Wednesday, 10 September 2014

சவ் மிட்டாய்


இனிப்பு சுவையை இயற்கையாக கிடைக்கும் தேனை கொண்டு முதன் முதலில் சுவைத்து மகிழ்ந்த தமிழன் . பின்பு பனையிலிருந்து கிடைத்த (கருப்பட்டி) சூடான இனிப்பு பாகினை உருவாக்கி பொரியுடன் இணைத்து பொரி உருண்டையும், கடலையுடன் இணைத்து கடலை உருண்டையும், அரிசி மாவு பொருட்களுடன் இணைத்து அதிரசம் போன்ற இனிப்புகளை தயார் செய்து உண்டுமகிழ்ந்தான். இதையே விற்பனைக்கு கொண்டுவந்த நாடார் சமுதாயத்தினர் மிட்டாய்கடை என்று பெயரிட்டனர். இன்றும் மதுரையில் மிட்டாய்கார தெரு என ஒரு தெரு அமைந்துள்ளது. மிட்டாய் என்றவுடன் பலவகைமிட்டாய்கள் நமக்கு நினைவுக்கு வந்தாலும் சவ்மிட்டாய்சுவையே அலாதியானது. சவ்மிட்டாய் பழங்காலத்தில் கருப்பட்டி சாரினை கொண்டே தயாரிக்கப்பட்டுவந்தது. தற்பொழுது சர்க்கரை பாகினை கொண்டு தயார் செய்யப்படுகின்றது.


சவ்மிட்டாய்காரன் தெருவுக்குள் நுழைந்துவிட்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம் தான். சிறுவயதில் சவ்மிட்டாய்காரனின் பொம்மை எப்படி சல் சல் என சப்தமிடுகின்றது என்ற ரகசியத்தினை கண்டறியவும் கைவினை கலைஞனாக கடிகாரம்,மோதிரம், செயின்,வாத்து,மயில் போன்றவைகள் உருவாகும் விதம் அறியும் ஆவலில் எனது தெருவின் துவக்கத்திலிருந்து அடுத்த தெரு கடைசி வரை சவ்மிட்டாய்காரனின் பின்னேயே சென்று வீட்டிற்கு திரும்பிய பொழுதில் அம்மாவிடம் மத்தடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது. இன்று தொலைக்காட்சியில் மிட்டாய் விளம்பரங்களுக்கு எடுக்கும் பகிரத முயற்சிகளுக்கு எல்லாம் மேலாக அந்தகாலத்திலேயே நமது சவ்மிட்டாய்காரர்கள் மிட்டாய் விற்பனையில் எத்தனை கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள்.
முதலில் நல்ல மூங்கில் மரத்தினை எடுத்து பஞ்சினை கொண்ட பொம்மை ரெடி செய்து அதன் கைகளில் சல் சல் சப்தமிட ஜால்ரா கருவியினை இணைத்து ஜால்ரா தட்டவைக்க மூங்கில் மரத்தில் ஓட்டையிட்டு பொம்மையுடன் இணைத்த கயிற்றினை மூங்கில் வழியாக தரைக்கு கொண்டுவந்து கால்களால் இழுக்க செய்ய ஏற்பாடு செய்து வைப்பர். சவ்மிட்டாய் தயாரிப்போ இன்னும் கஷ்டம். சர்க்கரையினை சட்டியிலிட்டு சூடேற்றி சரியான பதத்தில் கிண்டி பாகினை தயார் செய்து மூங்கில் மரத்தில் பார்ப்பதற்கு அழகாக வைத்து எடுத்து வருவர். இத்தனையும் சேர்ந்த அதிக எடையினை கையிலேயே சுமந்துவருவதும் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை பலவடிவங்களில் செய்து கொடுத்து வந்தனர்.இப்படியெல்லாம் மிகுந்த கஷ்டங்களில் தயார் செய்து எடுத்துவரும் சவ்மிட்டாய்காரன் முதல் போக மீதி லாபமாக கிடைத்தது சொற்ப தொகையே மிஞ்சிய காரணத்தாலும் தற்போதைய மிட்டாய்களுடன் போட்டி போடமுடியாத காரணத்தாலும் இத்தொழில் செய்துவந்த பலர் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர்.

தற்பொழுது கிராமத்து திருவிழாக்களில் மட்டுமே சவ்மிட்டாய்காரர்களை பார்க்கமுடிகின்றது. அதிலும் மேலே உள்ள பொம்மை இன்றி வருகின்றனர். கேட்டால் உங்கள் காலந்தான் தம்பி பாத்து ரசித்து வாங்கி போனிங்க.இப்ப பயலுக பிடித்து இழுக்குறாய்ங்க என சவ்மிட்டாய்காரர்கள்  அலுத்து கொள்கின்றனர். எத்தனை மிட்டாய்கள் வந்தாலும் எனக்கு சவ்மிட்டாயே அதிகம் பிடிக்கும். எனது குழந்தைகளையும் சவ்மிட்டாய் பிரியர்களாகவே மாற்றி வைத்துள்ளேன். அழிந்துவரும் சவ்மிட்டாய்தனை மீட்டெடுப்போம். மீண்டும் கருப்பட்டி சவ்மிட்டாய்களை அறிமுகம் செய்வோம்.சில பகுதிகளில் இம்மிட்டாயினை பாம்பேமிட்டாய் என அழைக்கின்றனர்.நான் விசாரித்த  வரை சவ்மிட்டாய்க்கும் பாம்பேக்கும் என்ன சம்மந்தம் என்று இன்று வரை தெரியவில்லை. பன்னெடுங்காலமாக நமது முன்னோர்களால் வழக்கமாக கொண்ட கருப்பட்டியினை பிரிந்து சீனிக்கு மாறியதால் சவ்மிட்டாய் அழிவினை நோக்கிச் செல்கின்றது. நாம் இனியேனும் பாரம்பரிய பனைகருப்பட்டியிலும்,தேனிலும் இனிப்புச் சுவை பெறுவோம்.

                           வஹாப் ஷாஜஹான்,திருமங்கலம்.

1 comment:

  1. சவ்வுமிட்டாய் குறித்த கட்டுரை நல்ல கட்டுரை. காற்றடைத்த பாக்கெட்டுகளில் அடைத்து வரும் கண்டதையெல்லாம் தின்னும் இந்தத் தலைமுறையை தொற்றாநோய்களிடமிருந்து மீட்க நம் பாரம்பரிய உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இனிய தொடக்கமாக தங்கள் கட்டுரை அமையட்டும்.

    ReplyDelete