Wednesday 21 October 2015

வரிச்சூர் குடைவரை 2


மதுரை, வரிச்சூர் இயற்கை சார்ந்த சூழல் உலாவில் மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன்.  சமணச்சின்னம் ம.குன்னத்தூர் என்ற அரசு விளம்பரப்பலகை கண்டு நின்றோம். அங்கிருந்து பார்த்த பொழுது இயற்கையான பெரிய குகைத்தளம் இருந்தது. குகையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான படுகைகளும், மருந்து தயாரிக்க பயன்படுத்திய குழிகள் இருந்தன. குகையின் மேல் நெற்றிப் பகுதியில் மூன்று பிராமி கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இந்த பிராமிகல்வெட்டுக்கான விளக்க பலகை ஒன்றும் உள்ளது. இங்கு தங்கியிருந்த சமணர்களுக்கு நூறுகலம் நெல் வழங்கியதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. நூறுகலம் நெல் வழங்கப்பட்டது என்றால் குறைந்தது சுமார் 50 சமணர்கள் தங்கியிருக்கலாம்.


குகையின் முன் பகுதியில் இரண்டு கம்பி கேட் போடப்பட்டு உள்ளே முருகன் மற்றும் சிவன் வழிபாடு நடைபெறுகிறது. படுகைகளின் தொடர்ச்சியையும் செங்கல் கட்டிடம் பிரிக்கின்றது. முன்சுவர் அகற்றப்பட்டால் குகையின் பிரமாண்டம் இன்னும் விளங்கும். உள்ளேயே மேற்கு நோக்கி அமைந்த பகுதியினை அஸ்தகிரிஸ்வரர் கோவில் என்றும் அர்த்தகிரிஸ்வரர் கோவில் எனவும் கூறுகின்றனர். நேபாளில் மட்டும் அதிகம் வளரக்கூடிய ருத்ராட்ச மரம் ஒன்றும் இங்குள்ளது. தற்பொழுது மரத்தினை காண பக்தர்கள் அதிகம் வருவதாக கிராமத்தினர் கூறினர். கிழக்கு நோக்கி இருக்கும் குகைத்தளத்திலிருந்து மலையின் தெற்கே நடந்தோம். அங்கே மலைகளின் பள்ளங்களில் நீர் நிரம்பி இயற்கை தாமரைக்குளம் அழகுற காட்சியளித்தது.


தாமரை குளத்தின் பின்புறமும் குகைத்தளமாகவே உள்ளது. தாமரைக்குளம் உள்ளதால் குகைக்குள் சென்று பார்க்கமுடியாதநிலை உள்ளது. மலையை ஒட்டி நடந்த பொழுது தெற்கு நோக்கி மற்றொரு சிவலிங்கம் உடைய குடைவரை அமைந்திருந்தது. திருவண்ணாமலை போலவே இம்மலையை சுற்றியும் பலபகுதியில் சிவலிங்கம் உள்ளது. எனவே பகுதி பக்தர்கள் பவுணர்மி நாட்களில் இம்மலையினை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
அங்கிருந்து மலைமீது ஏறிய பொழுது அங்கே மிகவும் சிதலமடைந்த கோவில் ஒன்று இருந்தது. ஒரு கல் தூண் உடன் சிதலமடைந்த செங்கற் கட்டிடமும் உடைந்த நந்தியும், சிலைகளும் உள்ளன.  













மலையின் மேலே தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் தவளைகள் விளையாடி வருகின்றன.






இணையை அழைக்க கழுத்து அருகே விசிறி போன்ற அமைப்பு உடைய ஓணான் நந்தியின் மேல் நின்று விசிறி விரித்து படம் காட்டியது. வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.
  
  


மலையின் மேலிருந்து  யானைமலையின் முழு அழகினை காணலாம். மற்றும் திருப்பரங்குன்றம் மலையும் தெரியும்.  கோவில் கல்திண்டில் அமர்ந்து,, கொண்டு சென்ற நொருக்குத்தீனிகளை காலி செய்தோம். முதல் நாள் மழை மலையை குளிர்வித்திருந்தது . இம்மலையின் அருகிலேயே மற்றொரு மலை உள்ளது. அம்மலையின் மேலும் ஒரு கோவில் அமைந்திருந்தது. விசாரிக்கையில் கன்னிமார் கோவில் என்றனர். அதற்கு நேர் எதிரே திருப்பரங்குன்றம் மலை தெரிந்தது.





அதாவது சிதலமடைந்த கோவிலில் இருந்து நேராக கன்னிமார் கோவிலும் அடுத்ததாக திருப்பரங்குன்றம் கோவிலும் நூல்  பிடித்தது போன்று அமைந்திருந்தது. சரி வந்தது வந்து விட்டோம் என கன்னிமார் கோவில் இருந்த மலை மீதும் ஏறினோம். 






மலையின் மேல் இருந்து பார்க்கையில் புல்டவுசர் மூலம் மணல் கொள்ளை ஒருபுறம் நடந்தது. அந்த மலையின் பக்கவாட்டு பகுதிமலை முழுவதினையும் கிரனைட் கொள்ளையர்கள் கொள்ளையடித்திருந்தனர். அதனால் மிகப்பெரும் பள்ளம் இருந்தது. நேற்றைய மழைநீர்  அங்கும் தேங்கி கிடந்தது. அம்மலை இடையே வளர்ந்திருந்த மரங்களில் பல வகை பறவைகள் இருந்தன. குறிப்பாக ஈபிடிப்பான், மீன் கொத்தி, கரிச்சான் (இரட்டவால்), ஆள்காட்டி பறவைகள் என என்னை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தின.

வரிச்சூர் செல்லும் பொழுது கண்ட பறவைகள் இரண்டாம் பகுதி












மலைக்கு அருகே 1857 என பொறிக்கப்பட்ட அரிவாள் போன்ற ஒரு வழிப்பாட்டு கல் ஒன்று இருந்தது. 

மதுரைக்குள் உள்ள வரிச்சூர் குடைவரை மற்றும் சுற்றிய பகுதிகள் இயற்கை அழகுற காட்சியளித்து வருகிறது. மதுரை மற்றும் புறநகர் மக்கள் சிக்கனமான சுற்றுலா தளமாக இங்கு சென்று திரும்பலாம். அரசும் மலையின் சுற்றுச்சூழலை சரிவர பராமரித்து சிறுவர் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும்.

வரிச்சூர் குடைவரையை கண்டுமகிழ்ந்து ஊர்திரும்பும் பொழுதும் கிராமத்து பாதைகளையே தேர்வு செய்தோம். இம்முறை களிமங்கலம், சக்குடி வழியாக அவனியாபுரம் வந்தடைந்தோம். களிமங்கலத்தில் உள்ள தர்காவும் ஒட்டி அமைந்த நடுகல்லும் பார்த்தோம். மீண்டும் சாமநத்தம் ஏரியில் பறவை பார்த்த படி திருமங்கலம் வந்தடைந்தோம். தங்களின் அடுத்த பயணம் வரிச்சூராக அமைய வாழ்த்துகிறேன்.
                                         வஹாப் ஷாஜஹான், (99425 22470)
                                               திருமங்கலம், மதுரை.

No comments:

Post a Comment