Monday 13 January 2014

பொங்கல் கடமை.

தமிழர்கள் தங்களின் குடும்ப பழம்பெருமைகளையும் பன்னெடும் மத சாதிய உயர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு தங்கள் பிறந்த இத்தமிழ்மண்ணின் பெருமைகளையும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த உழவுசார் வாழ்வினை அறிவது இல்லை. பொங்கல் பண்டிகையின் மூலம் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டியது முதலில்
உண்ண உணவு வழங்கி வரும் உழவிற்கு வந்தனை செய்யவேண்டுவதும் வந்தனை செய்யாவிடினும் நிந்தனை செய்யாமல் இருக்கவேண்டியே இக்கட்டுரை.

சங்கம் அறிவோம்.
தமிழர்கள் தமது பெருமைகளை அறிந்துகொள்வதற்கான சங்க இலக்கிய நூல்களை தங்களிடமிருந்து வெகுதொலைவிற்கு ஆங்கிலக்கல்வியை முன்னிருத்தி  தொலைத்து வருகின்றனர்.சங்க இலக்கியம் கற்ற எந்த மனிதனும் தனது மண்னை வறண்டு போக செய்யமாட்டான். ஏனெனில் சங்க நூல்கள் அனைத்தும் இயற்கையோடு இணைந்து தமிழர்கள் வாழ்ந்த பெருமைதனை சொல்லிவருகின்றது.சங்க இலக்கியங்களில் மனிதனின் வாழ்வு, வீரம், சோகம்,வெற்றி,தோல்வி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இயற்கை சார்ந்த விவசாய நடவடிக்கைகளை உவமானங்களாக கொண்டே படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குறுந்தொகை பாடலில் “சிவப்பு தினணயானது கரும்பினை போன்று வளர்ந்துள்ளது என்பதிலும்,புறநானூறு பாடலில் மரண செய்தி கேட்ட பெண்கள் மார்பில் அடித்து அழுகின்ற நிகழ்வினை “ஊழின் உருப்ப எருக்கிய மகிளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற” என்பதில் அதாவது மார்பில் அடித்து அழும்பொழுது பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப்பூக்கள் போன்று நிலத்தில் சிதறின என உரைப்பதிலிருந்து அறியலாம்.

விவசாயமே உயிர்மூச்சு
இந்த சங்க இலக்கிய பெருமைகளை படித்து உணராத காரணங்களால் தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் பத்து லட்சம் விவசாயிகளை மாற்று தொழிலுக்கு அனுப்பிவிட்டு வறண்ட தமிழகமாக  மாற்றி வருகின்றோம்.இன்று காய்கறி மற்றும் தானிய வகைகளின் விலைவாசி உயர்விற்கு காய்கறி வரத்து குறைவேகாரணம்.இந்த தானியவரத்தினை அதிகரிக்க செய்ய விவசாயிகள் முன்னேற வழிவகுப்பதும் நீர்நிலைகள் இயற்கை அரண்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தினையும் அரசிற்கு உணர்த்திடல் வேண்டும்.தமிழர்கள் கிபி 7ம் நூற்றாண்டிலேயே வைகை ஆற்றினையும் கிருதுமால் நதியினையும் இனணத்து வாய்க்கால் வெட்டி நீர்தேக்கத்தினை உருவாக்கியதாக மதுரை மீனாட்சிகோயில் ஆயிரங்கல் மண்டபத்து கல்வெட்டு கூறுகிறது.
பொங்கல் பண்டிகை
இன்று தமிழர்கள் தங்கள் மதப்பண்டிகைகளான தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளைமுன்னிருத்தி பொங்கல் கொண்டாட்டத்தினை பின்னுக்கு தள்ளிவருவது பொங்கல் என்றாலே விவசாயம் சார்ந்தது. தமிழகத்தின் விவசாயிகள் எலிக்கறி உண்ணும் நிலையிலும் கஞ்சிதொட்டியும் திறந்து வறுமையில் வாடி வரும் நிலையில் விவசாய பண்டிகையான பொங்கலை எப்படி கொண்டாடுவான். விவசாயத்திற்கும்  தமிழனுக்கும் சம்பந்தமில்லா நிலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதினை நீக்க தமிழக அரசினை விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுக்க செய்ய இளைஞர்கள் வழியுறுத்துவதன்மூலமும்,இலவசங்களுக்கும்,புதியநகரமைப்பு,மிகப்பெரிய சிலைகள் அமைப்பதற்கு ஒதுக்கும் நிதியினை தவிர்த்து நீர்நிலைகளான ஆற்று,குளம்,கண்மாய்களை சீர்ப்படுத்துவதற்கும் விவசாயிகளின்  நலனில் அக்கறைகொள்வதற்கு நிதிகளை ஒதுக்கச்செய்ய வழிவகுப்பதும் நமது கடமையாகும். பொங்கல் என்ற சொல், தமிழில் சோறு பொங்குவதையோ, பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல், உயர்தல், எழுதல், பொழிதல், நிறைதல், மிகுதி என பல அர்த்தங்களுடன் உள்ளும், புறமும் உற்சாகத்தை பொங்கவைக்கும் ஒரு சொல். மண்ணும், மனமும் இயற்கையால் நிறைந்து வழிவதை சொல்வது. நாம் பிறந்த இந்த தமிழ்மண்ணினை வணங்கி வழிபடுவதினை காட்டிலும் விவசாயத்தின் மூலம் உயிர்ப்பிப்பதே இன்றைய பொங்கல் கடமையாகும்.

உங்கள் உழைப்பாளி.

No comments:

Post a Comment