Friday 2 December 2016

புள்ளோடு புது பொங்கல்



பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம். தற்பொழுது பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் (மது) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இங்கே நாம் கூறும் புள்பறவையாகும். பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை காப்பாற்றிய  சிபி சோழனையும், மயிலுக்கு போர்வை தந்து உதவிய பேகனையும்,  பறவைகள் , பயம் கொள்ளக்கூடாது என்பதற்காக தேரின் மணிகளை  கழட்டி விட்டு பயணித்த தலைவர்களையும் பெற்றது நம் தமிழகம். இவ்வகையான பாரம்பரியத்தில் வந்த நம் தமிழ் பறவை ஆர்வலர்கள்  திண்டுக்கல், கோவை என்ற வரிசையில் கடந்த மாதம்  திருநெல்வேலியில் பி.எஸ்.என் கல்லூரியில் தங்களது மூன்றாவது ஆண்டு சந்திப்பை  நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஊருக்கே உரிய வகையில் பல  இனிப்பான செய்திகள் கிடைத்தன.


தமிழகத்தில்  பறவைகள் வாழும் சூழல் மேம்படுத்துதல், பறவைகளின் வகைகள் மற்றும் பிரித்தறிதல், பறவைகள் பற்றிய  பாடல்கள், பறவைகளை எளிதாக வரைய கற்று கொள்ளுதல், பறவைகளை கணக்கிடுதல் போன்றவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் பறவைகள்  மற்றும் சூழலியல் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு தலைப்பில் விளக்கப்படங்களுடன் உரையாற்றினர். பறவையாளர் சலீம் அலியுடன் பணியாற்றிய ராபர்ட் கிராப் கன்னியாகுமரி மாவட்ட பறவைகள் குறித்து உரையாற்றினார்.


கேரள பறவையாளர் சசிக்குமார் அம்மாநில பறவையாளர்கள் பெரும் உழைப்பில் மேற்கொண்டுள்ள பறவைகள் குறித்த நிலப் பதிவேடு (அட்லஸ்) குறித்து உரையாற்றினார். பார்வையிடும் பறவைகளை இணையத்தில் எவ்வாறு  பதிவு செய்வது என்பது குறித்து (E- BIRD) ஜெகநாதன் உரையாற்றினார்கூட்டமாக வலசை வரும் பறவைகளை எப்படி கணக்கிடுவது என்பது பற்றி சாந்தாராம் விளக்கினார். கடல்பறவைகள் குறித்து கணேஷ்வர் உரையாற்றினார்.

இயற்கை ஆர்வல செயல்பாட்டில் மதுரைக்காரர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என வரிசை கட்டி வந்து பலர் நிரூபித்தனர். மதுரை இயற்கை சந்திப்பை சேர்ந்த மருத்துவர் பத்ரி நாராயணன் அழகர்கோவில் பறவைகள்என்ற தலைப்பில் கடந்த பல வருடமாக அழகர்கோவில் மலையில் பார்வையிடப்படும் பறவைகள் குறித்து உரையாற்றினார். மேலும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அழகர்மலையில் உருவாகி வைகையில் சங்கமித்த சிலம்பாறு தொலைந்தது போல் மலையின் சூழல் காக்கப்படாமல் இருந்தால் தற்பொழுது பார்வையிடப்பட்டு வரும் பறவைகளையும் தொலைக்க நேரிடும் என  எச்சரித்தார். இறகுகள் ரவீந்தரன் கிராமபுற, அரசு பள்ளி மாணவர்களை சந்தித்து தான் ஆற்றிடும் பறவைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் அதன் மூலம் காணும் சிறந்த விளைவுகள் குறித்தும் உரையாற்றினார்.

அரிட்டாப்பட்டி ரவிச்சந்திரன் உரையாற்றுகையில் அரிட்டாப்பட்டி மலை பல அரிய வகை உயிரினங்களின் பெரும் கூடமாக உள்ளது. தமிழகத்தில் எங்கும் காண கிடைக்காத லகார் வகை பருந்தினம் இங்கே உள்ளது. இருந்தும் கடந்த  2008–ம் ஆண்டு மலையில்  கிரானைட் கற்களை வெட்டி எடுக்க தமிழ்நாடு கனிம வளத்துறைக்கு 30 ஆண்டுகளுக்கு அனுமதி கிடைத்து மலையை சுரண்ட துவங்கினர்.  அரிட்டாப்பட்டி மக்களின் நீண்ட போராட்டத்தால் நீதிமன்றம் மூலம் இடைக் காலதடை பெறப்பட்டுள்ளது. இருந்தும்  அரிட்டாப்பட்டி மலைக்கான அபாயம் நீங்கப்படவில்லை என்று உருக்கமாக உரையாற்றினார்.

அடுத்ததாக இயற்கை ஆர்வலரான தியோடர் பாஸ்கரன் அவர்கள் தமிழகத்து பறவைகள்என்ற தலைப்பில் உரையாற்றினார்தமிழகத்தில் சூழல் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காட்டுப்புறா, கல் கவுதாரிசெம்பருந்து போன்ற பல பறவைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு அரிய வகை பறவைகளாக மாறி வருகின்றன. சமீபத்திய ஒரு அறிக்கை கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் 55% உயிரினங்கள் முழுவதும் அற்று போய் உள்ளதாக கூறுகிறது என்றும் அணு வெடிப்பை விட மனிதர்களால் முன்னேற்றம் என்ற பெயரில் சூழலுக்கு எதிரான  நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலைமாற்றம் பெரும் ஆபத்து என்றார்.



பறவைகளை ஆங்கிலப் பெயர்களில் அழைப்பதை தவிர்த்து பறவையின் சிறப்பையும் அதன் நடவடிக்கைகளையும் கவனித்து ஆதித் தமிழர்கள் பெயரிட்டு அழைத்த தமிழ் பெயர்களை மீட்டுருவாக்கம் செய்து பயன்படுத்த வலியுறுத்தினார்.  தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டில் செயற்கைகோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இயற்கை பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் கொடுக்கப்படாதது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்றார்.  தற்போதைய  தமிழக எழுத்தாளர்களில் பசுமை இலக்கியம் குறித்து எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் என தனது கவலையை தெரிவித்தார். அப்படி வெளியிடப்படும் ஒரு சில பசுமைஇலக்கிய எழுத்துகளை வாங்கி பயன்பெறுவதோடு விழாக்களின் போது நண்பர்களுக்கு பரிசு வழங்கியும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த வேண்டினார்.










இருநாள் நிகழ்விற்கிடையே அதிகாலை பொழுது பறவை பார்வையிடல் கல்லூரி வளாகத்தை சுற்றி நடைபெற்றது. மேலும் இராஜபாளையம் வண்ணத்துப்பூச்சி அமைப்பினர் மற்றும்  இளைஞர்கள் பெருமளவு பங்கேற்றது சிறப்பம்சமாகும். மேலும் வால்பாறை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் மேற்கொள்ளும் பறவை பார்வையிடல் மற்றும் கணக்கெடுப்பு குறித்து உரையாற்றினர்.  தொடர்ந்த பறவைஆர்வலர்கள் கூட்டத்தில் வரும் பொங்கலன்று தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பறவை கணக்கெடுப்பு செய்வதென்று முடிவெடுத்திருப்பதாக மகிழ்வுடன் தெரிவித்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் நாமும் நம் பங்கிற்கு இணைந்து புள்களோடு புது பொங்கலை கொண்டாட சபதம் ஏற்போமா நண்பர்களே!
                                                                        வஹாப் ஷாஜஹான்,(99425 22470) 
                                                                                             திருமங்கலம்.

3 comments:

  1. அருமையான கட்டுரை. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழியல் ஆர்வலர்கள் மட்டுமே கலந்து கொண்டது சிறப்பம்சம். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பானமுறையில் அமைக்கப்பட்டு இருந்தன. அடுத்தவருடம் நடைபெறும் விழாவுக்கு உங்களை போன்றே காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  2. நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete