Friday, 2 December 2016

புள்ளோடு புது பொங்கல்பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம். தற்பொழுது பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் (மது) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இங்கே நாம் கூறும் புள்பறவையாகும். பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை காப்பாற்றிய  சிபி சோழனையும், மயிலுக்கு போர்வை தந்து உதவிய பேகனையும்,  பறவைகள் , பயம் கொள்ளக்கூடாது என்பதற்காக தேரின் மணிகளை  கழட்டி விட்டு பயணித்த தலைவர்களையும் பெற்றது நம் தமிழகம். இவ்வகையான பாரம்பரியத்தில் வந்த நம் தமிழ் பறவை ஆர்வலர்கள்  திண்டுக்கல், கோவை என்ற வரிசையில் கடந்த மாதம்  திருநெல்வேலியில் பி.எஸ்.என் கல்லூரியில் தங்களது மூன்றாவது ஆண்டு சந்திப்பை  நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஊருக்கே உரிய வகையில் பல  இனிப்பான செய்திகள் கிடைத்தன.

Sunday, 4 September 2016

தே மதுர தேவன் குறிச்சி 2


திண்டுக்கல் பூட்டிற்கு பெருமிதம் கொண்டது என்பதால் திண்டுக்கல் செல்லுபவர்கள் யாரும் வாய்ப்பூட்டு போடுவதில்லை. நன்றாக திண்டுக்கல் பிரியாணியை ஒரு பிடி பிடித்தே திரும்புவர். ஆம்பூர் சென்றால் அன்லிமிட்டா (unlimit)  பிரியாணி சாப்பிடுவது போன்று நம்ம கல்லுப்பட்டி பயணம் உளுந்தவடையில் சிறப்புடையது. தேவன் குறிச்சி ஆஞ்சிநேயருக்கு வடைமாலை படைப்பதுடன் நம் வயிற்றுக்கு வடை வார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 உளுந்த வடையும் சீரணியும் கல்லுப்பட்டி பஸ்நிலையத்தை சுற்றியுள்ள கடைகளில் காட்சி பொருளாக வைத்து அதை நோக்கி நம் நாக்கினை எச்சில் ஊற வைப்பர்.  உளுந்த வடையை தேங்காய் சட்டினியில் ஊறவைத்து குளோப்ஜாமுன் போல் கரைத்து வயிற்றுக்குள் இறக்கி கொண்டே இருக்கலாம்.

தேவன்குறிச்சி ஆதி சமண பெரும் தளமாக இருந்தற்கான சான்றுகள் காண தொடர்வோமா?

Sunday, 21 August 2016

தே மதுர தேவன் குறிச்சிமலையும் மலை சார்ந்த பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.   6000ம்  ஆண்டுகால தள வரலாறும் , ஆறு விதக்  கடவுள் வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே இணைந்த  அதிசய மலை  தேவன்குறிச்சி .   மேற்கு தொடர்ச்சி மலைகளின்  அழகில் இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது.  இம்மலை  மதுரையிலிருந்து  சுமார் 40கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது.  மதுரை , திருமங்கலம், தே.கல்லுப்பட்டி வழியாக  பேரையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  தே.கல்லுப்பட்டி  என்னும்  ஊரின் பெயரில் தே என்பது  தேவன்குறிச்சி யையே  குறிக்கும். சூழல் உலாவின்  சமீபத்திய பயணமான  தேவன் குறிச்சி (குறிஞ்சி) யின் மறக்கவியலா பயணக்குறிப்புகள் தங்களின் இனிய பார்வைக்கு…

ஆறு கடவுள் வழிபாடு.

ஸ்ரீ அக்னீஸ்வரர்  கோமதி அம்மன் கோயில்”  என்ற வரவேற்பு நுழைவாயில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும் நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில்  ஒன்றும் உள்ளது.

Saturday, 6 August 2016

பாலுக்கும் புற்றுக்குமான பிணைப்புவருமானம், வியாபாரம் மீதான விசாலப்பார்வை விருந்து என்ற தமிழர் பாரம்பரியத்தை விடைபெற செய்துவிடுமோ என்று கவலை கொள்கின்ற எண்ணில் அடக்காதோர்களில் நானும் ஒருவன். விருந்து என்றவுடன் விரண்டோடும் காலமாய் நகர்புறம் உள்ளது. சமீபத்தில் கிராமப்புற நண்பர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றோம்.. நண்பர் கோழி கறிக்கடை நடத்துபவர். நான் சென்றதன் ரகசியம் உங்களுக்கு தெரிந்திருக்குமே!. நகரின் வெளிப்புற பகுதியில் குடியிருப்பு. வியாபார நோக்கில் சுமார் 20 வெள்ளாடுகளும், 50க்கும் மேற்பட்ட நாட்டு சேவக் கோழிகளும் 4 வாத்து சில புறாக்கள் என  கண்களுக்கு எங்கு பார்த்தாலும் உயிரினங்கள் மகிழ்வாய் காட்சித் தந்தன. நாங்கள் சென்ற நேரம் வளர்ப்பு பிராணிகளின் பிரசவ காலமோ என்னவோ பலவும் குட்டி போட்டிருந்தன.  இதில் ஆடு முதல் நாள் தான் குட்டி போட்டிருந்தது. நாய் சிலநாட்களுக்கு முன்பு தான் குட்டி போட்டுள்ளது. அவர்கள் வீட்டை ஒட்டிய மரத்தில் அணில் குஞ்சி பொறித்திருந்தது. மற்றொரு மரத்தில் காக்கா முட்டையிட்டு குஞ்சு பொறிந்து குஞ்சுகள் வெளியே வந்து கொண்டிருப்பதாக மாடியில் இருந்து லைவ் ரீலே  குட்டீஸ்கள் செய்தன.

Tuesday, 26 July 2016

சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி

கிட்டன்ஸ் காலி 3டி வள்ளி
சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி
கடன்பட்டார்  நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். கம்பன் கடன் எவ்வளவு கலக்கம் கொடுக்கும் என்பதை உணர்ந்து எழுதியுள்ளான். கலக்கம் கொடுப்பதால் தானோ என்னவோ கக்கா போற மேட்டருக்கும் காலைக் கடன்  என பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும் கிராமங்களில் அதிகாலையில் செம்புடன் வயங்காட்டை நோக்கி படையெடுக்கும் கூட்டம் எந்த கடனை அடைக்கா விட்டாலும் காலைக் கடன் அடைப்பை அகற்றி விட்டே வீடு திரும்பும்.  நடிகர் கவுண்டமணி சொல்வது போல் நிலத்திற்கு உரம் போடும் பணியில்  தான் தற்பொழுது பலருக்கும் பல பிரச்சனைகள். ஒருசிலருக்கு மலச்சிக்கல் என்றால் மற்றொரு சாராருக்கு வயிற்றுப் போக்கு என  போக்கு காட்டுகிறது கக்கா மேட்டரு.

Sunday, 29 May 2016

ரெட்டவால் திருவிளையாடல்திருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும்  தெரிந்து வைத்துள்ளோம். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்டஅன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த அற்புதங்களே திருவிளையாடல்.  சிவனின் திருவிளையாடல்கள் பல உயிரின பாதுகாப்பாக இருந்தது. சங்கப்பாடல்கள்  பழம் பெரும் மதுரையின் இயற்கையினை அழகுற கூறியுள்ளன. அவைகள் அனைத்தும் இன்று மிகைத்த கற்பனையோ என எண்ணும் வகையில் மாறி வருகின்றது மதுரை. மதுரைக்கு வருபவர்கள் சுபிட்சம் பெற்றவர்களாய் மாறுவர் என்கின்றது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இப்புராணம் இறைவழிப்பாட்டினை இயற்கை செல்வங்களோடு இணைத்து கொண்டுசெல்கின்றது. சிவனின் திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த  படலம், பரியை நரியாக்கிய படலம், வெள்ளையானை சாபம் தீர்த்தப்படலம், பன்றி குட்டிக்கு முலை கொடுத்தப்படலம் என உயிரினப்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தமைந்துள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கையை பாதுகாப்பது ஆன்மீகத்தின் ஒருபகுதியாக மாற்றி வைத்திருந்தனர்.ரெட்டவால் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான எனது கட்டுரை

Friday, 15 April 2016

நீர்க்கோழி போலவே நீந்துவேன்


நீங்கள் உங்கள் முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண் கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம் சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு கனவில் நடனமாட சென்று விடுவீர்கள். நடனமாட தெரியாதவராக  இருந்தால், “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன?”  இப்பாடலை முணுமுணுக்கவாவது செய்வீர்கள் இல்லையா. ஆம் நண்பர்களே கட்டுரையின் நாயகி இப்படி தான். அவள்  சாம்பல் நிற மேனியாள். ஆனால் அவள் முகமும் நெஞ்சும்  வெந்நிறம். மூக்கில் இருக்கும் சிவப்பு மச்சம் நம்மை சுண்டி இழுக்கும். ஆனால் அவள்  மனித பதர்களை கண்டால் உடனே ஜகா வாங்குவது போல் ஜகா வாங்கி பதர்களை பதைபதைப்புடன் கவனிப்பாள். மிகுந்த வெட்க குணத்தாள். இவள் நடந்தால் பின்பக்கம் சற்று தூக்கியபடி குட்டை வாலுக்குப்பின் செந்நிற இறகுகள் நம்மை கிறங்கடிக்கும்.

Wednesday, 23 March 2016

காட்டுச் சிறுக்கி ச்ச… பருத்தி...

கோங்கமலர் என்ற காட்டுப்பருத்தி


தங்கம் மஞ்சள் நிறத்தில்  இருப்பதால்தானோ என்னவோ பெண்களையும் தங்கத்தையும் பிரிக்க முடிவதில்லை. மயக்கும் மஞ்சள்வண்ணம். பெண்கள் மிகவும் விரும்பும் வண்ணம், மாம்பழம், மாஞ்சிட்டு, சூரியகாந்திப்பூ என மஞ்சள் மழையில் நனையலாம். வண்ணங்களில் ஆன்மீகத்தினையும், மருத்துவக்குணங்களையும் ஒரு சேர பெற்றுள்ளது மஞ்சள். மலர்களில் ஆவாரம்பூ, சூரியகாந்திப்பூ, கோங்க மலர், சாமந்திப்பூ முக்கிய இடம் வகிக்கின்றன.

Sunday, 13 March 2016

த்தூ……..

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில்  அரசியல் வாதிகளின் அநாகரிக பேச்சும் அதை வெளியிடும் ஊடகங்கள் நிலையும் மேலே தலைப்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது. சமீபத்தில் விஜயகாந்த் ஊடக அன்பர்களை பார்த்து த்தூ…. என்பதில் நியாயமில்லை தான். ஏனெனில் அவரும் கேப்டன் தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு சொந்தக்காரர். ஆனால் இந்தியாவின் நான்காவது தூண் என போற்றப்படுகின்ற ஊடகத்தின் உண்மை நிலை என்ன? ஊடகத்தில் களப்பணியாற்றுகின்ற நிரூபர் முதல் நிறுவனத்தின் முதலாளி வரை அறம் சார்ந்த பார்வை கானல் நீராகவே உள்ளது. இதில் ஒரு சில தனிநபர்களே விதிவிலக்கு. முழுமையாக இந்த ஊடக நிறுவனம் சரியாக செயல்படுகின்றது என்று சொல்லும் நிலை இன்று இல்லை .

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது கைப்பாவையாக செயல்படும்  ஊடகங்களை வைத்துள்ளன. ஒவ்வொரு ஜாதி,மத அமைப்புகளும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஊடகங்களை கையில் வைத்துள்ளன. பொதுமக்கள் தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் தான் சார்ந்த ஊடகங்கள் வழியாகவே பார்வையிடுகிறார்கள்.

Monday, 29 February 2016

பலாச மலர்கள்

பலாப்பழம் தெரியும். பழரசம் தெரியும். காக்காமுட்டை பழரசமும் தெரியும். பாசமலர் படம் கூட தெரியும். அதென்ன பலாச மலர்? இந்த பெயரில் மலர்கள் இருப்பது குறித்து  பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதி மனிதன் நோய்களுக்கு மலர்களையும், இலைகளையும், வேர்களையும் கொண்டு மருத்துவம் செய்து குணமடைந்து வந்தான். இன்று நாம்  அவர்கள் காப்பாற்றிய மரங்களையும் மருத்துவமுறைகளையும் துலைத்து விட்டோம். மூலிகை மருத்துவத்தில் நாம் தொடர்ச்சியாக ஈடுபடாத காரணங்களால்  வேதிப் பொருட்கள் உட்கொண்டு உடலை விஷமாக மாற்றி வருகின்றோம். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் பெயர்களை நடிகர் சிவக்குமார் வரிசையாக மூச்சுவிடாமல் கூறினால் ரசிப்போம். ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களில் எத்தனையை உயிர்ப்புடன் வைத்துள்ளோம். இன்னும் எத்தனை மலர்கள் நமக்கு அடையாளப்படாமல் இருக்கின்றது. இவை குறித்து கவலை கொள்ள இங்கு எத்தனை பேர்கள் உள்ளோம். இன்றைய அவசர உலகில்  இயற்கை அழகு கொஞ்சும் மலர்களை ரசிப்பதற்கு தான் நமக்கு நேரமிருக்கின்றதா?.

Wednesday, 24 February 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்


வாசிப்பு என்னிடமிருந்து தூரம் சென்ற காலம் போய் தற்பொழுது வாசிப்பு வசப்படும் காலமாக மாறியிருக்கின்றது. இதை தக்க வைக்கும் முயற்சியாக தேர்ந்தெடுத்த நூல்களை வாசித்து வருகிறேன். அர்ஷியா சார் அவர்களின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பில் நேற்று முன் இரவு பொழுது வசப்பட்டது. சிறு குறிப்பு வைத்து கொண்டே வாசிப்பேன். நூல் முழுவதும் படித்து முடித்த பின் சிறுகுறிப்புகள் பலபக்கங்களை உள்வாங்கியிருந்தது. சிறு குறிப்புகளை பதிவாக போடலாம் என எண்ணி இந்த சிறு முயற்சி.  முதல் கதை மெளனசுழியில் மாற்றுமதத்தவரை திருமணம் செய்த மகளுடனான  ரசாபாசத்தினை உளுவ மீனின் ருசிக்கு இடையே விருந்து படைக்கிறார்.  மகள் பெயரில் எழுதும் எழுத்தாளர் என்பதால் முதல் கதையும் மகள் நேசம் குறித்து உருகவைக்கின்றார்.