Tuesday, 19 May 2015

கண்ணகி கோவில் காக்கப்படுமா 4 ?


தமிழக கேரள மாநில கண்ணகி அறக்கட்டளையினரின் கூட்டுகூட்ட முடிவின் படி தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் மூன்று பானை பொங்கல் மட்டும் வைத்தனர். ஆனால் கேரள தரப்போ மூன்று பானை பொங்கலை கண்ணகி கோவிலுக்கு அருகிலும் தனியாக மிகப்பெரிய சட்டியில் தனி பொங்கல் ஒன்றையும் வைத்தனர். தமிழக தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க கேரள காவல்துறையும், வனத்துறையும் ஏதுமே நடக்காது போல் தமிழகத்தரப்பினரை அந்த இடத்திலிருந்து நகர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். உடன் தமிழக கண்ணகி அறக்கட்டளையினர் செய்தியாளர்களிடம் புகார் தெரிவிக்க அனைவரும் சென்று புகைப்படம் எடுத்தனர். கேரள தரப்போ புகரர் கொடுங்கள், புகைப்படம் எடுங்கள். எங்களுக்கு கேரள காவல், வனத்துறையினர் சப்போர்ட் உள்ளது என ஏளனமாக பார்த்தனர்.

பொங்கல் வைத்து கொண்டு இருக்கும் கேரளா கண்ணகி அறக்கட்டளையினரிடம்  பேச்சு கொடுத்தோம். அவர்களிடம் கண்ணகி கோவிலுக்கான கோரிக்கை தங்கள் அமைப்பின் முயற்சி என்ன? என்பது குறித்து கேட்ட பொழுது அவர்கள் தமிழக தரப்பின் கோரிக்கைகளையே அப்படியே முன்மொழிந்தனர்.


தமிழக தரப்பு கோரிக்கைகளான சாலைவசதி, மாதமொரு முறை வழிபாடு, தற்போதைய ஒரு நாள் அய்யோ மன்னியுங்கள் அரைநாள் விழாவை மூன்று நாள் விழாவாக மாற்றும் கோரிக்கை, சிதிலமடைந்த கோவிலை புதுப்பிப்பது இதுவே கேரள தரப்பினரும் கோரினர். வனப்பகுதி என்பதால் இந்த முயற்சிக்கு கேரள வனத்துறையினர் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறினர். 

       
              https://www.youtube.com/watch?v=ktmVSCb0TnA
         மேலே உள்ள லீங்க் மூலம் கேரளா கண்ணகி டிரெஸ்ட் பேட்டி பார்க்கலாம்

அப்படியெனில் சபரிமலையும் வனப்பகுதி தானே? என கேள்வி எழுப்பியபொழுது ஆம் அங்கு கூட ஆண்கள் மட்டும் தான் செல்ல முடியும். இங்கு பெண்களும் வரலாம். எனவே இக்கோயிலை, உடன் செப்பனிட்டு பிரார்த்தனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றனர். ஏன் இந்த பாகுபாடு என்ற பொழுது தமிழக தரப்பினர் சபரிமலை கேரளப்பகுதியில் உள்ளது. கண்ணகி கோவிலோ தமிழக எல்லைக்குள்ளும்  தமிழர் கடவுளாகவும் உள்ளது என்றனர். 

தமிழக அமைச்சர் தங்கதமிழ்செல்வன் கண்ணகியை வழிபட வருகைபுரிந்தார். மக்களின் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் பூஜையில் பங்கெடுத்தார். பக்தர் ஒருவர் அம்மா கண்ணகியின் சிலையை மெரினா  கடற்கரையிலிருந்து அகற்றினாலும் தற்பொழுது கண்ணகியிடம் நாடி வேண்டி இருப்பதால் நிச்சயம் வழக்கிலிருந்து விடுபடுவார் என்றார்.
மீண்டும் நமக்கு பிடித்த பிரசாதத்திற்கு வருவோம். இருதரப்பினரும் வைத்த பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக கேரளாதரப்பு எக்ஸ்டராவாக வைத்த பொங்கல் கேரள அரசுத்துறை அலுவலக பணியாளர் களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. செய்தியாளர் என்பதால் பிரத்யோக பொங்கலை என்னால் பெற முடிந்தது. நெய் வாசனையும் முந்திரியுமாக எச்சில் ஊற அடுத்த ஆண்டும் திரும்ப வரவேண்டும் என்று நாக்கு கூறியது.

                                 கேரளா கண்ணகி டிரஸ்ட் வழிபாடு
வந்திருந்த பக்தர்களுக்கு மங்கலநாண், மஞ்சள், வளையல் வழங்கினர். பின்பு மதிய உணவாக தக்காளி பிரியாணி  வழங்கினர். அதுவும் சுவையில் அருமை. இருந்த பொழுதும் சாமி கும்பிட்டு வெளியேறும் இடத்தில் வரிசையாக கொடுத்தால் இன்னும் நலமாக இருக்கும். ஏனெனில் டிராக்டரில் வைத்து வழங்கும் பொழுது பக்தர்களுக்கிடையே வாங்குவதற்கு தள்ளுமுள்ளு ஏற்படுகின்றது. சாப்பிட்டு விட்டு பேப்பர் தட்டுகளை குப்பை தொட்டி அமைத்து கொட்ட சொல்லலாம். புலிகள் காப்பகம் என்பதால் நாளை புலி பார்த்து மனிதனின் ஒழுங்கின்மையை கேலி செய்து விட்டு செல்லுமே என நினைக்க தோன்றியது.

நாணய கண்டெடுப்பு
சென்ற கண்ணகி கோவில் விழாவின் முடிவில் கோவில் பூசாரி மகன் ஹரிகரபிரபு கோவில் அருகில் உள்ள கீர்த்தக்கிணற்று பகுதியில் ஒரு பழங்கால நாணயத்தினை கண்டெடுத்துள்ளார். இந்நாணயம் செம்பாலானது. 

முதலாம் ராஜராஜன் காலத்து நாணயமென தொல்லியல் துறை ஆய்வில் தெரிய வந்ததாக கோவிலுக்கு வந்திருந்த தமிழக அரசின் வேளாண்மைத்துறை இயக்குநர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இது பத்தாம் நூற்றாண்டினை சேர்ந்தது வாணிப கூட்டத்தினர் கண்ணகி கோவிலை கண்டு செல்லும் பொழுது விட்டு சென்றிருக்கலாம் என்றார்.  கண்ணகி கோவிலின் அழகிய சிற்பங்கள், கல்வெட்டுகள், தற்பொழுது நாணயமும் கிடைத்திருக்க தொல்லியல் ஆய்வாளர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

                                பக்தர் ஒருவரின் சிலம்பு காணிக்கை

அருகில் எங்களது கோரிக்கைகளை  அரசு ஏற்றால் தான் இருமாநிலத்திற்கும் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து இரு மாநிலமும் வளம் பெறும் என்று கண்ணகி அறக்கட்டளையினர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆப்கானில் பழமையான  சிலைகள் இடிக்கப்பட்டதும் நாம் சீரமைக்காமல் இருக்கும் கண்ணகி கோவிலின் நிலையை போன்றதே.  நான் திரும்பி செல்லும் முன் மீண்டும் கண்ணகி கோவிலை பார்த்து, கட்டிய பொழுது கோவில் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்றும் நினைத்தேன். என் மனக்கண் முன்பு சேரன் செங்குட்டுவன் கட்டிய அந்த கலைமிகு கண்ணகி கோவில் வந்து நின்றது. தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே மீண்டும் கண்ணகி கோவில் புதுப்பிக்க வாய்ப்புள்ளது. கண்ணகி கோவில் காக்கப்படுமா ?
எனது கண்ணகி கோவில் பயணத்தை கட்டுரையாக எழுத ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!

                                வஹாப் ஷாஜஹான்,
                                       திருமங்கலம்.

No comments:

Post a Comment