Wednesday, 30 April 2014

உழைப்பாளி யார்?


சமீபத்தில் தொடர் விடுமுறை  கிடைக்க பக்கத்து கிராமத்து நண்பனின் விவசாய நிலம்  பார்க்க கிளம்பினேன். எங்க ஊரிலிருந்து கால்மணி நேர பயணத்தில் கிராமம் சென்றேன். நண்பனுடன் ஊர் மந்தைக்கு அருகில் இருந்த டீக்கடையில் டீ சாப்பிட்டப்படி கடையை நோட்டமிட்டேன். அடுப்பில் பணியாரம் போட்டப்படி ஒரு பெண்ணும் டீப்பற்றையில் இருந்தவரும் பேசியதிலிருந்து கடையை நடத்தும் இவர்கள் தம்பதியர் என தெரிந்து கொண்டேன். பனியனுடன் இருக்கும் டீ மாஸ்டரிடம் நம்ம வாயிதான் சும்மா இருக்காதே   பேச்சு கொடுத்தேன்.என்னனே கிராமத்திலே டீக்கடை வச்சு எப்படி கட்டுதுனே? அவரு தம்பி எங்கப்பாரு விவசாயம் பார்த்தாரு ,நான் விவசாயம் பாக்க புடிக்காம மதுரையலே ஒரு பாய் மூலமா துபாய் போனேன். அங்க ஸ்டேசினரி கடையிலே லோடுமேனா மூணு வருஷம் வேலை பார்த்தேன். லிவுக்கு வந்தேன்.திரும்பி போக மனசு வரல.கொஞ்சம் கையில இருந்த பணத்தகொண்டு, பஸ்ஸூ இங்க நிண்டு போறதாலேயும், எதிக்க இருக்க கவர்மெண்ட் ஸ்கூல் பசங்க,வாத்தியாருங்க அப்புறம் ஊருக்குள்ள இப்ப விவசாயம் அதிக இல்லாததால பசுமாடு யாருட்டேயும் இல்லேன்றனால ஏதோ டீக்கடையும் பெட்டிகடையுமா இந்த கடையை கட்டி புருஷனும் பொண்டாட்டியுமா காலத்த ஒட்டுரோமினார்.


நாங்க பேசிகிட்டு இருக்கிற நேரத்திலே ஒரு பேண்டு சர்ட் போட்டவரு கடைநோக்கி வர அந்த பணியார பெண்மணி டீக்கடை பென்ச சுத்தம்பண்ண அவரு வந்து உட்காந்து எங்க பேச்ச கேட்டப்படி இருந்தவரு ஆமங்க என்ன உழைச்சு என்ன இங்க மருவாதை.பாருங்க மதுரை போரவழியில இளநி கடை போட்டான் மேலக்கோட்டை ராமசாமி இப்போ அவேன் நிண்டு வேலை பார்த்த இடத்த முப்பது லட்சத்துக்கு வாங்கிபுட்டான்.பேச்சுக்கிடையே நண்பன் இவரு நம்ம ஊரு கவர்மெண்ட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் என அறிமுகப்படுத்த வணக்கம் சொல்லிவைத்தேன். என்னை பற்றி விசாரித்த ஹெட்மாஸ்டர் தொடர்ந்து இந்த கீழத்தெரு ராசேன் ரேசங்கடையிலே எடையாள வேலைபார்த்து இப்ப ஊருல இருப்பத்தி அஞ்சு லட்சத்துக்கு வீடுகட்டி புட்டானுள்ள.அப்புறம் பக்கத்துள்ள இருக்றே உங்க நண்பரு டாஸ்மாக்ல வேலைப்பார்த்துட்டு பத்துவருஷத்துல இரண்டு பைக் மாத்திடாரு.உன்னும் சொல்லனுனா நகராட்சி சாக்கடை தள்ளுற வேலைபாக்கிற சாம்பார் குமாரு வட்டிக்கு கொடுத்து வாங்குறானா பாத்துக்குங்க இங்க உழைக்கிற யாருக்குங்க மதிப்பு இருக்குனு ஒரு ஏக்க பெருமூச்சோடு முடித்தார்.

நான் உடனே என்ன சார் சொல்லவரிங்க நீங்க மேல சொன்ன எல்லாரும் இப்பயும் ஏதோ ஒரு வகையிலே கஷ்டப்பட்டு கிட்டு தானே சார் இருங்காங்க இளநி கடை அருவாய உங்களாள ஒரு நாள் புடிக்க முடியுமா? ரேசன் கடையில மண்ணெண்ண ஊத்த முடியுமா? டி.ஆரூ, எஸ்.ஓ னு அதிகாரி ஒருபுறம் ஏரியா கவுன்சிலர் இருந்து மாவட்டம் வட்டோமினு அரசியல்வாதிகள் பட்டாளத்துக்கிட்ட சமாளிக்க முடியுமா? டாஸ்மாக்கில ஒரு நாள் உங்களாள வேலைபார்க்க முடியுமா?எல்லாரும் உங்கமாதிரி பட்டதாரி தான?10 வருஷமா குறைச்ச சம்பளத்துடனும் வேலை நிரந்தரமில்லாமலும் உங்களாள வேலை பார்க்க முடியுமா? அப்புறம் நகராட்சி குமாரு மாதிரி சாக்கடை தள்ள முடியுமா சார் உங்களாள ? 


வாத்தியார் வேலையில கஷ்டமில்லேனு சொல்லவரல ஆன உங்களுக்கு வருஷத்தில சம்பளத்தோட இரண்டுமாச கோடை விடுமுறை விடுறாங்க இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்ல அவர் சினங்கொண்டு என்ன சார் கஷ்டபடுறாங்க எம்மூத்தபுள்ள நல்ல தான் படிச்சான் இப்ப மெடிக்கல்சீட் கொஞ்ச மார்க்கிலே தவறிச்சு தனியார் மெடிக்கல் காலேஜ்லுள ஐம்பதுலட்சம் கேட்டான் கொடுக்க முடியல.எங்க கவுன்சிலர் பையன் மார்க் குறைய வாங்கி இப்ப மெடிக்கல் படிக்கிறான். எங்கிட்ட படிச்ச ஐடி பசங்க லட்சகணக்கில சம்பளவாங்கிறாங்க என்னால ஏபையன மெடிக்கல் படிக்கவைக்க முடியலனு அவரு ஆதங்கத்தையே திரும்ப திரும்ப சொன்னார்.

இந்த பேச்சுகிடையே டீ யை குடித்து முடித்திருந்த  ஹெட்மாஸ்டர் பள்ளியிலிருந்து ஏதோ அழைப்பு வர அப்புறம் பேசுவோம் தம்பினு சொல்லி கிளம்பினார்.இரவு வீட்டிற்கு வந்தும் உறக்கம் பிடிக்கவில்லை. இந்தியாவில் இப்படி உழைப்பவர்கள் தங்களுக்குள் பொறாமையில் வெந்து சண்டையிட்டு கொண்டும் விவாதித்து கொண்டும் இருக்கின்றனரே அப்ப இந்தியாவில்  யார் உண்மையான உழைப்பாளி விவசாயிகளா? கூலி தொழிலாளிகளா?அரசு ஊழியர்களா? யார் உழைப்பாளி?


தேனீக்கள் கூட்டில் பலஏற்றதாழ்வுகள் இருந்தாலும் தங்களுக்கிட்ட பணிகளை சரியாக முடிக்கின்றன.ஆனால் அங்கே ஏமாற்று வேலைகள் செய்ய அரசியல்வாதிகள் இல்லை.இங்கேயோ உழைப்பாளிகளை சக்கையாக பிழிந்து வேலைவாங்கிவிட்டு தொழிலாளர் சட்டங்கள் எதனையும் மதிக்காமல் இருப்பதுடன் தொழிலாளர்களுக்குள் யார் உண்மை உழைப்பாளி என விவாதிக்க விட்டுவிட்டு ஊழல் கொள்ளைகளால் கரன்சிகளை உள்நாடு வெளிநாடு என சேர்க்கும் அரசியல்வாதிகள் தான் இந்தியாவின் சிறந்த உழைப்பாளியாகவும் பிழைக்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். 

எப்படியெனில் நம்மை நம்பவைத்து ஓட்டளிக்க செய்து ஆட்சிக்கு வந்து உழைப்பின் பலனினை அதிகம் செல்வங்களை சேர்த்து அனுபவிக்கும் அரசியல்வாதிகள் உண்மை பிழைப்பாளிகள் நம்மை பிடித்த பிணியாளிகள் .  அப்ப நாம்? இன்னும் எத்தனை காலம் இவர்களையே பிழைப்பாளிகளாக வைத்து இருப்பது விழித்துகொள்வோம்.நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் வறுமையில் வாட ஒரு சிலர்கள் மட்டும் கோடிகளில் உலாவுவது இன்னும் எத்தனை காலம்? உழைப்பின் பலனை நாம் என்று அனுபவிப்பது? கேள்விகள் கேள்விகளாகவே இன்னும் எத்தனை காலம் இருக்கும்?

No comments:

Post a Comment