Wednesday 23 March 2016

காட்டுச் சிறுக்கி ச்ச… பருத்தி...

கோங்கமலர் என்ற காட்டுப்பருத்தி


தங்கம் மஞ்சள் நிறத்தில்  இருப்பதால்தானோ என்னவோ பெண்களையும் தங்கத்தையும் பிரிக்க முடிவதில்லை. மயக்கும் மஞ்சள்வண்ணம். பெண்கள் மிகவும் விரும்பும் வண்ணம், மாம்பழம், மாஞ்சிட்டு, சூரியகாந்திப்பூ என மஞ்சள் மழையில் நனையலாம். வண்ணங்களில் ஆன்மீகத்தினையும், மருத்துவக்குணங்களையும் ஒரு சேர பெற்றுள்ளது மஞ்சள். மலர்களில் ஆவாரம்பூ, சூரியகாந்திப்பூ, கோங்க மலர், சாமந்திப்பூ முக்கிய இடம் வகிக்கின்றன.


தங்கமலர்
கருப்பு தங்கம் நிலக்கரியாக இருந்தாலும் தங்கத்திலும் தங்கமாக மஞ்சள் மலர்கள் விளங்கி வருகின்றன. தமிழகத்தில் தங்கத்திற்கு நிகராக ஒரு மலரின் மகரந்தம் விற்பனை செய்யப்பட்ட வரலாறு அறிவீர்களா?  ஆம் கோங்க மலர்களின் மகரந்தம் சங்க கால பெண்கள் தங்களது மேனி அழகினை பொழிவுடன் வைக்கவும், நறுமணப் பொருளாக பயன்படுத்தவும் பொன்விலை கொடுத்து பெற்றனர்.. இதை நாங்கள் சொல்லவில்லை அன்பர்களே அகநானூறு சொல்கின்றது.

சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு” என்கின்றது அகநானூறு.

இன்று ரசாயனம் அற்ற இயற்கை விவசாய பொருட்கள் விலை அதிகம் என்று ஒதுங்குபவர்களுக்கு மத்தியில் தங்க விலை கொடுத்து இயற்கை கோங்கமலர் பயன்படுத்தியவர்கள் நம் ஆதி தமிழர்கள்.  கோங்கமலரை காட்டுப் பருத்தி மலர் என்றும் அழைப்பர். குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறும் சங்க கால மலர்கள் வரிசையில் கோங்க மலரும் இடம் பெறுகின்றது. இதன் மூலம் சங்க மகளிர்கள்  பயன்படுத்திய 99 மலர்களில் கோங்கம் மலர் முக்கியமானதாகவும் விலை உயர்ந்த மலராகவும் உள்ளது. பல சங்கப்பாடல்களில் கோங்கமலர் இடம்பெறுகின்றது. மேலே சொன்னது போல பூக்களில் மஞ்சள் வண்ணம் உள்ள மலர்கள் அனைத்தும் மருத்துவ மற்றும் அலங்கார வேலைக்கு ஏற்றது.















காட்டுப்பருத்தி மரம் பார்ப்பவர்கள் அனைவரையும் மிகவும் கவரும் தன்மையுடையது. சில காலங்கள் இலைகளுடன் மலர் சேர்ந்து மரம் அழகாக அமைந்து இருக்கும். அடுத்த சில மாதங்கள் மலர்கள் மட்டும் கிளைகளில் ஒட்டிக் கொண்டு இருப்பது இன்னும் அழகு. அடுத்த சில காலங்கள் மரமே பட்டுப்போனது போல் கிளைகள் மட்டும் காணப்படும். நீங்கள் கோங்கமலர் மரத்தினை கடந்தால் இம்மரத்திற்கென்று இருக்கும் ஈர்ப்புத் தன்மையால் சில மணித்துளிகள் இம்மரத்தினை ரசிப்பதற்கென்றே கண்டிப்பாக செலவிடுவீர்கள்.

கோங்கமலர் பலவிதங்களில் சங்கப்பாடல்களில் ரசிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் “புல் இதழ் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றி”  என்று நற்றிணை பாடப்பெற்றுள்ளது. அதாவது கோங்கமலர் குடை, மீன் போன்று அமைத்தாக கூறுகின்றது. பெண்களின் முன்அழகுடன் கோங்கமலர் மொட்டுகளை ஒப்பிட்டு குறுந்தொகையில் வர்ணிக்கின்றனர். “முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர்வந்தன”. இப்பொழுது தெரிந்ததா இம்மரத்தின் ஈர்ப்புத் தன்மையின் ரகசியத்தினை. மேலும்  மலரின் மையப்பகுதி எலியின் காதிற்க்கு ஒப்பானதாக இருப்பதாக தமிழ் இலக்கியத்தில் வரலாற்று ஆவணமாக போற்றப்படுகின்ற புறம்  தெரிவிக்கின்றது.  “வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி” வைகை ஆற்றுப்படுகையில் இம்மரமலர்கள் கொட்டி கிடப்பதாக மதுரைக்காஞ்சியிலும் இம்மரம் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. 


ஆனால் இம்மரம் தற்பொழுது காண கிடைப்பது அரிதாகி விட்டது அன்பர்களே. தமிழர்களின் சங்கமலர்களை சாகடித்து விட்ட சாதனைகளை நாம் இன்னும் தொடர வேண்டுமா? மீட்டெடுப்போம் கோங்க மலர்களை. வீடுகள் மாடிகள் தோறும் தோட்டங்கள் அமைப்போம்.  இயற்கை வழி விவசாயத்தினை போற்றுவோம்.
                    வஹாப் ஷாஜஹான், திருமங்கலம். 99425 22470

No comments:

Post a Comment