Saturday, 15 November 2014

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2


நாணல் நண்பர்களும், இறகுகள் அமைப்பினரும் இணைந்து நடத்திய மதுரை சூழலியல் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர் பார்வை. இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் அவர்கள் சூழலியல் சார்ந்த பறவையியல் களஆய்வு குறித்து உரையாற்றினார். அவைகள் பின்வருமாறு. காலநிலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பறவைகள் தங்கள்  தங்குமிடங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த நிகழ்வினை வலசை போதல் என்பர். ஒருபகுதியில் பறவைகள் வரவுகளின் எண்ணிக்கையையும் தன்மையும் கொண்டு வரவிருக்கும் மழை அளவினை அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவியின் அழிவில் செல்போன் டவர்கள் ஒரு காரணமாக அமைந்தாலும் நம்முடைய வாழ்வியல் நடைமுறையும் ஒரு பெரும் காரணமாகும். சென்ற காலங்களில் கோதுமை,அரிசி  மாவு தயாரிக்க வீட்டில் பெண்கள் கோதுமையினை காயவைத்து அரைக்க கொடுத்து வாங்குவர். பலசரக்கு கடையினர் பலதானிய வகைகளை பிரித்து காய வைத்து முன்பு வழங்கினர். ஆனால் இன்று ஷாப்பிங் மால்கள் மூலம் பாக்கெட் பொருட்களாக வாங்கும் பழக்கத்திற்கு வந்ததால் குருவிகளுக்கு சிதறும் தானியங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.



அதே போன்று முந்தைய காலங்களில் காலி இடங்களில் இருந்த புல்பூண்டுகளையும், புழுக்களையும் விரும்பி பறவைகள் உண்டன. புழு பூச்சிகளே அதிகபுரதச் சத்து மிகுந்ததாக பறவைகளுக்கு அமைந்திருந்தது. அடுத்ததாக கூரைவீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் நாம் வாழ்ந்த காலங்களில் குருவி நம்முடனே வாழ்ந்தது. நாம் கட்டி(செண்டிரிங்) கட்டிடத்திற்கு மாறிய போது குருவிகளால் தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை.அதே நேரத்தில் புறாக்கள் கட்டிடங்களில் வாழப்பழகிக்கொண்டது. அதன் காரணமாக நகரங்களில் புறாக்கள் அதிகரித்து உள்ளன. நகரங்களில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து பார்த்து மகிழ்கின்றனர்.உண்மையில் பறவைகளின் கீச்சுகுரல்கள் அழுகைகுரல்களாகவே நமக்கு கேட்கின்றன.

மதுரையை சுற்றி நாமக்கோழிகள் அதிகரித்துள்ளன. நாமக்கோழி சாக்கடையில் வளரும் பூச்சிகளை உண்ணக்கூடியது. இதிலிருந்து  மதுரையின் சூழலியல் மிகுந்த கவலைதரக்கூடியதாக  அமைந்துள்ளது தெளிவாகிறது. மேலும் ரவிந்திரன் பேசுகையில் தனது பள்ளிகாலங்களில் மதுரையில் ஒருசில பகுதிகளில் ஆயிரம் பருந்துகளுக்கு மேல் வாழ்ந்து வந்ததாக  கூறினார். காமராசர் சாலையில் பல அரசமரங்கள் இருந்ததினை குறித்தும்கூறினார். மேலும் இலையுதிர்காலங்களில் எக்ஸ்ரே போன்று மரங்களில் காக்கையின் கூடுகள் தெரிய வரும். அது 200 முதல் 300 கூடுகள் வரை அமைந்திருந்ததினை கூறி நம்மை நமது பின்பருவத்திற்கு அழைத்து சென்றார். தற்போது நகரத்திற்குள் காக்கைக்கூட்டம் எங்குமே காண முடியவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தினார். தற்போது விளம்பர போர்டுகளில் காக்கைகள் கூடுகட்டி வரும் அவலத்தினையும் விளக்கினார்.

மதுரையில் விற்கப்படக்கூடிய கீரைவகைகள் பெரும்பாலும் அவனியாபுரம் பகுதியில் விளைவிக்கப்படுபவைகளாகும். மதுரையின் கழிவுநீர்கள் அனைத்தும் ஒன்று சேரக்கூடிய இப்பகுதியில் விளையக்கூடிய கீரைகள் சத்துகளை கொடுப்பவையாக இருக்க வாய்ப்பில்லை எனக்கூறினார்.. மேலும் மதுரையின் சாமநத்தம் கண்மாய்ப்பகுதியில் ஜீன், ஜூலை மாதங்களிலிருந்து பறவைகள் வந்து குவிகின்றன. அரசே அனைத்து பணிகளை செய்து விடாது.  இந்தப்பறவைகள் குறித்து உடன் நாம் ஆய்வினை துவங்க வேண்டும். அடுத்த 6மாதங்களில் சனி,ஞாயிறு ஆகிய நாட்களை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொள்ளலாம். மதுரை மாவட்டத்தினை மூன்று பிரிவுகளாக  பிரித்து  ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாக கூறினார். சூழலியலில் ஆர்வமுள்ளவர்கள்  அனைவரும் இதில் இணைந்து கொள்ளலாம். எனகூறினார்.
சிவரக்கோட்டைப்பகுதியில் புள்ளிமான் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. தற்பொழுதும் புதிய வகை பறவைகள் நாள் தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரைப்பகுதியில் தான் எடுத்த 186 பறவைகளை பதிவு செய்திருப்பதாக கூறினார். மின்சார வருகைக்கு பின்பு திரையில் 186 பறவைகளை பற்றி ஒவ்வொன்றாக  விளக்கி கூறியது மிக அருமையாக அமைந்தது. என்னை பறவைகள் உலகத்திற்கே அழைத்து சென்றார். இப்பதிவினை வீடியோ பதிவு செய்யவில்லையென மிகுந்த வருத்தமாக உள்ளது. மதுரை சூழலியலாளர்கள் திரு.ரவிந்திரன் அவர்களை பயன்படுத்தி கொள்வது மிக அவசியமாகும். மீண்டும் இந்த பறவைகள் குறித்தப்பதிவினை காண ஆவலாக உள்ளேன்.

அடுத்ததாக மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் மு.இராஜேஷ் அவர்கள் காட்டுயிரிகள் குறித்து உரையாற்றினார். முத்தாய்ப்பாக மனிதன் தனது ஆசைகளை குறைத்து காடுகளை அதிகரிக்க செய்யவேண்டுமென வலியுறுத்தினார்.


பறவைகாணுதல் குறித்து கண் மருத்துவரும் பறவையியல் ஆய்வாளருமான திரு.பத்ரிநாராயணன் அவர்கள் திரை விளக்கப்படத்துடன்  சிறப்பாக உரையாற்றினார். பறவைகளை எவ்வாறு காண செல்வது? பறவைகள் இருப்பிடம் அறிதல், பறவைகளின் உடல் பாகங்கள் அறிதல் பறவைகளுக்கு  வளையமிடுதல், டிரான்ஸ்மீட்டர் இணைத்தல் போன்றவைகளை அழகுற விளக்கினார். மேலும் பறவைகளை போன்று குரல் எழுப்பி பார்வையாளர்களில் குறிப்பாக சிறுவர்களை வெகுவாக கவர்ந்தார். 

அடுத்து திரு,பாபுராஜ் அவர்கள் தாவரங்கள் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சி நடந்த மூன்றரை மணி நேரங்களும் பயனுள்ள பொழுதாக கழிந்தது. என்னை வானத்தில் இறகுகள் விரித்து பறக்கவே செய்துவிட்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க  நன்றி .

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் - முதல்பாகத்திற்கு கீழுள்ள லிங்கினை அழுத்துக.
http://ulaipali.blogspot.in/2014/10/1.html

                                      வஹாப் ஷாஜஹான்,
                                         திருமங்கலம்.



No comments:

Post a Comment