Tuesday, 23 December 2014

சித்தரா? சிவனா? சமணரா?


டிசம்பரில் 43 வது பசுமைநடை சித்தர்மலை என அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். ஏனெனில் சென்ற முறை பசுமைநடையில் சித்தர்மலையின் உயரத்தினையும் தூரத்தினையும் கணக்கில் கொண்டு செல்லவில்லை. தற்பொழுது காலை நடைப்பயிற்சி மூலம் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி இருப்பதால் இந்த பரிசோதனை முயற்சியில் ஈடுபட துணிந்தேன். சித்தர்மலையின் சிறப்பாக மலை மேல் சிவன் கோவில் இருப்பதாக கூறினர். சித்தன் போக்கு சிவன் போக்கு என கேள்வி பட்டிருக்கின்றேன். என்ன பெயர் எல்லாம் ஒத்து போகின்றதே என நினைத்தேன். சமணப்படுகைகளும் அமைந்துள்ளதாக அறிந்து மதுரையின் முக்கிய தளத்திற்கு செல்வதினை உணர்ந்தேன். சிவனடியார்கள் இங்கு சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? அல்லது சமணர்களை சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? சென்று தான் பார்போம். என கிளம்பினேன். திருமங்கலத்திலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வயல்வெளி, கண்மாய்களை கடந்து இரு சக்கர வாகன உதவியுடன்  செக்கானூரனியை அடைந்தோம்.

 மதுரையிலிருந்து வரும் பசுமைநடையினர் பல்கலைகழக வாசலில் குழும்பியிருப்பதாக தகவல் வந்தது. செக்கானூரனி கடைகளில் அதிவேக விற்பனை கல்லா கட்டிய ஜோரு ஞாயிற்றுகிழமை காலை என்பதனை நினைவுப்படுத்தியது.

Saturday, 6 December 2014

திரைத்திருவிழா


தமிழகத்தில் திரைப்படங்களின் தாக்கத்தினைப்பற்றி சொல்வதாக இருந்தால் நாள் போதாது. எழுதுவதாக இருந்தால் பக்கங்கள் போதாது. வருங்கால முதல்வரை சினிமாவில் தேடுவதிலிருந்து தமிழர்களின் திரைப்படப் பக்தியினை நாம் அறியலாம்.  அடுத்த தலைமுறையினரை சீர்படுத்திட தமிழகத்தில் திரைப்படங்களை  நல்ல முறையில் மாற்றி அமைத்திட வேண்டும். அதன் முன் முயற்சியினை நோக்கி  குறுப்படங்களும் ஆவணப்படங்களும் சிறந்த முறையில் பயணிக்கின்றன. லாப நோக்கமின்றி தயாரிக்கப்படும் இவ்வகையிலான குறும்படங்கள்,ஆவணப்படங்கள் நாடு காணும் பல பிரச்சனைகளை மக்களுக்கு தெரிவிக்கவும், இயக்குநர் தன்னை யார் என்று உலகிற்கு நிரூபிக்கவும், நிலைநிறுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது. பலநாட்டு கலாச்சாரங்களையும் நாம் காணும் வகையில் பல மொழிப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

இந்தியப் படங்களுடன்  மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஃப்ரான்ஸ்,  அமெரிக்கா,  போலந்து,  ஆர்மீனியா,  ஆஃப்கானிஸ்தான்,  பாலஸ்தீனம், ஸ்விட்சர்லாந்து, உக்ரேன், ரஷ்யா, கெளதமாலா, போர்ச்சுகல் மற்றும் புர்கினோ ஃபாசோ ஆகிய நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்படவுள்ளன. தற்பொழுது மதுரை காந்தி மியூசியத்தில்  16வது குறும்பட மற்றும் ஆவணப்பட விழா நடைபெறுகின்றது. இதில் தீபிகா தங்கவேலு, ஸ்ரீரசா, பி.பாபுராஜ், கோபால் மேனன், ஸ்ரீமித் ஆகிய படங்களின் இயக்குநர்களும்,.மார்க்ஸ், .ராமசாமி, .முத்துக்கிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகிய எழுத்தாளர்களும், ஓவியர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். 

Tuesday, 25 November 2014

மாங்குளம் பசுமைநடை


                         (மீனாட்சிபுரம்)
பயணங்களே  வாழ்க்கை பாடத்தின் பள்ளி. தாம் வாழும் பகுதிகளின் வரலாறு அறியாதவன் மனிதன் என்பதற்கே அருகதையற்றவன். பறவைகள் பூமி முழுமைக்கும் கட்டுப்பாடின்றி பறந்து திறிந்து பயணிகின்றன.  மனிதனோ பயணங்கள் மறந்து கூண்டுகிளிகளாய் வெந்ததை தின்று விதிவந்தால் சாவு என மாறி போகின்றான். தோழர் சேகுவேரா வின் இளமைக்கால மோட்டார் சைக்கிள் பயணங்களே போராட்டங்களுக்கான விதை.

“பயணங்களே மனித மனங்களின் கசடு போக்கும் மந்திரம்”
                                எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்.

இந்த மந்திரத்தின் சூட்சமம் தெரிந்ததால் நகரின் தொன்மை வாய்ந்தப்பகுதிகளை மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது “பசுமைநடை”.  23.11.2014 அன்று 42 வது பசுமைநடையாக மதுரை மாங்குளம் செல்வதாக பசுமைநடைக்குழு முடிவுசெய்தது.

Thursday, 20 November 2014

சோழவந்தான் பறவை பார்வை


மதுரையின் சோலை சோழவந்தான். சிறு வயதில் மேலக்கால், திருவேடகம் தர்ஹாக்களில்  இரவெல்லாம் தங்கி சந்தனக்கூடு பார்த்து மகிழ்வேன். காலையில் வைகை ஆற்றில் குளிப்பதற்காக சோழவந்தான் வந்திருக்கின்றேன். பார்க்க காவேரி ஆற்றுப்படுகையை போன்றே பச்சைபசேலென்று இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் சென்ற பொழுது மிகுந்த வறட்சியாக இருந்தது. மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். மீண்டும் இந்த மண் செழிக்க வழியிருக்கின்றதா என எண்ணினேன். 

சென்ற 9.11.2014 அன்று இறகுகள் அமைப்பின் சார்பாக பறவை பார்வையிட மீண்டும் சோழவந்தான் புறப்பட்டேன். செல்லும் வழியெல்லாம் மெல்ல மெல்ல வறட்சிகள் நீங்கி வருவதினை கண்டேன். கண்மாய்களில் தண்ணீர் கொஞ்சமெனும் இருந்தது ஆறுதல். பறவைகள், விளைநிலங்கள், மனிதர்களை பார்வையிடுகையில் அனைவரும் மகிழ்வாய் எனக்கு காட்டியது. இந்தப்பதிவினை நீங்கள் சோழவந்தானை பறவை பார்வை பார்ப்பதாக எண்ணினாலும் நலம். தொடர்ந்து சோழவந்தானில் நான் பார்த்த பறவைகளையும் விவசாய விளைநிலத்தினையும் வாங்க பார்க்கலாம்.

Saturday, 15 November 2014

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2


நாணல் நண்பர்களும், இறகுகள் அமைப்பினரும் இணைந்து நடத்திய மதுரை சூழலியல் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர் பார்வை. இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் அவர்கள் சூழலியல் சார்ந்த பறவையியல் களஆய்வு குறித்து உரையாற்றினார். அவைகள் பின்வருமாறு. காலநிலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பறவைகள் தங்கள்  தங்குமிடங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த நிகழ்வினை வலசை போதல் என்பர். ஒருபகுதியில் பறவைகள் வரவுகளின் எண்ணிக்கையையும் தன்மையும் கொண்டு வரவிருக்கும் மழை அளவினை அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவியின் அழிவில் செல்போன் டவர்கள் ஒரு காரணமாக அமைந்தாலும் நம்முடைய வாழ்வியல் நடைமுறையும் ஒரு பெரும் காரணமாகும். சென்ற காலங்களில் கோதுமை,அரிசி  மாவு தயாரிக்க வீட்டில் பெண்கள் கோதுமையினை காயவைத்து அரைக்க கொடுத்து வாங்குவர். பலசரக்கு கடையினர் பலதானிய வகைகளை பிரித்து காய வைத்து முன்பு வழங்கினர். ஆனால் இன்று ஷாப்பிங் மால்கள் மூலம் பாக்கெட் பொருட்களாக வாங்கும் பழக்கத்திற்கு வந்ததால் குருவிகளுக்கு சிதறும் தானியங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Tuesday, 11 November 2014

சலீம் அலி

சலீம் அலி (1896- 1987)


இவர் அனார்கலியின் சலீம் அல்ல அன்னம் கிளிகளின் சலீம். காக்கைகுருவியும் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடலை உண்மைப்படுத்தியவர். வேட்டைக்கார குடும்பத்தில் பிறந்தாலும் பறவைகள் மீது பரிவு கொண்டார். பறவைகள் பார்வையிடுவதே பணியாக்கி கொண்டார். வேட்டையில் சிக்கிய பறவையின் கழுத்துப்பட்டையை கவனித்தார். அது மஞ்சள் நிறத்தில் இருந்தது.பறவையை பற்றிய மேல் தகவலுக்கு இயற்கை வரலாற்று மையத்தினை தொடர்புகொண்டார். பாம்பே இயற்கை வரலாற்று மையம் ஆங்கிலேயர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. மையத்தில் சின்னதும் பெரியதுமான பறவைகளை பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதினை கண்டார் சலீம். அது முதலே அவருக்கு பறவை காதல் பற்றிக்கொண்டது.

Thursday, 6 November 2014

கமலும் நானும்


சிறுவயது முதலே கமல் இந்த வார்த்தை எனது ஊக்கமருந்து ஆகும். எனது தாய் மாமன்  மற்றும் எனது (பெரியப்பா) அண்ணன்மார்கள் கமல் ரசிகர்கள். இயற்கையாகவே நானும் கமல் ரசிகன். சலங்கைஒலி திரைப்படத்தினை பார்த்துவிட்டு நான் ஆடிய பரதத்தினை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செய்வர். நான் படித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடும் நான் கமல் வெறியன் என. கல்லூரி ஆசிரியர் என்னை குணா என்றே அழைத்து கிண்டல் செய்வார். உண்மையில் நான் கமல் மீது கொண்ட காதலில் குணா கமலாகவே தான் இருந்தேன் என்றால் மிகையாகாது.

ராஜராஜசோழன் சதயவிழாதஞ்சையின்  சிறப்புகளான  “தமிழகத்தின் நெற்களஞ்சியம், பெரிய கோவில் இவ்விரண்டையும்  நம்மில் அறியாதவர்கள் இலர்”. பெரிய கோவிலின் சிறப்புகளை பலமுறை கேட்டு இருந்தாலும் நேரில் பார்க்கும் தருவாய். இந்தஆண்டே கிடைத்தது. நமது தொல்லியல்  அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மாமன்னன் இராசராசன் விருது  பெறுகிறார் என்றவுடன் திருமங்கலம் பசுமைநடை அன்பர்கள் கண்டிப்பாக அந்த தருணத்தில் நாம் தஞ்சையில் இருந்தாக வேண்டும் என தீர்மானித்தோம்.

Wednesday, 29 October 2014

தெப்பக்குளத்து மிதவை நடை.தொண்மை நிறைந்த மதுரையில் மக்கள் பார்வையிட வேண்டிய முக்கியப்பகுதிகளில் நாயக்கர்கால கட்டிடங்கள் மிகமுக்கிய இடங்களை பிடிக்கின்றன. அதிலும் இந்த முறை பசுமைநடைப்பயணம் தெப்பக்குளம் எனக்கு என்றும் மனங்கவர்ந்த இடமாகும். எனது தந்தை சிறுவயதில் குதிரைவண்டி பயணத்தில் அழைத்து வந்து தெப்பத்தினை காட்டி சுற்றி இருக்கும் கல்லூரியிலிருந்து அனைத்தும்  வைகை ஆற்றுக்கரைடா ஆக்கிரமிக்கப்பட்டு தெப்பத்து அழகினை கெடுக்கின்றனர் என அந்த காலத்திலேயே  விழிப்புணர்வு ஏற்படுத்தியது இன்றும் பசுமையாக நினைவிருக்கின்றது. அந்தக் குதிரைவண்டி பயணம் புட்களால் ஆன மெத்தையில் இனிவாழ்க்கையில் பயணிக்கவியலுமா? குதிரைக்காரனுக்கு பக்கத்தில் அமர்ந்து தெப்பத்தினை சுற்றிவந்ததும், ஐஸ்வண்டிகாரனிடம் சேமியாஐஸ் வாங்கி சாப்பிட்டதும் குதிரையின் கண்களை மறைத்து எப்படி செல்லுகின்றது என்ற மர்மம் விலகிய பொழுதும் தெப்பத்தினை கண்ட உடன் என்னுள் தொற்றிக்கொள்ளும்.


இறகுகள் முளைத்திட்ட பொழுதினில்1.


மதுரை சூழலியல் சந்திப்பு காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறுகின்றது என கேள்விபட்ட நேரத்தில் என்ன நிகழ்வு இது கலந்துதான் பார்போமே என கிளம்பினேன். புலவர் பிசிராந்தையார் தாம் பாடும் பாடலில் “கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை” என்கிறார். அதாவது மாலையில் பறவைகள் தங்கள் கூடுகளை அடையும் இயல்பினைக் சங்ககாலத்தில் அழகாக விவரிக்கின்றார். அதே நேரத்தில் காந்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த நான் போட்டி தேர்வாளர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இருந்து அவர்களும் பறவைகளை போல் தங்களது இல்லங்களுக்கு கிளம்பி கொண்டு இருந்தமையையும் காந்திபிரானையும் பார்த்தவண்ணம்  நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தேன்.

அங்கு நான் கண்ட அரங்க காட்சியானது பறவைகளின் கூட்டினை ஒத்ததாக அமைந்திருந்தது. மின்தடையின் காரணத்தினால் இருட்டாகவும் ஆர்வத்துடன் வந்திருந்த சிறுவர்களும் பங்கேற்பாளர்களும் தங்களுக்குள் மென்மையான குரலில் பேசிக்கொண்டிருந்தது பறவைகளின் கீச்சிடும் குரலுக்கு ஒப்பாக அமைந்தது. நிகழ்ச்சியினை ஆரம்பிக்க மின்சார எதிர்பார்ப்பில் காத்திருந்து பின்பு மின்தடையிலும் 5.30 மணியளவில் தங்களை காக்க வைத்தமைக்கு மன்னிக்கக்கூறி  நிகழ்வினை துவங்கினர். முதல்நிகழ்வாக நாணல் நண்பர்கள் திரு.தமிழ்தாசன் நிகழ்ச்சியின் நோக்கத்தினையும் அவசியத்தினையும் விளக்கினார்.

Wednesday, 8 October 2014

பாறைத் திருவிழா

பாறைத் திருவிழாமழையோடு மகிழ்வாக
பந்த் தனை பந்தாடி
நிகழ்ச்சி நிகழாதென
குறுஞ்செய்தியில் குழப்பினாலும்
பசுமைநடையினர் பாங்கோடு
குவிந்தனரே குயில்குடியில்
பார்வையாளர்கள் பாராட்ட

தெப்பத்து தாமரை அழகினை ரசிப்பதா?
மலைகோவில் சிலைகளை ரசிப்பதா?
ஆலமரத்து அழகினை ரசிப்பதா?
குயில்குடி குருவிகளை ரசிப்பதா?
குழந்தைகளின் குதுகுலங்களை ரசிப்பதா?
அமுதமென அன்னமிட்டதனை ரசிப்பதா?
பேரமுத பேச்சினை ரசிப்பதா?

இடர்பாடுகளை இன்முகத்துடனும்
அவசர சிகிச்சையில் அப்பாவினையும்
கவலைகளை களைகளாய் கலைந்த
முத்துவின் தலைமையினை ரசிப்பதா?
முத்துவுடனே முத்துகுளித்த
முத்தான பசுமைநடையாளர்களை ரசிப்பதா?

ரசிப்பதில் ரசாபாசத்தினை உருவாக்கிட்ட
பசுமைநடையின் பாறைத் திருவிழா
அடுத்த விழாவிற்கு அச்சாரம் போட்டாலும்
விடாது விரட்டும் இனிய நிகழ்வாய்
பாறைத் திருவிழா!.

                உங்கள் வஹாப் ஷாஜஹான்,
                      திருமங்கலம்.

Wednesday, 10 September 2014

சவ் மிட்டாய்


இனிப்பு சுவையை இயற்கையாக கிடைக்கும் தேனை கொண்டு முதன் முதலில் சுவைத்து மகிழ்ந்த தமிழன் . பின்பு பனையிலிருந்து கிடைத்த (கருப்பட்டி) சூடான இனிப்பு பாகினை உருவாக்கி பொரியுடன் இணைத்து பொரி உருண்டையும், கடலையுடன் இணைத்து கடலை உருண்டையும், அரிசி மாவு பொருட்களுடன் இணைத்து அதிரசம் போன்ற இனிப்புகளை தயார் செய்து உண்டுமகிழ்ந்தான். இதையே விற்பனைக்கு கொண்டுவந்த நாடார் சமுதாயத்தினர் மிட்டாய்கடை என்று பெயரிட்டனர். இன்றும் மதுரையில் மிட்டாய்கார தெரு என ஒரு தெரு அமைந்துள்ளது. மிட்டாய் என்றவுடன் பலவகைமிட்டாய்கள் நமக்கு நினைவுக்கு வந்தாலும் சவ்மிட்டாய்சுவையே அலாதியானது. சவ்மிட்டாய் பழங்காலத்தில் கருப்பட்டி சாரினை கொண்டே தயாரிக்கப்பட்டுவந்தது. தற்பொழுது சர்க்கரை பாகினை கொண்டு தயார் செய்யப்படுகின்றது.

Saturday, 9 August 2014

காற்றடி கால கவனம்.

            
தமிழகத்தின் பருவநிலை மாற்றங்களில் மழை பொய்த்து கோடைகாலம் மட்டுமின்றி காற்றடி காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப காற்றினையே அதிகம் நுகரக்கூடியவர்களாக பெரும்பகுதிமக்கள் இருந்துவருகின்றோம். மாறிவரும் பருவசூழ்நிலைகளுக்கு ஒப்ப காற்றடிகாலங்களில் பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் அனைவரும் அறிந்த விசயங்களாக இருந்தாலும் நினைவூட்டுவது தானே இணையத்தின் கடமை. அந்தவகையில் காற்றடி காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை கீழ்காணலாம்.
1.   சாலையோரம் மற்றும் வீடுகளில் உள்ள மரங்களின் ஒருசில கிளைகள்  வறட்சியின் காரணமாக காய்ந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்த தயார் நிலையில் இருந்துவரும் அம்மரங்களின் காய்ந்த கிளைகளை அகற்றவேண்டும்.

Tuesday, 1 July 2014

உழைப்பாளியை பூமி உள்வாங்குவது ஏன்?


ஆந்திரா, கர்நாடகா
இலங்கை  இறக்குமதி
நடிகர்களை ஆட்சியாளராயும்,
குபேரர்களாகவும் மாற்றிய
கடவுளர்களே என் கட்டிட
தொழிலாளிகளை மட்டும்
உள்வாங்குவது ஏனோ?

வானம் தொட்டுவிட முதலாளியும்
கட்டிடங்களும் முயற்சிகையில்
முறுக்குகம்பி,சிமிட்டிகளுக்கிடையே 
சித்தாலை மட்டும்
சிக்கவைப்பது ஏனோ?
பொறியாளனை மட்டும்
பொறிவைத்து பிடிப்பது ஏனோ?

உழைப்பாளி அரிதாகிவிட்ட
தமிழ்மண்ணில் இனியாவது
உழைப்பாளி பிறக்க விதையாக
என் உழைப்பாளிகளை
உள்வாங்கி இருப்பானோ?

உழைப்பாளியே உஷார்.

கடவுளும் மோட்சம் தருவதாக
மோசம் செய்திடுவான்
ஏமாறி பழகிவிட்டோமே நாம்
மோட்சத்தின் கட்டிடமும்
உங்களை கொண்டுதான்
கட்டவேண்டும் அதற்காக தான்
உள்வாங்கினேன் என
கடவுளும் உன்னை ஏமாற்றி
வேலைவாங்க போவது உறுதி.
                               வஹாப் ஷாஜஹான்.
                                      திருமங்கலம்.

Saturday, 24 May 2014

போரின் மறுபக்கம்

       
   

                     புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : போரின் மறுபக்கம்
வெளியிடு         : காலச்சுவடு பதிப்பகம்
விலை            : ரூபாய் 200
ஆசிரியர்          : தொ. பத்தினாதன்.

அனுபவமிக்கவர்கள் நம்மிடம் “ உலகில் உன்னை விட வறுமையிலும் கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்து நீ எந்தளவு சுகபோகியாய் இருக்கின்றாய் என தெரிந்து கொள் ” எனக்கூறுவர். ஆம் இந்த புத்தகத்தினை படித்ததால் சவால் விட்டு கூறுவேன் தமிழகத்தில் உள்ள மக்களில் ஆக கடைசி வறுமையாளர்களை விட இலங்கை தமிழ் அகதிகள் மிகுந்த வறுமையிலும் மனகஷ்டத்திலும் உள்ளார்கள் என்று.
தொ. பத்தினாதன் என்ற அகதியின் சுயசரிதையை படித்தபின்பு வலைதளங்களில் சினிமாவிற்கும்,பாலியல் கவிதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர்களை புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அவர் தன் எழுத்துக்களில் மனநோயாளியாய், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், நண்பர்களுக்கு கடமைபட்டவராய், சக அகதிகளின் சூதாட்டகுணங்களையும், க்யூ பிரான்ச் போலிஸிற்கு பயந்த கூட்டமாய், மலம் கழிக்கக்கூட இடமில்லாதவர்களாய் பலவழிகளில் அவர் தம் நடந்துவந்த பாதையில் நம்மையும் புத்தகத்துடனேயே அழைத்து செல்கிறார்.

Wednesday, 21 May 2014

கொடைக்கானலில் பசுமைநடை


சேர,சோழ,பாண்டிய மன்னர்களையும்,மொகலாய மன்னர்களையும்,ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் பள்ளி வரலாற்று புத்தகத்தில் மொட்டை மனப்பாடமாக கரைத்து குடித்து பரிட்சை அறையில் கக்கி பள்ளியில் தேறிவருவது தான் நமது வளமை.ஒருவரிடம் உங்கள் தாத்தாவின் அப்பா பெயர் என்ன?என வினா எழுப்பினால் 70 சதவீதத்தினருக்கு தெரியாது.இன்னும் தாத்தாவின் தாத்தா பெயர் கேட்டால் 90 சதவீதத்தினருக்கு தெரியாது. பெரும்பாலோர் தங்கள் குடும்ப வரலாற்றினையே தெரிந்து வைப்பது இல்லை. அப்புறம் எப்படி தான் சார்ந்த ஊர் வரலாறு,தனது பகுதியில் இருக்கும் கோயில்கள், இயற்கையின் அருட்கொடையான மலைகளில் வாழ்ந்த பழங்குடியினர்களின் வரலாறு அறியும் ஆர்வம் ஏற்படும்.
தமிழ்குடி தான் உலகின் மூத்த குடி என்ற உண்மைதனை வாய்மொழியில் பெருமை பேசுவதினைக் காட்டிலும் நமது சுற்றுப்பகுதிகளில் உள்ள தொண்மை நிறைந்த பகுதிகளின் வரலாற்றினை அறிவதும் நமதுவாரிசுகளுக்கும் அறிவிக்கின்ற பணி இன்று தலையானதாகும்.  இந்த பணியினை திருவிழாக்களின் நகரான மதுரையை தலைமையிடமாக கொண்டு பசுமைநடை குழுவினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

Wednesday, 30 April 2014

உழைப்பாளி யார்?


சமீபத்தில் தொடர் விடுமுறை  கிடைக்க பக்கத்து கிராமத்து நண்பனின் விவசாய நிலம்  பார்க்க கிளம்பினேன். எங்க ஊரிலிருந்து கால்மணி நேர பயணத்தில் கிராமம் சென்றேன். நண்பனுடன் ஊர் மந்தைக்கு அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டப்படி கடையை நோட்டமிட்டேன். அடுப்பில் பணியாரம் போட்டப்படி ஒரு பெண்ணும் டீப்பற்றையில் இருந்தவரும் பேசியதிலிருந்து கடையை நடத்தும் இவர்கள் தம்பதியர் என தெரிந்து கொண்டேன். பனியனுடன் இருக்கும் டீ மாஸ்டரிடம் நம்ம வாயிதான் சும்மா இருக்காதே   பேச்சு கொடுத்தேன்.என்னனே கிராமத்திலே டீக்கடை வச்சு எப்படி கட்டுதுனே? அவரு தம்பி எங்கப்பாரு விவசாயம் பார்த்தாரு ,நான் விவசாயம் பாக்க புடிக்காம மதுரையலே ஒரு பாய் மூலமா துபாய் போனேன். அங்க ஸ்டேசினரி கடையிலே லோடுமேனா மூணு வருஷம் வேலை பார்த்தேன். லிவுக்கு வந்தேன்.திரும்பி போக மனசு வரல.கொஞ்சம் கையில இருந்த பணத்தகொண்டு, பஸ்ஸூ இங்க நிண்டு போறதாலேயும், எதிக்க இருக்க கவர்மெண்ட் ஸ்கூல் பசங்க,வாத்தியாருங்க அப்புறம் ஊருக்குள்ள இப்ப விவசாயம் அதிக இல்லாததால பசுமாடு யாருட்டேயும் இல்லேன்றனால ஏதோ டீக்கடையும் பெட்டிகடையுமா இந்த கடையை கட்டி புருஷனும் பொண்டாட்டியுமா காலத்த ஒட்டுரோமினார்.

Wednesday, 23 April 2014

விழித்துக்கொண்ட விவசாய வி.ஐ.பிகள்

2014 பாராளுமன்ற தேர்தல் களத்தில் அனைத்து அரசியல்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பலலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம் என்பது இடம்பிடிக்கின்றது. இந்த வேலைவாய்ப்புகள் மூலம் நகரமயமாக்கல் என்பது இன்னும் அதிகரிக்கும். கிராமங்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு நகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணமே உள்ளனர். தற்பொழுது 50% உள்ள நகரமயமானது மேலும் அதிகரிக்கையில் விவசாயம் முற்றிலும் நின்று உணவிற்கு நாம் இறக்குமதியினையே நம்பிய நிலைக்கு தள்ளப்படுவோம். தமிழகத்தில் விவசாயநிலையானது சென்ற காலங்களை ஒப்பிடுகையில் -12% என்ற பின்தங்கிய நிலைதனை அடைந்து வறட்சிமாநிலமாக திகழ்கின்றது.

“கியூபா நாடானது இலங்கையை விட பரப்பளவில் குறைவாக இருந்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளமைக்கு அங்கு கடைபிடிக்கப்படும் இயற்கை விவசாயமே காரணம்”

Wednesday, 19 February 2014

"உலக சமூக நீதி நாள் "

இன்று "உலக சமூக நீதி நாள் " 


உலகம் முழுவதும் ஏழை மற்றும் செல்வம் உடையவர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி கொண்டே வரும் இந்நாட்களில் வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான அனைவருக்கும் வேலை மூலமும் மனித வளம் மேம்படுத்தி ஏழைகள் மற்றும், ஒடுக்கப்பட்டோர்களின் குரல்களின் நியாயங்களை கேட்டு உறுதி செய்ய வேண்டும்." 

ஐ நா பொது செயலாளர் பான் கி மூன் 
சமூக நீதி 2014 உலக தினம் செய்தி

Monday, 13 January 2014

பொங்கல் கடமை.

தமிழர்கள் தங்களின் குடும்ப பழம்பெருமைகளையும் பன்னெடும் மத சாதிய உயர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு தங்கள் பிறந்த இத்தமிழ்மண்ணின் பெருமைகளையும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த உழவுசார் வாழ்வினை அறிவது இல்லை. பொங்கல் பண்டிகையின் மூலம் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டியது முதலில்
உண்ண உணவு வழங்கி வரும் உழவிற்கு வந்தனை செய்யவேண்டுவதும் வந்தனை செய்யாவிடினும் நிந்தனை செய்யாமல் இருக்கவேண்டியே இக்கட்டுரை.

சங்கம் அறிவோம்.
தமிழர்கள் தமது பெருமைகளை அறிந்துகொள்வதற்கான சங்க இலக்கிய நூல்களை தங்களிடமிருந்து வெகுதொலைவிற்கு ஆங்கிலக்கல்வியை முன்னிருத்தி  தொலைத்து வருகின்றனர்.சங்க இலக்கியம் கற்ற எந்த மனிதனும் தனது மண்னை வறண்டு போக செய்யமாட்டான். ஏனெனில் சங்க நூல்கள் அனைத்தும் இயற்கையோடு இணைந்து தமிழர்கள் வாழ்ந்த பெருமைதனை சொல்லிவருகின்றது.சங்க இலக்கியங்களில் மனிதனின் வாழ்வு, வீரம், சோகம்,வெற்றி,தோல்வி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இயற்கை சார்ந்த விவசாய நடவடிக்கைகளை உவமானங்களாக கொண்டே படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குறுந்தொகை பாடலில் “சிவப்பு தினணயானது கரும்பினை போன்று வளர்ந்துள்ளது என்பதிலும்,புறநானூறு பாடலில் மரண செய்தி கேட்ட பெண்கள் மார்பில் அடித்து அழுகின்ற நிகழ்வினை “ஊழின் உருப்ப எருக்கிய மகிளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற” என்பதில் அதாவது மார்பில் அடித்து அழும்பொழுது பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப்பூக்கள் போன்று நிலத்தில் சிதறின என உரைப்பதிலிருந்து அறியலாம்.

Sunday, 12 January 2014

கதிர் பொங்கல்மலர்

பசுமைநடை பொங்கல்விழா
நேற்றைய ஞாயிறு (12.01.14) மிகுந்த உற்சாகம் மிகுந்த நாளாக அமைந்தது. என்னவெனில் நண்பர்களே பசுமைநடை பொங்கல்விழா இனிதே நடைபெற்றது.எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டில் மாலை 4 மணிக்கு துவங்கிய விழா இரவு 8.30 மணிவரை மிகவும் பயனுள்ள பொழுதாக அமைந்தது.இதில் வயிற்றிக்கும் செவிக்கும் வழங்கப்பட்ட திகட்டாத இனிப்பானது இப்பொழுது நினைத்தாலும் தித்திக்கின்றது.

கதிர் பொங்கல்மலர்
முதலில் அனைவரும் இணைந்து சர்க்கரை பொங்கல் தயார் செய்து சாப்பிட்ட பிறகு கதிர் பொங்கல்மலர் (இரண்டாம் ஆண்டு) வெளியிடப்பட்டது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டின் “நிலா முற்றம் பெயருக்கு ஏற்றார்போல் மொட்டை மாடியில் மலர்வெளியிடு நடைபெற்றது. சர்க்கரைப் பொங்கல்களுக்கு போட்டியாக எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களின் சிறப்புரையும்,மலர் வெளியிட்ட எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மற்றும் மலரினை பெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்,பெ.சின்னச்சாமி ஆசிரியர்,கு.குருசாமி துணை ஆட்சியர்(ஓய்வு) அவர்களும் தலைமையேற்ற மூ.பா.முத்துக்கிருஷ்ணனும் நன்றியுரையாற்றிய தி.கண்ணன் ஆசிரியர் அவர்களும் சிறப்பாக உரைநிகழ்த்தினர். இரவு வீடுதிரும்பிய பின்பும் கையில் நெய்மணமும் மனதில் தமிழர்தன் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரிய பெருமையும் நிலைத்து மகிழ்ச்சி பொங்கியது.