Thursday, 20 November 2014

சோழவந்தான் பறவை பார்வை


மதுரையின் சோலை சோழவந்தான். சிறு வயதில் மேலக்கால், திருவேடகம் தர்ஹாக்களில்  இரவெல்லாம் தங்கி சந்தனக்கூடு பார்த்து மகிழ்வேன். காலையில் வைகை ஆற்றில் குளிப்பதற்காக சோழவந்தான் வந்திருக்கின்றேன். பார்க்க காவேரி ஆற்றுப்படுகையை போன்றே பச்சைபசேலென்று இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் சென்ற பொழுது மிகுந்த வறட்சியாக இருந்தது. மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். மீண்டும் இந்த மண் செழிக்க வழியிருக்கின்றதா என எண்ணினேன். 

சென்ற 9.11.2014 அன்று இறகுகள் அமைப்பின் சார்பாக பறவை பார்வையிட மீண்டும் சோழவந்தான் புறப்பட்டேன். செல்லும் வழியெல்லாம் மெல்ல மெல்ல வறட்சிகள் நீங்கி வருவதினை கண்டேன். கண்மாய்களில் தண்ணீர் கொஞ்சமெனும் இருந்தது ஆறுதல். பறவைகள், விளைநிலங்கள், மனிதர்களை பார்வையிடுகையில் அனைவரும் மகிழ்வாய் எனக்கு காட்டியது. இந்தப்பதிவினை நீங்கள் சோழவந்தானை பறவை பார்வை பார்ப்பதாக எண்ணினாலும் நலம். தொடர்ந்து சோழவந்தானில் நான் பார்த்த பறவைகளையும் விவசாய விளைநிலத்தினையும் வாங்க பார்க்கலாம்.


சோழவந்தான் பெயர் காரணம்
விவசாயிகளிடம் பேசுகையில் மகிழ்வாய் இருந்தாலும் “ஏதோ மனதைரியத்தில் நகைநட்டுகளை அடகுவைச்சு விவசாய வேலைய ஆரம்பிச்சுடோம் தம்பி இந்த முறை நல்லாயிருக்கும் நினைக்குறோம்” சொன்னாங்க. இயற்கைவிவசாயம் குறித்து அனைத்து விவசாயிகளிடமும் பேசினேன். 

கலந்து கட்டி தான் தம்பி அடிக்கின்றோம். இல்லண்னே முழுசா இயற்கை விவசாயத்திற்கு வந்திடுங்க சொன்னேன். நிறைய பேர் பேசறாங்க தம்பி யோசிப்போமுனு சொன்னாங்க. அடுத்ததாக ஊர் பேருக்கு என்னனே காரணமுன்னு கேட்டேன்.


தம்பி சோழன் மன்னன் வருகை புரிந்ததாக முதல் காரணமும், இரண்டாவதாக தனது மண்ணை போன்றே செழிப்பாக இருப்பதால் சோழவந்தானை புகழ்ந்தான் எனவும் மக்க பேசிக்கிறாக. சோழன் புகழ்ந்தான் என்பது அன்றைய பேச்சு வழக்கில் “சோழன் உவந்தான்” தற்போதைய பேச்சு வழக்கில் சோழவந்தானாக மாறியுள்ளதாய் கூறினர். சோழவந்தானுக்கு சனகபுரமுனு பேர் இருந்ததாகவும் அதனால் தான் சோழவந்தான் மாரியம்மன் கோவில் ஜனகை மாரியம்மன் என அழைக்கப்படுவதாக கூறினர்.

காலை 6மணிக்கெல்லாம் ஜனகை மாரியம்மன் கோவில் வாசலினை அடைந்தோம். உடன் தம்பி இளஞ்செழியன் வந்திருந்தான். முன் இரவே வந்து இரவாடி பறவைகளை பார்வையிட்டதாக  இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் கூறியது வியப்பினை அளித்தது. அழகு என்ற சோழவந்தான் மண்ணின் மைந்தர் எங்களுக்கு  ஆவலுடன் பறவைகளை காட்டியது  மகிழ்வாக இருந்தது


பறவை பார்வையிடவந்திருந்தவர்களை இரண்டு அணியாக பிரிக்கப்பட்டது. டாக்டர் ரவி தலைமையிலான அணியில் நானும்தம்பி இளஞ்செழியனும் இணைந்தோம். பறவை பார்வையாளர்கள் கொண்டுவந்திருந்த புகைப்பட கருவிகளை கண்டு வியந்தோம். கிரிக்கெட் மைதானங்களில் பயன்படுத்தும் மிகப்பெரிய கேமராக்களை ஒத்த கேமராக்களை கொண்டுவந்திருந்தனர். 

முதலில் வட கரைப்பகுதியினை நோக்கி நகர்ந்தோம். அப்பொழுது மஞ்சள் நிற அழகிய பறவையினை கண்டோம். உடன் அனைவரும் தங்களிடம் உள்ள தொலைநோக்கி (பைனாகுலர்) பெரிய கேமரா வசதியில் படம் மற்றும் பார்வையிட்டனர். நானும் தம்பி இளஞ்செழியனும் வைத்திருப்பதோ கையடக்க கேமராக்கள் அதை எடுப்போமா? வேண்டாமா? என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 

பறவையோ மிக அழகாக இருந்தது. நான் தைரியம் வந்தவனாக தம்பி வேறுவழியில்லை படத்தினை எடுக்கின்றேன். அடுத்த முறை வரும்பொழுது பிவிசி பெரியசைஸ் பைப்பினை வாங்கி முன்னே இணைத்து கொள்வோம் என நகைச்சுவையாக பேசினேன். பக்கத்தில் இருந்த புகைப்பட கலைஞர்கள் குணா அமுதன் மற்றும் செல்வம் ராமசாமியும் எங்களுடன் நகைச்சுவையில் இணைந்து கொண்டனர். தொடர்ந்து பறவைகள் பார்வையிடப்பட்டது. 

இதில் ஒரு சிட்டு பறவை எனது இருசக்கரவாகனத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தது மிக அருமையாக இருந்தது. பின்பு காலை உணவினை முடித்து நானும் இளஞ்செழியனும் தென் கரை பகுதியினை அடைந்தோம். அங்கும் பறவைகளை கண்டு மகிழ்ந்தோம். 


      தொடர்ந்து கொஞ்சம் வயல்வெளி இயற்கைகாட்சிகள்












    அடுத்ததாக தொடர்ந்து பறவைகள் பார்போம் நண்பர்களே









            மீண்டும் கொஞ்சம் வயல்வெளி இயற்கைகாட்சிகள்





















              தொடர்ந்து கொஞ்சம் விவசாயப்பணிகள்












பின்பு மேலக்கால் வழியாக திருமங்கலம் திரும்புகையில் வழியெங்கும் இயற்கை காட்சிகள் கண்டுமகிழ்ந்தோம். மேலக்கால் மலைமீது இரண்டு ஆடுகள் அழகுற நின்று காட்சியளித்தது. வீடு திரும்பிய பின்பும் சோழவந்தான் மனதிலிருந்து அகலாமல் இருந்தது. புகைப்படங்களை பார்த்து வீட்டில் ஏக களோபரமே நிகழ்ந்தது. அடுத்த முறை அழைத்து செல்வதாக வாக்களித்துள்ளேன். அப்ப நீங்களும் சோழவந்தான் பயணத்திற்கு தயாராகுங்கள். கீழ்காணும் அணைத்து புகைப்படங்களையும் கண்டுகளியுங்கள். இந்த பயணம் மூலம் தமிழகமெங்கும் நீர்வளம் தொடர்ந்து கிடைத்திட வகைசெய்வதன் அவசியத்தினை அறிந்தேன். அதனை உரியவகையில் பயன்படுத்தி கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு கிடைக்க அரசு ஆவண செய்யவேண்டுகிறேன். நம் பங்கிற்கு இயற்கை அரண்களை காப்போம். இயற்கை விவசாயத்தினை வளர்த்திட உறுதியேற்போம். கட்டுரை பற்றிய தங்களின் மேலான ஆலோசனை மற்றும் கருத்துகளை எதிர்நோக்கும்
                             உங்கள் வஹாப் ஷாஜஹான்,
                               திருமங்கலம்.
                                
விரைவில் 16.11.2014 சிவரக்கோட்டை பறவை பார்வை



No comments:

Post a Comment