Monday, 19 January 2015

படையல் ருசிச்சு பாரு

சென்னையில் புத்தகக்கண்காட்சி துவங்கி வாசிப்பின் அவசியத்தினை தமிழ் உலகிற்கு அறைகூவல் கொடுத்து வருகின்றது. தமிழ் எழுத்து உலகமே தனது படைப்புகளை சென்னை நோக்கி திருப்பி கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஓர் நிகழ்வு. மதுரை செக்கானூரனியில் காலை சூரியன் தனது கதிர்களை விரிக்க துவங்கிய தருணத்தில் நெற்கதிர்கள்  விளைந்த வயல்வெளிக்கு நடுவே கதிர் பொங்கல் மலர் 2015 “படையல்” வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் மதப்பண்டிகைகளான தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கலுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதிக நாட்கள் பொங்கலுக்கு அரசு விடுமுறை விடப்பட்டாலும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை. பத்திரிக்கை உலகமும் தீபாவளி மலருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கல் மலருக்கு கொடுப்பதில்லை. தற்பொழுது அந்த நிலை சற்று மாறி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் மலர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உறுதி எடுத்ததன்  பலனாய் உதித்தது தான் கதிர் பொங்கல் மலர். புதிதாக எழுத துவங்கிய திருமங்கலம் இலக்கிய சகோதரர்களிடம் படைப்புகளை பெற்று அதனை வெளியிட்டது மேலும் சிறப்பு.  

Friday, 16 January 2015

பொங்கல் விழா


இயற்கை செல்வங்கள் வழங்கிய கொடைகளுக்கு கைமாறு பொங்கல். நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா சற்றே இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. தங்களின் தாத்தாக்களின் தாத்தா வாழ்ந்த கிராமங்களை பற்றி நகரத்தினர் யாரும் நினைக்கக்கூட நேரமில்லை. நாம் உண்ணும் உணவினை கொடுக்கும் உழவர்கள் வாழும் உன்னதமான கிராமத்தினையும், வயல்வெளிகளையும் பார்வையிடும் எண்ணம் கூட நம் நகர மக்களிடம் இல்லை. நகர மக்கள் பலரும் தங்கள் பகுதிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தினை கூட காண செல்வது இல்லை. கிராமங்களைப் பற்றி கேட்டதினையும், படித்ததினையும், திரைப்படங்கள் மூலமும் கிராமம் என்றால் இப்படி தான் என்று நினைத்து வாழ்ந்து வருகின்றனர். கிராம மக்களும் தங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக உருவாகும் நகரங்களின் மாதிரிகளை கொண்டு தங்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகரின் தொண்மையான பகுதிகளுக்கு அழைத்து சென்று அதன் வரலாற்றினை உலக அறிய செய்யும் அமைப்பு பசுமைநடை இது தாங்களறிந்ததே.

Friday, 2 January 2015

பூவே பூச்சூடவாபெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா? இந்த கேள்விக்கான விடையை கடவுள் முதல் கடைகோடி மனிதன் வரை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி நாம் அறிந்தது. சங்கஇலக்கிய நூல்கள்  பெண்கள் கூந்தல் குறித்து பலகாவியங்கள் படைத்துள்ளன. பெண்கள் கூந்தல் பேணுதல் ஒரு தனி கலையே. நறுமண எண்ணெய் தடவி வகிடெடுத்து சடை பின்னி மலர்கள் சூடுதல் அப்பப்பா.. அழகிற்கு அழகு சேர்த்தல் இது தானோ? இம் மண்ணுலகில் மலருக்கு மயங்காதவர் யார் உளர்? பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் காஷ்மீர் மலர்களுக்கு பெயர் போனது.
ஆனால் அங்கு பெண்கள் மலர்களை பெருமளவில் சூடுவதில்லை. கேரளாவில் ஓனம் பண்டிகையின் பொழுது மகாபலி அரசர் வருகைக்காக மலர்களைக் கொண்டு தரைகளையே அழகுபடுத்துவர். தமிழகத்தில் மட்டும் தான் சென்ற நூற்றாண்டுகளில் ஆண்களும், பெண்களும்  கூந்தல் வளர்த்து மலர் சூடியுள்ளனர்.