Thursday, 6 November 2014

கமலும் நானும்


சிறுவயது முதலே கமல் இந்த வார்த்தை எனது ஊக்கமருந்து ஆகும். எனது தாய் மாமன்  மற்றும் எனது (பெரியப்பா) அண்ணன்மார்கள் கமல் ரசிகர்கள். இயற்கையாகவே நானும் கமல் ரசிகன். சலங்கைஒலி திரைப்படத்தினை பார்த்துவிட்டு நான் ஆடிய பரதத்தினை இன்றும் எனது வீட்டில் கிண்டல் செய்வர். நான் படித்த பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிந்துவிடும் நான் கமல் வெறியன் என. கல்லூரி ஆசிரியர் என்னை குணா என்றே அழைத்து கிண்டல் செய்வார். உண்மையில் நான் கமல் மீது கொண்ட காதலில் குணா கமலாகவே தான் இருந்தேன் என்றால் மிகையாகாது.


கமலின் புதுப்படங்கள் வந்து விட்டால் எனது திருமங்கலத்திலிருந்து விருதுநகர் சென்று பார்க்க வீட்டில் அனுமதி வாங்க மிகப்பெரிய போராட்டமே நடத்துவேன். அந்த படத்தில் கமல் என்ன ஆடை உடுத்துவார் என்று பார்த்து அதே போன்ற ஆடையினை வாங்கி உடுத்தி செல்வது வழக்கம். எங்கள் பகுதி  சந்தனக்கூடு விழாவில் எங்கள் கூட்டம் நடக்கும் பொழுதே தெரியும் கமல்படை வருகின்றது என்று. எங்கள் பகுதியில் கமல் ரசிகர் மன்றம் அமைக்க முடிவு செய்து விக்ரம் படம் வந்த புதிது என்பதால் “விண்வெளி வீரர் கமலஹாசன் நற்பணிமன்றம்” திருமங்கலம் என பெயரிட்டு பதிவெல்லாம் செய்தோம்.

எங்களது நண்பர்கள் பலரும் பள்ளி கட்டணம் கட்ட முடியாத நிலை இருந்தபொழுதும் நற்பணிகளாக நன்கொடைகளை வசூலித்து பள்ளி பாடப்புத்தகங்கள் வழங்கி  கமல் பிறந்தநாள்களை சிறப்பிப்போம். விஷேச  தினங்களில் நடுதெருவில் இரவு முழுவதும் டிவி வைத்து வீடியோ கேசட் மூலம் தொடர்ந்து படங்களை திரையிடுவோம். அதுவும் ஒருமுறை சிகப்பு ரோஜாக்கள் படத்தினை தெருவில் வீடியோவில் ஒளிபரப்பிய போது அமைதியாக உட்கார்த்து பார்த்த பெண்கள் காலையில் குழாயடியில் இப்படி பண்ணுவாய்ங்களா? இந்தப்படத்தினை போடலாமா? எனப்பேசியது இன்னும் நினைவில் நிற்கின்றது.

நீண்ட நாளுக்கு பின் சந்தித்த பள்ளித்தோழன் நான் சொன்ன “கமலுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் அதனை வாங்க கமல் வேஷ்டி அணிந்த தமிழனாய் செல்வார்” என சவால் விட்டதினை ஞாபகப்படுத்தி தற்பொழுது எப்படி இன்னும் கமல் வெறியர் தானா எனக்கூறியதும் மறக்கமுடியாதது. மகாநதி படம் பார்க்க மதுரை சோலைமலை தியேட்டர் வந்து படம் பார்த்து அழுது சட்டையை நனைத்தது மறக்கமுடியாதது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தீயணைப்புவீராக வரும் கமல் உடுத்திய புளுச்சட்டை ஜீன்ஸ் பேண்ட் அதே போன்று வாங்கி உடுத்தி விருதுநகர் சென்று படத்தினை  தொடர்ந்து இரண்டு ஷோ பார்த்து வீடுதிருப்பி அம்மாவிடம் அடிவாங்கியதும் நினைவில் நிற்கின்றன. தற்பொழுது எந்தப்படங்களும் பார்க்காமல் இருந்து வரும் நிலையிலும் தொலைகாட்சிகளில் கமல் படம் என்றால் உடன் உட்கார்ந்து விடுவது இயல்பு. தேவர்மகன், ஹேராம், விஸ்வரூபம்  போன்ற படத்தால் கமல் மேல் உள்ள ஒரு பிணைப்பு சற்று தளர்ந்தாலும் இன்னும் அன்பேசிவம் போன்ற படங்கள் மூலம் புதுப்பித்து எங்கோ கமல் கமல் என எனது உள்ளம் அடித்துக்கொண்டுள்ளது தங்களுக்கும் கேட்கின்றதல்லவா.
நம்மவர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்……..
                                   உங்கள் வஹாப் ஷாஜஹான்.

                                                   திருமங்கலம்.

2 comments:

 1. அண்ணே! உங்க பதிவைப் படித்ததும் எனது இளமைக்காலத்திலிருந்து இன்றுவரையிலான நினைவுகள் வருகிறது. கமல்ஹாசனை நினைத்தாலே இனிக்கும். ரொம்ப மகிழ்ச்சியாகயிருக்கிறது உங்கள் பதிவைப் பார்த்ததும்.

  - அன்புடன்,
  சித்திரவீதிக்காரன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி சித்திரவீதிக்காரன் சுந்தர். கமல் பிறந்தநாள் என நினைத்த மாத்திரத்தில் எழுதியது.திட்டமிட்டு கமல் பற்றி எழுத நினைத்தால் பக்கங்கள் போதாது.

   Delete