Monday 29 February 2016

பலாச மலர்கள்

பலாப்பழம் தெரியும். பழரசம் தெரியும். காக்காமுட்டை பழரசமும் தெரியும். பாசமலர் படம் கூட தெரியும். அதென்ன பலாச மலர்? இந்த பெயரில் மலர்கள் இருப்பது குறித்து  பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதி மனிதன் நோய்களுக்கு மலர்களையும், இலைகளையும், வேர்களையும் கொண்டு மருத்துவம் செய்து குணமடைந்து வந்தான். இன்று நாம்  அவர்கள் காப்பாற்றிய மரங்களையும் மருத்துவமுறைகளையும் துலைத்து விட்டோம். மூலிகை மருத்துவத்தில் நாம் தொடர்ச்சியாக ஈடுபடாத காரணங்களால்  வேதிப் பொருட்கள் உட்கொண்டு உடலை விஷமாக மாற்றி வருகின்றோம். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் பெயர்களை நடிகர் சிவக்குமார் வரிசையாக மூச்சுவிடாமல் கூறினால் ரசிப்போம். ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களில் எத்தனையை உயிர்ப்புடன் வைத்துள்ளோம். இன்னும் எத்தனை மலர்கள் நமக்கு அடையாளப்படாமல் இருக்கின்றது. இவை குறித்து கவலை கொள்ள இங்கு எத்தனை பேர்கள் உள்ளோம். இன்றைய அவசர உலகில்  இயற்கை அழகு கொஞ்சும் மலர்களை ரசிப்பதற்கு தான் நமக்கு நேரமிருக்கின்றதா?.


இன்று பெரும்பாலும் நர்சரி கார்டன் என்ற பெயரில் இயங்கும் மலர் அங்காடிகளில் பெரும் பணம் படைத்தவர்கள் மட்டும் செடிகளை வாங்கி வீட்டில் வைக்கும் நிலை. அதுவும் வீட்டில் வைத்தவுடன் செடியானது சுணங்கி போய்விடும். நர்சரி கார்டனில் எப்படி தான் பூச்செடிகளை வைத்திருக்கின்றார்களோ? நம்ம வீட்டிற்கு வந்தவுடன் மயங்கிவிடுகின்றன என்பதே பலரின் கேள்வி. தமிழகத்தில் பெரு நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை தோட்டப்பராமரிப்பு மிக குறைந்த அளவிலான வீடுகளிலேயே அமைந்துள்ளது. கேரளாவில் வீட்டு பயிர்கள் வளர்ப்பில் தற்பொழுது கவனம் செலுத்துகின்றன. ஆம் தமிழகத்திலும் தோட்டம், மாடி தோட்டம் அமைக்கும் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. அதில் இயற்கை விதைகள் மற்றும் இயற்கை உரங்கள் கொண்டு  தோட்டம் அமைத்து பராமரித்து  கொடுப்பவர்களை நாடுவதே நலம். தோட்டம் அமைப்பதில் பணம் மற்றும் பயிர் பலன் உள்ள பயிர்கள் அமைக்கவே பலரும் விரும்புகின்றனர். இடையிடையே நல்ல மலர் செடி, மரங்களை நடுவதன் மூலம் கண்களுக்கு அழகிய விருந்தாக மலர்களும் மலர்களை நாடி வரும் பறவைகளும் மற்ற பயிர்கள் வளர மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் என்பதனை தோட்ட அமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பலாச மலர்கள்
பலாச மலர்களை பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ஏதோ வெளிநாட்டு மலர் வகை என நினைத்து இருப்போம். சங்க காலத்தில் எல்லா மர, செடிகளின் இலைகளை தமிழில் பலாசம் என்று அழைத்தனர். தமிழகத்தில் பலாச மரம்  புரசை மரம் எனவும் குறிப்பிடுவர்.    குறிஞ்சிப் பாட்டில் வருகின்ற 99 மலர்களில் பலாசமலரும் ஒன்று. பலாச மரமலர்கள் பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் காணலாம். அரிதாக மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் காணப்படும் அடர் சிவப்பு மலர்கள் அனைவரையும் கவரும். பிப்ரவரி மார்ச் மாதங்களில் பலாச மலர்கள்  பூத்துக்குலுங்கும் அழகே தனி. இந்த மரத்தில் பூக்கள் ஏராளமாகப் பூத்திருக்கும்போது காடு தீப்பற்றி எரிவதுபோல இருக்கும் என்பதால் இதை Flame of the forest என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
இந்தியாவில் பலாச மலர் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநில மலராக  போற்றப்படுகின்றது. வடநாடுகளில் பலாச மலர்கள் ஆன்மீகத்தின் அடையாளமாகவும், பக்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. களவு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க பலாசமலர்கள் கொண்டு பூஜை செய்யும் பழக்கமும் இருந்து வருகின்றது. பலாச மரத்தின் அடியில் கிருஷ்ணன் ஓய்வு எடுத்ததாகவும் தட்சணாமூர்த்தி தவம் புரிந்ததாகவும் காளியின் பலிபீடங்களை அலங்கரிக்கும் மலராகவும் சந்திர பகவானின் சின்னமாகவும், கடவுளின் பொக்கிஷ்தார் எனவும்  பலாச மரம் அழைக்கப்படுகின்றது. சிவத் தலங்களான திருத்தலைச்சங்காடு மற்றும் திருக்கஞ்சனூரிலும்  (புரசு) பலாசம் தலமரமாக போற்றப்படுகின்றது.

பலாச மரத்தின் பயன்கள்
பலாச மரத்தின் அனைத்து பொருட்களுமே (பூ, விதை, பட்டை, பிசின்) மருத்துவத்திற்கும் சாயப்பொடிகள் செய்யவும் பயன்படுகின்றன. ஹோலிப் பண்டிகையில் பயன்படுத்தப்படும் நிறப்பொடிகள் செய்யவும் பலாச மலர் பயன்படுகின்றது. ஆர்கானிக் காட்டன் சேலை ரகங்கள் தயாரிக்கவும் பலாச மரம் உதவுகின்றது.  கவனச்சிதறல், முதுகுவலி,   எலும்பு முறிவுகள், மனிதனின் செரிமான தொந்தரவுகளில்  கல்லீரல் செயல்பாடுகள், மண்ணீரல் கோளாறுகள் நீக்கும் ஆற்றல் பெற்றவையாக சித்த மருத்துவத்தில் பலாசம்  பரிந்துரைக்கப்படுகிறது. இதன் இலை மற்றும் மலர்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி மேல் மற்றும் அடி வயிற்றில் கட்டுவதன் மூலம் வலி மற்றும் வீக்கம் போக்கவும் விதை நோயைத் தீர்க்கவும், சிறுநீராக பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்றன.  
பலாஷ் விதைகள்  தோல் நோய்களையும்,  கண் நோய்யையும்  போக்குகின்றன. வாத நோய் உள்ளவர்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யவும்  பயன்படுத்தப்படுகிறது. பலாச மலர்களை காயவைத்து தேநீர் தயாரித்து பருகினால் நீரழிவு நோய் எதிர்ப்பும் நல்ல மலமிலக்கியாகவும் பயன்படுகின்றன. இவ்வாறு பலாச மரம் மனித நோய்களின் சர்வநிவாரணியாய் விளங்குகின்றது. ஆனால் நாம் பலாச மரத்தினை தொலைத்து விட்டு பல மருத்துவர்களை மாறிமாறி அணுகிவருகிறோம். இனியாவது நமது பராம்பரிய மலர்களை மீட்டு நமது தோட்டங்களில் அமைத்து உடலினை உறுதி செய்வோம்.

               வஹாப் ஷாஜஹான், திருமங்கலம். 99425 22470

2 comments:

  1. அன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..
    தாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.

    http://naanselva.blogspot.com/2016/02/blog-post_29.html

    ReplyDelete