Friday 16 October 2015

வரிச்சூர் குடைவரை


மதுரை என்றாலே மல்லுகட்டு. அதுவும் வரிச்சூர் என்றவுடன் பிரபல ரவுடியின் அடைமொழி என தமிழகம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால் உண்மையில் வரிச்சூர் நான்கு வணங்குதளத்தினை அருகருகே  பெற்ற புண்ணியபூமி. வரிச்சூர் மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி செல்லும் பாதையில் அமைந்துள்ள அழகிய கிராமம். திருமங்கலத்திலிருந்து வரிச்சூர் சென்று குடைவரையை ரசிக்க நான்கு பேர் கொண்ட குழு பயணித்தது. பிரபல பறவையாளர் சலீம் அலி இருசக்கர வாகனப்பிரியர். தனது பெரும் பறவை கண்டுபிடிப்புகளை இருசக்கர வாகனப்பயணத்திலேயே கண்டதாக கூறியுள்ளார். அதனால் நாங்களும் இருசக்கர வாகனத்தில் அதிகாலை பொழுதில் கிளம்பினோம். கிராமங்கள் வழியாக பயணிப்பதே இனிமை. 

திருமங்கலத்திருந்து பி.கே.என் கல்லூரி, விடதக்குளம், விருசங்குளம், ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், வளையபட்டி வழியாக அவனியாபுரம் வந்தடைந்தோம். அதிகாலை பொழுதினை கிராமங்களில் குளிப்பதற்கு வெந்நீர்  போடுவதும் வயலுக்கு செல்வதுமான காட்சிகள் தொடர்ந்தன. அவனியாபுரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து பயணிகளை இறக்கிவிடும் பகுதிக்கு ஊர்ந்துகொண்டிருந்தது.  காலை பொழுதிலும் நெடுஞ்சாலை பயணிகள் பலர் கார்களை நிறுத்தி விமானம் பார்த்து கொண்டிருந்தனர்.


அங்கிருந்து மண்டேலா நகர் வழியாக வேலம்மாள் மருத்துவக்கல்லூரியை அடைந்தோம். சில மாதங்களுக்கு முன்பு பச்சை போர்வை போர்த்திய நிலமும் தென்னைகளுமாக காட்சியளித்த இடமா இது.  அந்த இடம் தற்பொழுது காங்கிரிட் நரகமாய் மன்னிக்கவும் நகரமாய் காட்சியளித்தது. 





வரிச்சூர் செல்லும் பொழுது கண்ட பறவைகள் முதல் பகுதி














அங்கிருந்து  சாமநத்தம் ஏரியும் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் தென்னை தோப்புகளை கண்டபடி கருப்பாயூரணி அடைந்தோம். வழியெங்கும் பலவித பறவைகள் பார்த்தோம். கருப்பாயூரணியிலிருந்து செல்லும் வழியெங்கும் மதுரை பெருநகர்மயமாகி வருவதினை கண்டோம். அரவிந்த் கண்மருத்துவமனையின் சார்பு நிறுவனமான ஆரோ லேப் மிகப்பெரிய கட்டிடம் இருந்தது. இங்கே கண் சம்பந்தமான நோய்களுக்கான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றதாம். இங்கிருந்து உலகெங்கும் ஏற்றுமதி  நடைபெறுகிறதாம் உடன் வந்த நண்பர் கூறினார். அதற்கு பின்பு டிவிஎஸ் லட்சுமி பள்ளியும் காளாத்தூர் தொழிற்பேட்டையும் கடந்து சென்றன. வழியெங்கும் கிரனைட் தொழிற்கூடங்கள் நிரம்ப காணப்பட்டது. வயல் வெளிகள் அனைத்தும் கிரனைட் விற்பனை கூடங்களாக உள்ளன. பல விவசாய விளைநிலங்களில் “கிரனைட் கம்பெனிகளுக்கு இடம் வாடகைக்கு விடப்படும்” என்ற அறிவிப்பு பலகைகள் மனதினை கலங்கடித்தன.





வரிச்சூர் வந்ததும் வயிற்றிக்கு பசியும் வந்தது. அதிகாலை குளித்து கிளம்பியதால் பசியாற்றினால் தான் அடுத்த நகர்வு என்று  டீக்கடை பார்த்து நிறுத்தினோம். ருசியும் பசியும் சேர்த்து சுட சுட வடைகளை வயிற்றிக்கு வார்த்தோம். கிராமத்து டீக்கடை என்பதால் இன்னும் வடையில் கலப்படம் செய்ய பழகாதது தெரிந்தது. கிராமத்தினர் நாங்கள்  புதிதாய் தெரிவதால் கவனிக்க துவங்கினர். “பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி” நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையும் கவனித்தனர். வரிச்சூரில் வடையும் டீயுமாய் காலை உணவினை முடித்தோம்.











அங்கிருந்து குடைவரை மலைநோக்கி (குன்னதூர்) வண்டியை செலுத்தினோம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை விளம்பர போர்டு வரவேற்றது. 1. உதயகீரிஸ்வரர் கோவில் 2. அஸ்தகீரிஸ்வரர் கோவில் 3. பிராமி கல்வெட்டுகள் 4. முருகன் கோவில் என நான்கு முக்கிய வணங்குதளம் இருப்பது தெரிந்தது. கி.பி 8ம் நூற்றாண்டினை சேர்ந்த இக்குடைவரை அழகுற அமைந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்ததால் உதயகீரிஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. சிறிய அளவில் நந்தியும் வாசலில் இரண்டு வாயிற்காவலர் சிற்பமும் வரவேற்றன. மலையை குடைந்தே உள்ளே கருவறையில் சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. காலை சூரியனின் கதிரானது லிங்கத்தில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு சவால் விடும் வகையில் மலையை குடைந்து அழகே அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் அழகினை ரசித்து படம் பிடித்து கொண்டு கிளம்பினோம். 




அங்கிருந்து தெற்கு நோக்கி வண்டியை செலுத்தினோம். அங்கே மலை மீது நீண்ட படிக்கட்டுகள் பின்பு சமணப்படுகைகள் உள்ளதாக விளம்பர போர்டு வைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகள் ஏறும் முன்பு அங்கிருந்த மஞ்சள் கொன்றை மரம் அழகுற பூக்கள் பூத்து  வரவேற்றது. எங்களை வரவேற்கும்  முகமாக பூக்களை உதிர்ந்து வழியெங்கும் விசிறிகிடந்தது. 


கொன்றை மரத்தில் கதிர்குருவி அழகிய காணம் பாடியது. மரத்தில் புல்புல் பறவை கூடுகட்டியிருந்தது.







 அருகே இருந்த வேலியில் தேன்சிட்டு மிளகாய் செடியில் மிளகாயை ருசித்து கொண்டிருந்தது.   மேலும் சமணப்படுகைகளையும் முருகன் கோவில் குறித்தும், ருட்திராட்ச மரம், பார்வையிடப்பட்ட 40க்கும் மேற்பட்ட பறவைகள் இணையை அழைக்க கழுத்து அருகே விசிறி போன்ற அமைப்பு உடைய ஓணான் (வீடியோ) குறித்தும் அடுத்த கட்டுரையில் வரிச்சூர் குடைவரை 2 காண்போம்.
                                     வஹாப் ஷாஜஹான், (99425 22470)
                                               திருமங்கலம், மதுரை.


No comments:

Post a Comment