Saturday 30 May 2015

மா மதுரை


மதுரை இந்த வார்த்தையை கேட்டவுடன் உணர்ச்சி பெருமிதத்துடன் புலகாங்கிதம் அடைவேன். மதுரைக்காரன் என்ற பெருமை என் மனதில் எப்பொழுதும் ஒரு மமதையே ஏற்படுத்தும். மதுரையை பற்றி தவறாகவும், சாதிய மேட்டிமை கொண்டது என்றாலும் கண்டிப்பேன். தமிழகம் முழுவதற்குமான நிலையே மதுரையிலும் தொடர்கின்றது. எம்.ஏ வரலாற்று மாணவனாக மதுரையின் தளவரலாறு படிக்கையில் மகிழ்வுற்றேன். பசுமைநடையின் வாயிலாக மதுரையின் மூளை மூடுக்கெல்லாம் உள்ள தொல்லியல் தலங்களை கண்டு ரசித்துள்ளேன். பசுமைநடை, மதுரையை மேலும் காதலிக்க செய்தது. மதுரையின் பெருமை பற்றி கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் மதுரையின் தரவுகள் முடிவுறாத விசயமாகும். அமுதசுரபியாக இன்னும் பல புதிய விசயங்கள் நாளும் அறிந்து வருகிறேன்.

அந்த வரிசையில் பாண்டிய வரலாற்று ஆய்வு மையம் சார்பாக “மாமதுரை “ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுவது அறிந்தேன். அய்யா சாந்தலிங்கம் மற்றும் இராசேந்திரன் இணைந்து மதுரையை குறித்து புத்தகம் படைத்து இருப்பது அறிந்து மகிழ்ந்தேன். 






அய்யா சாந்தலிங்கமும் இராசேந்திரன் அவர்களும் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இருவரும் பன்னூல் படைத்த படைப்பாளிகள். இவர்களின் “வரலாற்று நோக்கில் விருதுநகர்” புத்தகம் விருதுநகரினை விளக்கமாக கண்முன் விரித்து காட்டியது. அந்த வரிசையில் மதுரை குறித்து புத்தகம் படைத்து இருப்பது மேலும் ஆவலைத்தூண்டியது.



புத்தக வெளியீட்டு விழா
மதுரை சங்கம் ஓட்டலில் 30.05.2015 மாலை 6 மணியளவில் புத்தகவெளியீட்டு விழா துவங்கியது. முதலில் புத்தக ஆசிரியரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய தலைவருமான அய்யா பொ. இராசேந்திரன் தலைமை உரையாற்றினார். 


அதை தொடர்ந்து புத்தக ஆசிரியரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலருமான அய்யா சொ.சாந்தலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். உடன் புத்தகத்தினை  நீதியரசர் து.அரிபரந்தாமன் அவர்கள் வெளியிட முதல்பிரதியை திரு.வரதராசன் மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி தலைவர் பெற்றார்.

நூலை வெளியிட்டு உரையாற்றிய நீதியரசர் து.அரிபரந்தாமன் உரையானது உண்மையில் தனிப்பதிவாக வெளியிடும் அளவிற்கு மேன்மையானது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளாதவர்கள் இவ்வுரையின் பாக்கியம் கிடைக்க பெறாதவர்கள் என்றே கூறவேண்டும்.  இவ்வளவு காலம் நீதியரசர் து.அரிபரந்தாமன் அவர்களின் உரையை கேட்க தவறி விட்டுள்ளோமே என எண்ணத்தோன்றியது. நூலின் அட்டை டூ அட்டை படித்து குறிப்பெடுத்து வந்து உரையாற்றினார். நூலில் என்ன விசயங்கள் இன்னும் சேர்க்க வேண்டும் என்று விளக்கமாக கூறினார். மதுரையில் நடைபெற்ற சமணர் கழுவேற்றம் குறித்து மதுரையில் நடைபெற்ற தவறுகளையும் பதிவிட வலியுறுத்தினார். விஜய நகர பேரரசர்களின் ஆட்சி பெருமைகளை குறைத்திருக்கலாம் என்றும் கான்சாகிப் மருதநாயகம் பிள்ளையே முதல் சுதந்திர போராட்ட வீரன் என்பதனையும் அவை குறித்த தரவுகளை அதிகப்படுத்தியிருக்கலாம் என்றும் உரையாற்றினார். சமீபகாலமாக நீதித்துறை மீது எனக்கிருந்த அதிருப்தியினை இவர் உரை மீட்டது. இவர் போன்ற நீதிமான்கள் நீண்ட ஆயுளுடன் நிறைய படைப்புகளை மக்களுக்கு கொண்டுவர இயற்கையை பிராத்திக்கின்றேன்.

அடுத்ததாக நூல் குறித்து உரையாற்ற வந்த திரு.வரதராசன் நீதியரசர் உரைக்கு பின்பு என்ன பேச என்றும் உச்சநீதிமன்ற உரையே இது என்றும் கூறிச்சென்றார். அடுத்ததாக திரு மு.அருணகிரி அவர்கள் நூல் அறிமுகவுரை நிகழ்த்தினார். நூலின் அவசியத்தினையும் நூலின் தனித்தன்மைகளையும் விளக்கினார். 

அடுத்து நன்றியுரை முனைவர் சு,இராசகோபால் அவர்கள் பேச இனிதே விழா நிறைவுற்றது. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் தொடர்ந்து தொல்லியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும், அரிய நூல்களை வெளியிட்டு சிறந்த சேவையாற்றி வருகின்றது. இவ்வமைப்பினை எந்தவித விளம்பர நோக்கமின்றி சிறந்த முறையில் செயல்பட செய்யும்  முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு போற்றத்தக்கவர். அரசியல்வாதிகளை பிடிக்காத என் போன்றோருக்கு விதிவிலக்காய் கோடியில் ஒருவராய் தெரியும் தங்கம் தென்னரசு மற்றும் பாண்டியவரலாற்று ஆய்வு மையம் தொடர்ந்து தன்பணியினை தொய்வில்லாமல் செய்திட  இப்புத்தகத்தினை வாங்கி படிப்பதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வது நமது கடமை என்று நினைவூட்டுபவனாக.
                                       உங்கள் வஹாப் ஷாஜஹான்,

                                                          திருமங்கலம்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி விமலன் சார்

    ReplyDelete