Wednesday, 23 April 2014

விழித்துக்கொண்ட விவசாய வி.ஐ.பிகள்

2014 பாராளுமன்ற தேர்தல் களத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பலலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம் என்பது இடம்பிடிக்கின்றது. இந்த வேலைவாய்ப்புகள் மூலம் நகரமயமாக்கல் என்பது இன்னும் அதிகரிக்கும். கிராமங்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணமே உள்ளனர். தற்பொழுது 50% உள்ள நகரமயமானது மேலும் அதிகரிக்கையில் விவசாயம் முற்றிலும் நின்று உணவிற்கு நாம் இறக்குமதியினையே நம்பிய நிலைக்கு தள்ளப்படுவோம். தமிழகத்தில் விவசாயநிலையானது சென்ற காலங்களை ஒப்பிடுகையில் -12% என்ற பின்தங்கிய நிலைதனை அடைந்து வறட்சிமாநிலமாக திகழ்கின்றது.

“கியூபா நாடானது இலங்கையை விட பரப்பளவில் குறைவாக இருந்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளமைக்கு அங்கு கடைபிடிக்கப்படும் இயற்கை விவசாயமே காரணம்”


இதனை நான் கூறவில்லை 20.4.2014 ஞாயிறு அன்று மாலை 5 மணியளவில் மதுரை திருமங்கலத்திலிருந்து உசிலை செல்லும் வழியிலுள்ள பெரிய பொக்கம்பட்டி ஊர் மந்தையில் (பொது அரங்கம்) நடைப்பெற்ற “உழவர்களை தேடி என்ற நிகழ்ச்சியில் திரு.மாசானம் ,பழையனுர், சிவகங்கை சேர்ந்த விவசாயி அவர்கள் தேர்ந்த பேச்சாளரை போல் கிராமத்தின் விவசாயிகளிடம் உரைநிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக கிராமத்தினை நோக்கி செல்லும் பொழுது சாலையின் இருபுறமும் கோடையின் வறட்சியிலும் தங்களை நிலைநிறுத்திகொண்டுள்ள பச்சை மரங்களும்,செடிகளும், சூரியன் மறைகின்ற இயற்கைகாட்சிகளும் மனதினை ஆசுவாசப்படுத்தியதோடு கூட்டநிகழ்ச்சியிலிருந்து கிராமத்தினை பார்த்த பொழுது எல்லா வீடுகளும் 10க்கு 10 என்ற அளவுகளிலேயே அமைந்து ஆடம்பரமின்றி மனநிறைவுடன் கிராமத்தினர் வாழ்ந்துவருவது புலனாயிற்று.மேடைக்கு எதிர்புறம் அமைந்த வீட்டில் சமையலுக்காக ஒரு பெண் விறகு அடுப்பினை எரியூட்ட முயற்சி செய்வதோடு கூட்டநிகழ்ச்சியினை ஒலிபெருக்கியில்  கேட்க முடியாதபடி கத்தி விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை வந்து விரட்டி சென்ற நேரத்தில் வீட்டு பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி உரைதனை வீட்டிலிருந்தே கேட்பது புரிந்தது.


250க்கும் மேற்பட்ட விவசாயிகளை  ஒன்றுகூட்டி நடத்தப்பட்டது இக்கூட்டத்தின் சிறப்பு அம்சமாகும். மேலும் விவசாயி மாசானம் பேசுகையில் இன்று இயற்கை விவசாயத்தின் வெற்றிதனை பார்த்த வேளான் விஞ்ஞானிகள் இயற்கை விவசாயம் சரிதான் அத்துடன் கொஞ்சம் யூரியா,பொட்டாஷ் என இணைத்து கொடுத்தால் இன்னும் பலன் அளிக்கும்  என்று எரிகின்ற வீட்டில் புடுங்குவது மிச்சம் என்ற வகையில் செயல்படுகின்றனர் என விவசாயிகளின் பேச்சுவகையிலேயே உரையாற்றியது விவசாயிகளின் கவனத்தினை ஈர்த்தது. விவசாய நிலமும் குடும்பமும் ஒன்றே, இரண்டையும் கவனமாகவும் தொடர்ந்தும் கவனிக்க வேண்டும் எனவும், பஞ்சகாவ்யா தயாரிப்பு முறையும் பயன்படுத்தும்  முறையையும் விளக்கினார்.

மேலும் கூட்டத்தில் “தற்சார்பு வேளாண்மை“ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய திரு.பாமயன் அவர்கள் விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தினை நோக்கி திரும்பவேண்டியதன்  அவசியத்தினையும் அவர்களிடம் இருக்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் உரையாற்றி விவசாயிகளின் அச்சத்தினை போக்கினார். ரசாயான உரங்களுக்கு வழங்கும் மானியத்தினை நிறுத்தி இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அரசுகளுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக  நடைப்பெற்ற இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு பாராட்டு நடத்திய அழகினை கண்ட நான்  உண்மையில் இயற்கைவிவசாயத்தினை மேற்கொள்ளும் விவசாயிகளை  விழித்துக்கொண்ட வி.ஐ.பி களாகவே உணர்ந்தேன். நிகழ்ச்சி முடியும் பொழுது மேடையின் எதிர்வீட்டு பெண்மணி அடுப்பில் கொதித்து பொங்கிய சோற்றினை இறக்கி தட்டு போட்டு வடிகட்டிய அழகினை நீண்ட நாள்களுக்கு பின்பு காணகிடைத்தது.


இந்த நிகழ்ச்சிதனை ஏற்பாடு செய்திருந்த நாணல் நண்பர்கள் குழுவிற்கும் விழித்தெழு மதுரை நண்பர்களையும்  பாராட்டுவதினை விட அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றினால் நமது பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக விரைவில் மாற்றலாம். இதனையே அவர்களும் விரும்புகின்றனர்.மேலும் நீர் ஆதாரங்களுக்கான வழிவகைதனை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தினை மக்களுக்கு உணர்த்துவதோடு நமது வருங்கால சந்ததியினருக்கு  நஞ்சற்ற உணவினைவழங்குவதினை  நமது லட்சியமாக கொள்ளவேண்டிகிறேன்.
                                    வ.ஷாஜஹான்,திருமங்கலம்
நன்றி:படங்கள் பாடுவாசி.

3 comments:

  1. இன்றைய நாகரீக வாழ்க்கை மயக்கத்தில் வாழ்ந்து கொண்டு விவசாயிகளை சாதரணமாக பார்க்கும் நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு இது போன்ற கட்டுரைகள் பல வர வேண்டும். நல்ல கருத்தை உணர்த்திட்ட கட்டுரையாளர்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.. நன்றி தோழர்

    ReplyDelete
  3. இயற்கை விவசாயம் மட்டும் போதுமா??!! இயற்கை மருத்துவம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்து சாப்பிட்டு என்ன பயன்?! ஆகையால் அதனைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் உறவுகளே.

    ReplyDelete