ஆலமரங்கள் சில வந்து ஆச்சிரியத்தினை மேலும் அதிகப்படுத்தின. கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. எனது மகள் என்னப்பா காரில் செல்வோம் என்றுகூறிவிட்டு இப்படி குதிரையில் செல்கின்றோம் என கிண்டலாக கேட்டாள். உடன் ஜெ.ஷாஜஹான் அவர்கள் கவிஞர் மகள் என நிரூப்பிக்கிறதுப்பா என கூறினார். இவ்வளவு மோசமான சாலையில் தினமும் டவுன்பஸ் எப்படிதான் சென்று வருகின்றது என்று தெரியவில்லை.

ஊரினை அடைந்தபொழுது பசுமைநடையினரின் கூட்டம் இந்தமுறை சற்று அதிகமாகவே தெரிந்தது. பசுமைநடையாளர்கள் அனைவரும் இன்முகத்துடனே வரவேற்று நலம் விசாரித்து கொண்டனர். வாகன போக்குவரத்துக்கு சிரமமின்றி வந்திருந்த 10க்கும் மேற்பட்ட கார்களை வரிசைப்படுத்தி நிறுத்தியிருந்தது பசுமைநடையினரின் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது. ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புன்முறுவல் செய்து வரவேற்றனர். வீடுகள் அனைத்தும் அளவில் சிறியவைகளாகவே இருந்தன. இது ஆடம்பர செயல்பாடுகள் எதுவுமின்றி வாழ்வியல் கோட்பாடுகளை கிராமமக்கள் கடைபிடிப்பதாக தோன்றியது.  எல்லாவீடுகளிலும் ஏதாவது ஒருவகையில் மாடு, ஆடு, வான்கோழி, கோழி, நாய்கள் என கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.




பசுமைநடையாளர்கள் அனைவரும் மாங்குளம் ஊரின் மலைப்பகுதியினை அடைந்தோம்.தொல்லியல் துறையினர் மலைமீது அமைந்துள்ள கற்படுகைகள் பற்றி விளக்கி போர்டுகளை அமைத்திருந்தனர். 


இந்த மலையினை கிராமத்தினர் கழுகுமலை ஓவாமலை என அழைக்கின்றனர்.  60 வயதிற்கும் மேற்பட்ட வயதானர்கள் முதல் எனது பிள்ளைகள் உட்பட சிறுவர்களும் மகிழ்வாக மலையேறினர். மலை நல்ல உயரமாகவும் பல இடங்களில் படிக்கட்டுகள் இன்றியும் சில இடங்களில் செங்குந்தாகவும் இருந்தது. பசுமைநடையினர் மலை ஏற்றங்களில் கஷ்டமான இடங்களில் நின்று வயதானவர்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவினர். செல்லும் பாதையெல்லாம் நரந்தை செடிகள் வளர்ந்து எலுமிச்சை வாசனையுடனே காலை பொழுதினை சுறுசுறுப்பாக்கின.



மலை மீது ஏறியவுடன் நடையாளர்கள் அனைவரும் ஒருங்கே அமர்ந்து தொல்லியலாளர் கண்ணன் அவர்களின் உரையினை கேட்டனர். மதுரையானது சமணர்களின் ஆதி தாயகம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சமணம் சார்ந்த தமிழ்பிராமி கல்வெட்டுகளில் காலங்களால் தொன்மையானது நாம் பார்த்து கொண்டிருக்கும் மாங்குளம் என்று விளக்கினார். 






தொல்லியலாளர் ஐயா சாந்தலிங்கம் அவர்களும் தனது “மதுரையில் சமணம்” என்ற நூலில் மாங்குளம் பற்றிய விளக்கமே முதலில் வைத்திருக்கின்றார். வழக்குரைஞர்  திரு லஜபதிராய் அவர்களின் ஆங்கில புத்தகம் MADURAI (MATHIRAI) புத்தகத்திலும் மாங்குளம் மலைப்பகுதியினை அழகிய புகைப்படத்துடன் விளக்கியுள்ளார். ஒருகாலத்தில் மிகப்பெரிய சமண மையமாக விளங்கிய இடத்தில் அமர்ந்திருக்கின்றோம் என்பதில் பெருமை கொண்டேன். எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் பசுமைநடையாளர்களை வாழ்த்தியும் வந்திருந்த   சமணர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தினார். பின்பு அனைவரும் ஒருங்கினைந்து மலையிலிருந்து கீழிறங்கினோம். 






ஊரின் மந்தைப்பகுதியில் காலை உணவினை பசுமைநடையாளர்கள் வழங்க மரநிழலில் அமர்ந்து குழந்தைகளுடன் உண்டது புதிய அனுபவமாக அமைந்தது. குரங்குகள் பல எங்களை நோக்கி படையெடுக்க ஊர் பெரியவர்கள் சிலர் கம்புடன் உணவு உண்ண காவல் காத்தனர். எனது குழந்தைகள் உட்பட பலரும் குரங்களுக்கும் உணவினை கொடுத்து மகிழ்ந்தனர்.

மாதத்தில் ஒரு ஞாயிறு பசுமைநடையின் பயனுள்ள பொழுதாக குழந்தைகளுடன் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. 
பின்பு பசுமைநடையாளர்கள் அடுத்த பசுமைநடை எப்பொழுது என்ற ஆவல் வினாவுடன் பிரியமனமின்றி கலைந்து சென்றனர். 
என் பிள்ளைகளை போன்றே அடுத்த பசுமைநடையை எதிர்நோக்கியவனாய் வழி மேல் விழி வைத்து காத்திருக்கும்
                                     உங்கள் வஹாப் ஷாஜஹான்,
                                             திருமங்கலம்.



2 comments:

  1. அருமையான பதிவு அண்ணா.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. படங்களோடு பயண விளக்கமும் அருமை...

    ReplyDelete