Thursday, 12 February 2015

சிவரக்கோட்டை சிங்கம் 2அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கடந்த 2014 ம் “ஆண்டின் சிறந்த மனிதர்” விருதினை அறிவித்துள்ளது. விருதானது எபோலா பாதித்தவர்களுக்கு மருத்துவ சேவை அளித்த மருத்துவக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மனிதர் விருதிற்கான இணைய வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகம் முழுமைக்குமான பிரபலங்கள் இருந்தனர். ஆனால் விருதானது தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய எபோலா மருத்துவக்குழுவிற்கு வழங்கியது டைம். எபோலா மருத்துவக்குழுவினை  வாழ்த்துவோம். வாஷிங்டன் செய்தி பார்தோம் சரி அப்ப நாம வாசிக்கும் ஆனந்தவிகடன் பத்தியும் பாப்போம் வாங்க.  2014 டாப் 10 மனிதர்கள் விருது ஆனந்தவிகடனும் வழங்கியுள்ளது.

நமது சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யாவிற்கு விகடன் இதழ் தமிழகத்தின் டாப் 10 மனிதர் விருது வழங்கியுள்ளது.  இவ்விருதினை எளிதில் பெற்றுவிட வில்லை அய்யா அவர்கள். சிவரக்கோட்டையினை சிங்கப்பூராக மாற்ற போவதாக அரசு அறிவித்தது. அதற்கு 1478 ஏக்கருக்கு சிறிய,நடுத்தர பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவ உள்ளதாக அறிவித்து விவசாய நிலங்களை அரசே கையகப்படுத்தும் சூழ்நிலையை சென்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள். 


அரசின் நடவடிக்கைக்கு எதிராக விவசாய விளைநிலங்களை காக்க கிராம மக்களுடன் இணைந்து அகிம்சா போராட்ட களத்தில் குதித்தார் ராமலிங்கம் அய்யா. இன்றும் அரசு அலுவலங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் நடையாய் நடந்து வருகிறார்.  நாட்டை ஆளும் முதல்வரின் மகன், மகள்களையும் எம்.எல்.ஏக்களையும் அவர் பகைத்து கொண்டிருக்கின்றார். நீதிமன்றம் இவரின் உயிர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி சுடுவதற்கான  பயிற்சி எடுத்து வைத்து கொள்ள அனுமதித்துள்ளது.


அரசு எந்திரங்களையும் அரசியல்வாதிகளையும் பகைத்து தமிழகத்தில் உயிர் வாழ்வது அரிது. உயிர் மீது ஆசை உள்ள எவரும் களத்தில் இறக்க தவிர்க்கும் இப்பணியில் மண்ணைக் காக்க மற்றுமோர் சுதந்திர போராட்டத்தினை துவக்கி நடத்தி வருகிறார் ராமலிங்கம்அய்யா. எபோலா நோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இணையாக  அய்யாவும் உழவர்களின் ஜீவாதார பிரச்சனைக்காக தனது உயிரினை பொருப்படுத்தாது போராடி வருகிறார்.

இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல் களத்தில் குதித்தது பசுமைநடை. பிப்ரவரி 1 ஞாயிறு பசுமைநடை சிவரக்கோட்டை நோக்கிய பயணம். அதிகாலை 4மணிக்கு எழுந்த நான் தம்பி பாடுவாசியுடன் 5 மணிக்கு சிவரக்கோட்டையை அடைந்தேன். அய்யா அவர்கள் அந்த அதிகாலையில் மண்டபம் ஒன்றில் சிவரக்கோட்டை மக்களின் போராட்ட களங்களின் புகைப்பட ஆவணங்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அய்யா இன்னும் சிறிது நேரத்தில் பசுமைநடையாளர்கள் ஊருக்குள்  வந்துவிடுவார்கள். இங்கு என்னய்யா செய்கிறீர்கள் என்றேன். தம்பி இரவெல்லாம் ஊர்மக்களோடு சேர்ந்து புகைப்படம் ஒட்டினேன். சுவற்றில் சுண்ணாம்பு கழன்று படங்கள் அனைத்தும் பிரிந்து வருகின்றது. அதை சரி செய்கின்றேன் என்றார். 
அய்யா விவசாயிகளுக்கு எதிரான தடுப்பு சுவர்களாய் அரசும் இந்த சுவர்களும் நமக்கு எதிராக சதிசெய்கிறது விடுங்கள் வாருங்கள் வரவேற்போம் பசுமைநடையாளர்களை என்றேன். மண்டபத்திற்கு வெளியே வந்தபொழுது தான் மரங்களில் அடைந்து இருந்த சேவல்கள் எழுந்து கூவின.

அங்கிருந்து சிவரக்கோட்டை கிராமத்து தேநீர்கடை சென்றேன்.  அவர்கள் எங்கள் வரவு பற்றி விசாரித்தனர். அங்கிருந்தவர்களுக்கிடையே  மாமன் மச்சான் கிண்டல் பேச்சு நடைபெற்றது. டீக்கடை என்றதும் அரசியல் பத்திரிக்கை என பார்த்திருந்தது போக மச்சானை மாமன் வாருவதும் மாமனை மச்சான் வாருவதும் நகைச்சுவையாக இருந்தது. அனைத்தும் ஏ ஜோக்குகள் அதனால் அச்சில் தவிர்க்கின்றேன். பேசி கொண்டிருந்த நேரத்தில் பசுமைநடையாளர்களின் வாகனங்கள் அணிவகுத்தன.  விலை உயர்ந்த கார் களில் வந்தவர்களை  டிராக்டரில் ஏறக்கூறினோம். வந்திருந்தவர்களில் பலருக்கும் இதுதான் முதல் டிராக்டர் பயணம். டிராக்டருக்குள் மகிழ்ச்சி கடலில் குதித்தனர். ஆம் கடலுக்குள் பயணிப்பது போன்று வரப்பு மேடுகளின் மேடு பள்ளங்களில் குலுங்கி மகிழ்ந்தனர் நடையாளர்கள்.

சென்ற நவம்பரில் சோளக்காடாய் பசுமையுடன் காட்சியளித்த  வயல்வெளிகளை புகைப்படத்தில் சென்ற கட்டுரையில் கண்டு இருப்பீர்கள். தற்பொழுது அதன் ஊடு பயிராய் விளைவிக்கப்பட்ட துவரை பயிறால் அழகுற காட்சியளித்தது. சோளங்கள் அறுவடை செய்யப்பட்டிருந்தன. வண்டி செல்ல செல்ல பருத்தி, வரகு, சோளம், குதிரைவாலிகளும் விதவிதமான பூக்களும் கண்களுக்கு விருந்தளித்தன. இம்மண்ணினை மலடென கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயிற்றில் அடிப்பதாய் தன் தலையில் தானே மண்னை அள்ளி போடும் அரசினை  என்னவென்று சொல்வது. 
சிறிது தூர டிராக்டர் பயணத்திற்கு பிறகு நடந்து செல்வதென்று  வயல்வெளியில் நடந்தோம். பறவைகள்  சென்ற முறை பார்த்ததினை விட அதிகம் இருந்தன. இன்னும் மலையை சுற்றிய நீர் தடாகங்களில் தண்ணீரும் தாமரைகளும் இருந்தது இப்பகுதியின் வளத்தினை நமக்கு உணர்த்தியது.

சிறு மலை கோயிலின் பின்புறம் கூடி நடையாளர்கள் அமர்ந்தனர். பின்பு சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யா போராட்டத்தின் வரலாற்றினையும் இயற்கை விவசாயம் செய்து வருவதினையும் விளக்கினார். இறகுகள் ரவி அவர்களும் சிவரக்கோட்டை பறவை பார்வையிடல் குறித்து விளக்கினார். இம்முறை பசுமைநடைக்கு இறகுகள், நாணல் நண்பர்கள், கிராம மக்கள் என இயற்கையார்வளர்கள் ஒருசேர கலந்து கொண்டது சிறப்பு. பசுமைநடை முத்துகிருஷ்ணன் அவர்களின்  சிறப்பான உரையில் பசுமைநடையின் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை எழுத நடையாளர்களுக்கு ஆர்வமூட்டினார். ராமலிங்கம் அய்யாவின் போராட்டகளங்கள் குறித்தும் தகவல் கேட்கும் சட்டத்தினை அய்யா பயன்படுத்தும் விதங்கள் குறித்தும் அவர் வைத்துள்ள ஆவணங்கள் குறித்தும் உரையாற்றினார்.


வழக்கமான பசுமைநடையானது தொல்லியல் சார்ந்த இடங்களை அரசு கையகப்படுத்தி அதனை சரிவர கவனிக்காமல் இருந்துவருவதினை பார்த்திருப்போம். இந்த முறை விவசாயிகள் நிலத்தினை அழகுற பயன்படுத்தி வருவதினை அரசு கையகப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து வந்தோம். 

இம்முறை பசுமைநடைக்கு உளவுத்துறை அன்பர்களும் காவல் போக்குவரத்து அதிகாரிகளும் அழையா விருந்தினராய் வந்திருந்தனர். காலை உணவாக இட்லி நடையாளர்களுக்கு வழங்கப்பட்டது. உணவிற்கு பின்பு மீண்டும் டிராக்டர் பயணம் குலுங்க குலுங்க பயணித்தோம். நடுவழியில் சிவரக்கோட்டை கிராம மக்களின் சார்பாக அய்யா ராமலிங்கத்தின் கையால் சுண்டல் வழங்கப்பட்டது. சுண்டல் வழங்கும் பொழுதே உளவுதுறை,காவல் துறையினரையும் ஒரு பிடிபிடித்தார். எதிரே அமைந்து இருக்கும் முன்னாள் முதல்வர் மகனின் கல்லூரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு ஆணையிட்ட பொழுது கல்லூரிக்குள் செல்ல பயந்து நின்ற காவல்துறை இன்று மட்டும் நம்மிடையே நெஞ்சை நிமிர்த்தி வருவதினை குறிப்பிட்டு விழிப்புணர்வு உரையாற்றினார். 

இப்பசுமை நடை நமக்கு புதியதொரு பாடத்தினை வழங்கியது. அரசின் நெருக்கடிகளையும் அரசியல் வாதிகளின் மிரட்டல்களையும் துச்சமென மதிக்கும் பாங்கினையும் போராடும் குணங்களையும் சிவரக்கோட்டை கிராமத்து மக்களிடமிருந்து அதுவும் குறிப்பாக ராமலிங்கம் அய்யாவிடமிருந்து கற்க வேண்டியது நமக்கு நிறையவே உள்ளது. சிவரக்கோட்டையில் கண்ட இயற்கைக்காட்சிகள் என்றும் நிலைகொண்டு ஊருக்கெல்லாம் உணவளிக்கும் அமுதசுரபியாக என்றும் நிலைபெறட்டும் என இனிதே வாழ்த்தி விடைபெற்றது பசுமைநடைகுழு.. 

4 comments:

 1. அருமை நல்ல தகவலுடன் சிறப்பு செய்துள்ள பதிவு

  ReplyDelete
 2. நன்றி வேல்முருகன் சார்

  ReplyDelete
 3. மண்ணுக்காக போராடுகிற மகா மனிதர்களை பார்க்க வாய்ப்பது இன்றைய கால கட்டத்தில் மிக அரிய விஷயம். நமது திருமங்கலம் நகருக்கு மிக அருகில் இருக்கிற ஒரு சூழல் போராளியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அவரது கரத்தை பலப்படுத்த, உங்கள் எழுத்து பெரிதும் துணை நிற்கும். புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை. காட்சிகளும், கோணங்களும் கவனம் ஈர்க்கிறது. சிங்கம் 3 இருக்கா?

  - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

  ReplyDelete
 4. தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்.

  ReplyDelete