Tuesday, 23 December 2014

சித்தரா? சிவனா? சமணரா?


டிசம்பரில் 43 வது பசுமைநடை சித்தர்மலை என அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். ஏனெனில் சென்ற முறை பசுமைநடையில் சித்தர்மலையின் உயரத்தினையும் தூரத்தினையும் கணக்கில் கொண்டு செல்லவில்லை. தற்பொழுது காலை நடைப்பயிற்சி மூலம் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி இருப்பதால் இந்த பரிசோதனை முயற்சியில் ஈடுபட துணிந்தேன். சித்தர்மலையின் சிறப்பாக மலை மேல் சிவன் கோவில் இருப்பதாக கூறினர். சித்தன் போக்கு சிவன் போக்கு என கேள்வி பட்டிருக்கின்றேன். என்ன பெயர் எல்லாம் ஒத்து போகின்றதே என நினைத்தேன். சமணப்படுகைகளும் அமைந்துள்ளதாக அறிந்து மதுரையின் முக்கிய தளத்திற்கு செல்வதினை உணர்ந்தேன். சிவனடியார்கள் இங்கு சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது சமணர்களை சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? சென்று தான் பார்போம். என கிளம்பினேன். திருமங்கலத்திலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வயல்வெளி, கண்மாய்களை கடந்து இரு சக்கர வாகன உதவியுடன்  செக்கானூரனியை அடைந்தோம்.

 மதுரையிலிருந்து வரும் பசுமைநடையினர் பல்கலைகழக வாசலில் குழும்பியிருப்பதாக தகவல் வந்தது. செக்கானூரனி கடைகளில் அதிவேக விற்பனை கல்லா கட்டிய ஜோரு ஞாயிற்றுகிழமை காலை என்பதனை நினைவுப்படுத்தியது.



கறி கடைகளில் வெட்டப்பட்டு வைக்கப்பட்ட ஆட்டுத்தலைகள் வாழ்க்கையின் சூனியத்தினை சித்தர் பாணியில் விளக்கின. பூக்கடைகளில் கட்டப்பட்டு தொங்கிய ரோஜா, சம்மங்கி மாலைகளில் தேனீக்கள் மது அருந்தி கொண்டிருந்தன. பூக்கடைகாரும்  பூக்கள் மீது அடிக்கடி தண்ணீர் அடித்து நனைத்து கொண்டிருந்தார்.  அருகே நமது தமிழ்குடிமக்களும் தண்ணீர் அடித்து மது மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். கிராமத்து மனத்துடனான  சேவும் சீரணிகளும் அடுக்கி வைத்திருக்கும் அழகு கண்கொள்ள காட்சியானது. காமராசர் பல்கலைகழகத்திலிருந்து கிளம்பிவிட்டோம் தயாராகுங்கள் என செய்தி வந்தது.

 நெடுந்தூர பசுமைநடை பயணம் என்பதால் இம்முறைக்கூட்டம் குறைவாகவே எதிர்பார்த்தேன். ஆனால் உண்மையில் வந்திருந்த கார்,டூவீலர் வாகனங்களின் அணிவரிசையினை கண்டு நானே வாயடைத்து போனேன். அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் இருசக்கரம் என்னருகே வந்து என்னப்பா இன்னும் நிக்கிற ? கிளம்பு கிளம்பு எனக்கூறியதும் தான் நினைவு திரும்பினேன். 
உடன் செக்கானூரனியிலிருந்து விக்கிரமங்கலம் வழியாக மேட்டுப்பட்டியினை நோக்கி சென்ற பசுமைநடையாளர்களுடன் இணைந்து வண்டியினை செலுத்த தொடங்கினேன். மீண்டும் பச்சப்பசேல், தொட்டிப்பாலம், பறவைகளின் கீச்சுக்குரல்கள் மற்றும் கிராமத்து மக்களின் ஆச்சர்ய பார்வை தொற்றிக்கொள்ள பயணித்தோம். வயல்வெளிகளும், கள்ளமற்ற கிராமத்து மக்களும், தார் சாலைகளில் உலர்த்தப்படும் சோளங்களும்  எங்களை வரவேற்றன. எங்கே செல்கிறீர்கள் கட்சி மாநாடா? அல்லது திரைப்படப்படப்பிடிப்பா? என்ற கேள்வியும் எங்களை பின் தொடர்ந்தன. இந்தியாவினை சுத்தப்படுத்த முயற்சி எடுப்பதாய் பிரதமரிலிருந்து பலரும் “தூய்மை இந்தியா” என்ற பெயரில் ஏமாற்றுகையில் சாலைகளில் பல இடங்களில் இரவு திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி இருந்தது கவலையளித்தது.





 நீண்டநேர பயணத்திற்கு பின்பு மேட்டுப்பட்டி சித்தர்மலை அடிவாரத்தினை அடைந்தோம். அடிவாரத்தில் பெரிய மணிகளும் கருப்பச்சாமியின் சிலையும் இருந்தது. விசாரிக்கையில் சமீபத்தில் படப்பிடிப்பு நடத்தியவர்கள் அமைத்து கொடுத்த சிலை எனக்கூறினர். ஒருங்கினைப்பாளர்கள் நேரம் சென்று கொண்டுள்ளது ம்ம்ம் மலைஏறுங்கள் மலை கொஞ்சம் உசரம் வேகம் என்றனர். பசுமை நடையாளர்களுடன் பேசிக்கொண்டே மலைஏற ஆரம்பித்தேன். படிக்கட்டுகள் சிறு தொலைவு வரையே இருந்தன. பின்பு பல இடங்களில் பாறைகளில் ஏறுவது கஷ்டமாகவும், செங்குத்தாகவும் இருந்தன. மலை உச்சி இந்தா வந்து விடும் இந்தா வந்து விடும் என நினைக்க மலை (எனது கட்டுரை போன்று) நீண்டு கொண்டே சென்றது. பல இடங்களில் ஓய்வு எடுத்தும் உடன் வருபவர்களின் நகைச்சுவை பேச்சும் கொஞ்சம் உற்சாகமளித்தது. ஆர்வமாக மலையேறிய வயதானவர்களையும் சிறுவர்களையும் மாற்றுத்திறனாளி ஒருவரையும் பார்த்த பொழுது நம்மாலும் முடியும் என்று தன்னம்பிக்கை ஏற்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஒருங்கினைப்பாளர்கள் என்றில்லாமல் வந்திருந்த இளைஞர்கள் அனைவரும் மலைஏற உதவிசெய்தது பசுமைநடையின் வெற்றியினை பறைசாட்டியது.






ஒருவழியாக குகைதளத்திற்கு வந்தடைந்து ஒன்றாக சேர்ந்து அமர்ந்தோம். முதலில் முத்துகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று நீண்ட மலைப்பயணம் உங்களை சோர்வடைய செய்துள்ளதா? அல்லது உற்சாகமாக உள்ளீர்களா என கேள்வி எழுப்ப அனைவரும் உற்சாகமாக உள்ளதினை கோஷமிட்டு வெளிப்படுத்தினர். பின்பு மாமன்னர் ராசராசன் விருது பெற்ற பேராசிரியர் சாந்தலிங்கம் அய்யா தளவரலாற்றினை எடுத்துரைத்தார். இரண்டாம் நூற்றாண்டினை சேர்ந்த தமிழ்பிராமி கல்வெட்டுகள் பற்றியும் மத்திய அரசு தொல்லியல்துறையினர்  வரலாற்றுசின்னமாக அறிவித்திருப்பதினையும் விளக்கினார். இக்கல்வெட்டில் மதுரை என்று குறிப்பிடப்பட்டு இருப்பதினை பெருமையுடன் விளக்கினார். சமணர்களை பகுதிமக்கள் சித்தர்கள் என எண்ணியிருக்கக்கூடும் என விளக்கினார். விடை தெரிந்து மகிழ்ந்தேன்.






சித்தர்கள் பற்றி தொ.பரமசிவன் அய்யா பண்பாட்டு அசைவுகள் நூலில்
சித்தர்கள் என்போர் தமிழ்மக்களிடையே செல்வாக்குப்பெற்று விளங்கிய ஒரு கூட்டத்தாராவர். சித்து வேலை அறிந்தவர்கள் என்பது சித்தர் சொல்லுக்கான விளக்கம்.தேவைக்கு ஏற்ப உடலை உருமாற்றிக்கொள்வது, மண்னையும் மருத்தாகமாற்றும் வல்லமை சித்தர்கள் பெற்றிருந்தனர். செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் கட்டுப்படாத     சித்தர்களே சிலை வழிபாடு, பூசனை, பார்ப்பனர், புனிதமாக கருதப்பட்ட வேதம், கோயில், குளம், சாதிய ஒடுக்குமுறை என எல்லா வகை நிறுவனங்களையும் எதிர்த்து முதல் கலகக்குரல் எழுப்பியதாக கூறுகிறார்.

சித்தர்மலையில் சமணர்களை சித்தர் என எண்ணியிருந்தாலும் உண்மையிலேயே சித்தர்களே இருந்தாலும் வரவேற்கதக்கதே. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பட்டில் உள்ள குகைபடுகைகள் (பெயிண்ட்) வர்ணங்களால் சிதைக்கப்பட்டு வருவது கண்டிக்கதக்கது. அனைவருக்கும் சித்தர்மலை விளக்க கையேடு ஒன்று வழக்கம் போல் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஜயகுமார் poetry in stone வலைதள நிறுவனர் சிறப்புரையாற்றினார். 

பசுமைநடை என்றவுடன் பத்து இருபது பேரினை எதிர்பார்தேன். கடல் போல் கூட்டத்தினை இங்கு தான் பார்க்கிறேன். மதுரையில் மட்டும் தான் இது சாத்தியம் என பசுமைநடையின் பெருமையினை பதிவுசெய்தார். சிலைகள் திருட்டுப்பற்றிய விழிப்புணர்வு இன்றி தமிழர்கள் இருந்து வருவதினையும் விளக்கமான உரையை மாலை சங்கம் ஹோட்டலில் பேசவிருப்பதாக பசுமைநடையினருக்கு அழைப்பு விடுத்தார்.

பின்பு இன்னும் கொஞ்சம் மலையேறி மலைஉச்சியில் உள்ள சிவன் கோவிலை அடைந்தோம். ஆன்மீக அன்பர்கள் பலரும் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். மலைஉச்சியிலிருந்து வைகை ஆறு மதுரையை நோக்கி வலைந்து நெழிந்து ஆடிவரும் அழகினை ரசிக்கமுடிந்தது. 






அனைவரும் அமர்ந்து நினைவுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.பின்பு அனைவரும் ஒருவர் மற்றவருக்கு உதவியாக ஒருவர் பின் ஒருவராக மலையிலிருந்து கிழ் இறங்கினோம். மலை அடிவாரம் வந்தடைய 10.30 மணிக்கு மேலானது. காலை சிற்றுண்டி உண்டோம். இந்தமுறை பசுமைநடைக்கு வந்த அதிகமான கூட்டத்தினை பார்த்தபின்பு நமக்கான பொறுப்புகள் இன்னும் அதிகரித்து உள்ளதினை உணர்ந்தேன். ஒரு பொதுநல கூட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருவது நாட்டில் இயற்கை ஆர்வம் மீதான நம்பிக்கை மக்களிடம் துளிர்விடுவது அறியமுடிந்தது.   மேலும் அடுத்த பசுமைநடை கிராமம் ஒன்றில் பொங்கல்விழாவாக கொண்டாடபடவிருக்கின்றது. அந்த இனிய நாளினை எதிர்நோக்கியவர்களாக கலைந்தோம் இந்த இனிப்புச்செய்தியுடனே இனிதே விடைபெறுவது.

                                                                                                                                                                                                                                       உங்கள் வஹாப்ஷாஜஹான்.
                                                                     திருமங்கலம்.
பொங்கல் சந்திப்பில் சந்திப்போம் தோழர்களே!!!!!!!!! 
கட்டுரைப்பற்றிய தங்களின் ஆலோசனைகள் வரவேற்கிறது உழைப்பாளி


3 comments:

  1. கட்டுரையும் படங்களும் அருமை...
    இடையில் ஓரிடத்தில் ஊனமுற்றோர் என வரும் குறிப் பை மாற்றுத்திறனாளி என மாற்றினால் நலம்...

    ReplyDelete
  2. நன்றி உதயா மாற்றிவிட்டேன்.

    ReplyDelete

  3. பசுமைநடையின் சித்தர்மலை பயணத்துக்கு வர முடியவில்லையே, பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம், சோகம் தீராமல் இருந்தது. இந்தக் கட்டுரை படித்து முடித்ததும் தீர்ந்தது. கட்டுரையை பாராட்டுவதா; அதற்கு அதிக சிறப்பும், அழகும் சேர்க்கும் புகைப்படங்களைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை. ஆகவே, இரண்டையும் பாராட்டுகிறேன். இதுபோன்ற கட்டுரைகள், இளைய தலைமுறைக்கு இயற்கையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் காரணியாக அமையும் என்று நம்புகிறேன். தொடரட்டும் உங்கள் தமிழ், வலைப்பூ சேவை.
    பி.கு: மறந்து விட்டேன். தலைப்பு இருக்கிறது பாருங்கள்... அதற்கு மட்டும் தனியாக ஒரு விமர்சன கடிதம் எழுதவேண்டும். சித்தரா, சிவனா, சமணரா... மூன்றே வார்த்தைகள். அதற்கு பின்னணியில் இருக்கிறது ஒரு மாபெரும் சமூக, சமய வரலாறு. புரிந்தவர்கள் பாக்கியவான்கள்.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete