Wednesday 24 February 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்


வாசிப்பு என்னிடமிருந்து தூரம் சென்ற காலம் போய் தற்பொழுது வாசிப்பு வசப்படும் காலமாக மாறியிருக்கின்றது. இதை தக்க வைக்கும் முயற்சியாக தேர்ந்தெடுத்த நூல்களை வாசித்து வருகிறேன். அர்ஷியா சார் அவர்களின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பில் நேற்று முன் இரவு பொழுது வசப்பட்டது. சிறு குறிப்பு வைத்து கொண்டே வாசிப்பேன். நூல் முழுவதும் படித்து முடித்த பின் சிறுகுறிப்புகள் பலபக்கங்களை உள்வாங்கியிருந்தது. சிறு குறிப்புகளை பதிவாக போடலாம் என எண்ணி இந்த சிறு முயற்சி.  முதல் கதை மெளனசுழியில் மாற்றுமதத்தவரை திருமணம் செய்த மகளுடனான  ரசாபாசத்தினை உளுவ மீனின் ருசிக்கு இடையே விருந்து படைக்கிறார்.  மகள் பெயரில் எழுதும் எழுத்தாளர் என்பதால் முதல் கதையும் மகள் நேசம் குறித்து உருகவைக்கின்றார். 


அடுத்து வரும் தகைத்தல் மூலம் உஸ்தாபி அம்மாவுடன் நம்மையும் மதுரையை சுற்றி காட்டுவதோடு வரதட்சனை சமூகத்தினை பிடித்து ஆட்டும் நிலையை படைத்து நம்முடன் தகைத்து கொள்கிறார். கட்டில் பலகையில் கட்டில் கதவாவது போல் நாமும் கதையுடனே கலந்து போகின்றோம். தாதா கதவு தட்டலில் பாவா வெளியேறும் நிகழ்வு ஊருக்கு ஊர் பேசப்படுபவைகளை சுவாரஸ்ய கதைகளமாக மாற்றி நம்மை உடன் இழுத்து செல்கிறார். உப்புகுழியில் கபரஸ்தான் குழி வெட்டுபவனின் குதர்க்க வாழ்க்கையுடனே ஷாப்ஜான் பாய் இனிய முடிவினை கொடுத்து நம்மை கடத்துகிறார். அடுத்த  தள்ளுபடியான ஆவணங்கள் மாத இதழ் மகாகவியில் படித்து இருந்தாலும் தள்ளுபடி செய்ய மனம் வரவில்லை. மீண்டும் மறுவாசிப்பு. மோதின் வீட்டு தூக்குவாழியாய் ஆடிக்கொண்டே அசனோடு ஊர் சுற்ற வைத்து உசேனோடு ஆனந்தா ஸ்டோர் டிபன் கேரியராய் துவைக்கல்லில் நம்மை உட்கார வைக்கின்றார் அர்ஷியா. வனம்புகுதல் மூலம் மூன்றாம் பாலினத்தவர் மனநிலைகளை நம் எண்ணம் எண்ணமுடியாத வகையில் வர்ணிக்கின்றார். அர்ஷியா எவ்வளவு ரொமான்ஸ் பிரியர் என்பதற்கு இந்த வனம்புகுதல் ஒரு சோறு பதமாகும். அபிராமி அக்காவை பற்றிய  வர்ணிப்பு நம்மை வேறு களத்திற்கு அழைத்து செல்லும்.

 வேட்கைக் கதையில்  குழந்தை பாலியல் தொந்தரவின் மூலம் குடும்ப உறவில் ஏற்படும் பிரச்சனையினை படம் பிடித்து தம்பதிகள் நலமுடன் வாழ பிராத்திக்க வைக்கின்றார். வெயிலின் நிழல் கம்பியில் நடப்பவர்களின் கடைநிலையினை கம்பி வலைத்து திருடும் சேதுவின் பார்வையில் கொண்டு வந்து உதவும் மனநிலையில் உயரே நிற்கின்றான் சேது. கடைசி கதையான மய்யம் மனைவி நூர்ஜஹான் மட்டம் தட்டப்பட்டு அவளின் குரல் கணவனின் இறுதிசடங்கிலும் வெளிவராத நிலையினை அழகுற சொல்லியுள்ளார்.  நாட்டுநடப்புகளையும்  பல மனிதர்களுக்கிடையேயும்  வளம் வந்த வண்ணம் அனைத்து நிகழ்வுகளையும் மனதில் பதியமிட்டு இனிய கதை தொகுப்பாக வழங்கியுள்ளார் அர்ஷியா. நம்மை வாசிப்புடன் விலகி நிற்காமல் கதைக்குள் அழைத்து சென்று அட்டை டூ அட்டை முடித்தே ஆசுவாசம் கொள்ள செய்கின்றார். அர்ஷியா அவர்களுக்கு விருது பெற்று தந்த மரணத்தில் மிதக்கும் சொற்கள் வாசிப்பாளர்களுக்கு மிக ருசியான விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. 
நூல் பெயர்: மரணத்தில் மிதக்கும் சொற்கள்
ஆசிரியர் : எஸ். அர்ஷியா
புலம் வெளியீடு,


                               வஹாப் ஷாஜஹான், திருமங்கலம், 

2 comments:

  1. வாசிக்கத்தூண்டும் மிக நல்ல பதிவு....நன்று...
    முடியுமெனில் என் பதிவுகள் கொஞ்சம் பாருங்கள்...
    http://naanselva.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றி நண்பர் மீரா செல்வக்குமார். உங்கள் பதிவும் அருமை. தொடர்ந்து வாசிக்கின்றேன்.

    ReplyDelete