சேர,சோழ,பாண்டிய
மன்னர்களையும்,மொகலாய மன்னர்களையும்,ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் பள்ளி வரலாற்று புத்தகத்தில்
மொட்டை மனப்பாடமாக கரைத்து குடித்து பரிட்சை அறையில் கக்கி பள்ளியில் தேறிவருவது தான்
நமது வளமை.ஒருவரிடம் உங்கள் தாத்தாவின் அப்பா பெயர் என்ன?என வினா எழுப்பினால் 70 சதவீதத்தினருக்கு
தெரியாது.இன்னும் தாத்தாவின் தாத்தா பெயர் கேட்டால் 90 சதவீதத்தினருக்கு தெரியாது.
பெரும்பாலோர் தங்கள் குடும்ப வரலாற்றினையே தெரிந்து வைப்பது இல்லை. அப்புறம் எப்படி
தான் சார்ந்த ஊர் வரலாறு,தனது பகுதியில் இருக்கும் கோயில்கள், இயற்கையின் அருட்கொடையான
மலைகளில் வாழ்ந்த பழங்குடியினர்களின் வரலாறு அறியும் ஆர்வம் ஏற்படும்.
தமிழ்குடி தான்
உலகின் மூத்த குடி என்ற உண்மைதனை வாய்மொழியில் பெருமை பேசுவதினைக் காட்டிலும் நமது
சுற்றுப்பகுதிகளில் உள்ள தொண்மை நிறைந்த பகுதிகளின் வரலாற்றினை அறிவதும் நமதுவாரிசுகளுக்கும்
அறிவிக்கின்ற பணி இன்று தலையானதாகும். இந்த
பணியினை திருவிழாக்களின் நகரான மதுரையை தலைமையிடமாக கொண்டு பசுமைநடை குழுவினர் சிறப்பாக
பணியாற்றி வருகின்றனர்.
கொடைக்கானல் பயணம்.
தமிழக சுற்றுலாத்தளங்களில்
மிக முக்கிய இடம்பிடிப்பது கொடைக்கானல். தமிழகத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா
பயணிகள் சென்னைக்கு அடுத்தப்படியாக பயணிப்பது கொடைக்கானலே. தமிழக மலைகளின் இளவரசி என்ற
பெயர் கொண்ட கொடைக்கானல் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு
முதலில் உதவியது.பின்பு தமிழக பிரபல அரசியல்வாதிகளும்,நடிகர்களும்,பெரிய தொழிலதிபர்களும்
தங்களின் ஓய்வுதளமாக மாற்றி வைத்துள்ளனர்.
ஆனால் உண்மையில்
அந்தப்பகுதிகளில் நாகரீகத்தில் முதிர்ச்சி பெற்ற பழங்குடிகள் முதலில் வாழ்ந்ததற்கான
ஈமக்குழிகள், கல்பதுகைகள், கல்திட்டைகள், ஈமசின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் இடம்பெறாது. நமது பசுமைநடைகுழுவின்
ஒருபகுதியினர் இவ்விடங்களாக தேடி மே17 மற்றும் 18களில் பயணித்து பார்த்து மகிழ்ந்தனர்.அந்தப்பகுதிகள்
எல்லாம் திறந்தவெளி மதுக்கூடங்களாகவும் பிளாஸ்டிக் குப்பைகளாகவும் இருந்தன. பசுமைநடை
குழுவினர் அந்த பகுதிகளை சுத்தப்படுத்தியது அவர்கள் பயணத்தின் முத்தாய்பாய் அமைந்தது.
வெறுமனே இயற்கை
மலர்களையும் குளிர்ச்சியினையும் சுற்றுலாவாக கண்டால் அங்கே நமக்கென விடுதிகளை கட்டும்
நோக்கமே மேலிடும். இயற்கைகாட்சிகளை கண்டு பின் இயற்கைக்கு எதிராக அந்தப்பகுதியிலும்
கடும் தண்ணீர் பஞ்சத்தினையும் வறட்சியினையும் ஏற்படுத்தி வருவதுதான் மனிதனின் வரலாறு.
யாரையும் சார்ந்தில்லாமல்
தங்களை சுற்றி காடுகளையும் மலைகளையும் மட்டுமே கொண்டு வாழ்ந்த பழங்குடியினர்களை அந்தப்பகுதியிலிருந்து
விரட்டி இயற்கை அபகரித்த நாம் சுற்றுலா என்ற பெயரில் சென்ற பொழுதினிலாவது அந்தப்பகுதியின்
ஆதி பழக்குடியினரின் தொழில்நுட்பங்களையும்,இயற்கை சார்ந்த விவசாயம், தேவைக்கு அதிகமாக
பொருட்களை சேர்க்காது இருத்தல் போன்றவைகளை பாடமாக பெறலாமே.
இது போன்ற பயணங்களே
நம்மை செம்மைப்படுத்தும். இந்த சிந்தனைக்கு என்னை இட்டு சென்ற பசுமைநடையில் நானும்
ஒரு அங்கத்தினர் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.படிக்கும் அன்பர்கள் தாங்களும் தங்களை
சேர்ந்தவர்களும் பசுமைநடையை போன்று அந்தந்த பகுதிகளின் ஆதிவரலாற்றினையும்,பழங்குடியினர்களிடமிருந்து
பாடங்களும் அறிய செய்யும் முயற்சியே இக்கட்டுரையின்
வெற்றியாகும்.
பசுமைநடையுடன் சேர்ந்து சேவையாற்ற மற்றும் தொடர்புக்கு
பசுமைநடை
3/351 கார்த்திகா நகர்,
தணக்கன்குளம்,திருநகர்,
மதுரை-625 006
மின் அஞ்சல்: greenwalkmdu@gmail.com
புகைப்படங்கள்:
நன்றி அன்பு தம்பிகள்:அருன் பாஸ்
பாடு வாசி.
மிகவும் அருமையான கருத்துக்கள் நிறைந்த நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDelete