Thursday, 5 February 2015

சிவரக்கோட்டை சிங்கம் -1


சூரியன் எத்திசையிலிருந்து உதிக்கின்றது என என்னிடம் கேட்டால் எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் அது விருதுநகரிலிருந்து தான் என அடித்துக்கூறுவேன். எப்பொழுதுமே நம்ம ஊரு நமக்கு சொர்க்கம் தான். மனைவியின் ஊரு மட்டம் தான். எங்கள் வீட்டு பெண்களான அம்மா, மனைவியின் பிறப்பிடம் விருதுநகர். என் அப்பாவின் வழிநடத்துதல் காரணமாக சிறுவயது முதலே விருதுநகர் என்றாலே எட்டிக்காய் தான்.


திருமங்கலம் விருதுநகர்  பாதையில் சிவரக்கோட்டையை சாலைப் பயணங்களில் பார்த்தது தான். ஊருக்குள் சென்றது இல்லை. சென்று பார்க்கும் ஆர்வமும் எப்போதும் இருந்ததும் இல்லை. சென்ற நவம்பர் மாதத்தில் பறவைபார்வையிட சிவரக்கோட்டைப்பகுதி என அழைப்பு வந்தது.

அப்போதே வறண்டப்பகுதியில் என்ன பறவை இருந்துவிடப்போகின்றது ஏதோ கணக்கிற்கு பயணிக்கின்றனரோ. என எண்ணினேன். நண்பர்கள் உங்களுக்கு தெரியாதா? அடிக்கடி மான்கள்  சாலையில் அடிபடுவதும், சிறுத்தைகளை பார்த்ததாகவும் பத்திரிக்கை செய்தி வருமே. ஊர் நல்ல செழிப்புங்க. ஒரு தடவை போய் பாருங்க. என்றனர். அடப்போங்கப்பா எனக்கு தெரியாதா? விருதுநகர் போற வழியில இருக்குற ஊரு. அப்ப எப்படி இருக்கும். 
யாராவது என்ன மாதிரி ஆளு தூக்கத்தில குறட்டை விட்டு இருப்பான். அந்த சத்தத்த கேட்டு சிறுத்தை வந்திருச்சுனு பில்டப் வேற. அப்புறம் மனசுல லேசா மானுகினு வந்து போட்டோ எடுத்துட்டா. நம்மையும் இப்ப சிலரு பேஸ்புக்ல போட்டோ கிராபர் நம்புறாங்க. அந்த ஏமாந்த சனங்கள தக்க வைச்சுக்க சென்று நல்ல போட்டாவ போட்டு லைக்க வாங்கிபுடலாமுனு கிளம்பினேன்.


பறவை பார்வையாளர்கள் பத்து பன்னிரெண்டு பேர்கள் சிவரக்கோட்டையினை அடைந்தோம். அங்கு  எங்களை வயதான ஒருவர் தலைமையில் கிராமத்து ஆட்கள் வரவேற்றனர். சரி வாங்க வயக்காட்டுக்குள்ள போலாம் என்றனர். ஊருக்கு மேற்கு நோக்கிய சாலையில் சில அடிகளிலேயே சோள தட்டைகள் பச்சபசேலென்று வரவேற்றன. ஒன்றை ஆள் உயரத்தில் சோளதட்டைகள் பார்க்க கண்கொள்ளா காட்சி அளித்தன. 

பார்த்து வாங்க. நேற்று மழைபெய்சுருக்கு நிலம் சகதியா இருக்கும் என்றனர்.. நான் சரி பக்கத்தில் தான் இருக்கும் இருசக்கர வாகனம் மூலம் போய்விடலாம் என எண்ணி வண்டியை கிளப்பினேன். வரப்பில் வண்டி ஓட்டிய படியே வயக்காட்டினை ரசித்தபடி பயணித்தேன். அடுத்த சிலநிமிடங்களில் சர்க்கஸில் இருக்கும் கரணம் தப்பினால் மரணக்கூட்டில் மோட்டார் பைக் ஓட்டியது போன்ற நிலை ஏற்பட்டது. இருபுறமும் பேலன்சிற்காக கால்களை ஊண்டினால் கால்கள் சேறில் ஸ்கேடிங் விளையாட செய்தது. 

பறவை பார்க்க போய் பரலோகம் பார்த்து விடுக்கூடிய வாய்ப்பு வந்துவிட்டதோ என எண்ணினேன். நல்லபடியா வீடு போய் சேர்ந்தா இதுவரை “கா” விட்டுல்ல கடவுளோடு பழம் விடுவதாக வேண்டி கொண்டேன்.  சோளக் காடு தந்தியின் சிந்துபாத் கதை போன்று நீண்டு கொண்டே சென்றது.  ஒருவழியாய் இதற்கு மேல் டுவீலரில் செல்ல வேண்டாம் நடப்போம் என்றனர். உடன் வந்த பறவை பார்வையாளர்கள். அப்பாடா என வண்டியை மரநிழலில் நிறுத்தி நடக்க ஆரம்பித்தோம்.

பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமையும் பறவைகளும் எனது விழிகளுக்கும், கேமராவிற்கும் விருந்தழித்தன. பறவைகளின் கீச்சு குரலொளி சோளக்காடு எங்கும் ஒலித்தன. பறவையாளர்களுடன் பேசிக்கொண்டே செல்கையில் சிறு மலை போன்ற குன்று மேட்டில் கோயில் ஒன்று தெரிந்தது. நெருங்கி செல்ல செல்ல அந்த மலை மேட்டினை சுற்றி நீர் தடாகங்கள் அழகுற காட்சியளித்தன. நீர் தடாகத்தில் தாமரைகள் அதிகமா? பறவைகள் அதிகமா? என போட்டியிட்ட வண்ணம் காட்சியளித்தது. பறவைகள் வண்ணத்திலும் நிறத்திலும் பலவகைகளில் காட்சியளித்தன. தாமரை  வெள்ளை, ரோஸ், அடர் சிவப்பு என தடாகத்தின் அழகிற்கு அழகு சேர்த்தன. ஒரு முழு நிலவு இரவு பொழுதினை  இங்கே கழித்தால் இவ்விடம் சொர்க்கமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.அந்த சிறுமலையினை ஒட்டிய தடாகப்பகுதி முழுவதினையும் சுற்றி பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இரண்டு குழுவாக பிரிந்து சுற்றி பறவை கணக்கெடுப்பு எடுத்தோம். பின்பு அனைவரும் மலை அடிவாரப்பகுதியில் ஒன்று கூடினோம். அப்போது பேசிக்கொண்ட அனைவரும் கூறியது இதுவே. இத்தனை வளமான இத்தனை விதமான பறவைகள் இங்கு இருக்கும் என்பதனை காணும் வரை நம்பமுடியாத விஷயமாக இருக்கின்றது என்றனர். 
காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின்பு பெரியவர் ஒருவர் ஊர் வரலாற்றினை சுருக்கமாக கூறினார். பண்டைய கால பாண்டிய

மன்னன் ஒருவன் சுவர் எழுப்பி  கோட்டை 

அமைத்து, ஆட்சி செய்த 

ஊராக இப்பகுதி இருந்ததால் முதலில்


  சுவர்க்கோட்டை என்றும்


பின்னாளில் சிவரக்கோட்டை 


என்றும்  திரிந்து அழைக்கப்பட்டு 

வருவதாக கூறினார். 

பின்பு தன்னை ராமலிங்கம் என அறிமுகப்படுத்திக் கொண்டு மற்றும் ஒரு பெரியவர் சிறு உரையாற்றினர் . நாம் நின்று கொண்டு இருக்கும் இவ்விடம் விளைச்சலுக்கு ஏற்ற இடமில்லை எனவும் கூடிய விரைவில் சிப்காட் தொழில் கூடங்கள் இங்கே அமைய விருப்பதாக சென்ற ஆட்சியினரும் தற்போதைய ஆட்சியர்களும் மக்களை மிரட்டி விளைநிலங்களை அரசிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தி வருவதாக கூறினார். என்னடா  இது நல்லா தானே போய்க்கொண்டு இருந்தது பறவை பார்வையிடல் என நினைத்தேன். 


 பேசி அமர்ந்தவுடன் அய்யா  நாங்கள் எல்லாம் பலசரக்கு கடைகளில் சென்று அரிசி வாங்குகின்றோம். எங்களில் பலருக்கும் இந்த வரப்பில் நடக்கவே தெரியாது. நீங்கள் கஷ்டப்பட்டு விவசாயம் செய்கின்றீர்கள். விவசாயித்தின் அருமை உணர்வார் இங்கு யாரும் இல்லை. விவசாய விளைநிலங்கள் அனைத்தினையும் அழித்துவிட்டு இங்கே இனி தயாரிக்கும் இரும்பு போல்ட், நட்களை அரசு சாப்பிட சொல்லும் என நினைக்கின்றேன் என்றேன். 

எங்களுடன் வந்த விகடன் மாணவ பயிற்சி நிருபர் வெகுஜன மக்களுக்கு இன்னும் இவ்விசயம் சென்றடையவில்லை. நீங்கள் ஏன் பசுமைநடை போன்ற அமைப்பினை இவ்விடத்திற்கு அழைத்து வந்து கவனஈர்ப்பு செய்யக்கூடாது என்றார். உடன் நாணல் நண்பர்கள் தமிழ்தாசன் அவர்கள் என்னைக் காட்டி இவர் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்றார். உடன் ராமலிங்கம் அய்யா தம்பி விரைவில் பசுமைநடைப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யக்கூறினார். கண்டிப்பாக அய்யா முயற்சிகின்றேன் என்றேன். 

வளம் கொழிக்கும் இந்த மண்ணைக் காப்பாற்ற வயதான ராமலிங்கம் அய்யா போன்றவர்களுக்கு எவ்வகையில் உதவுவது என்று மனம் வருந்தியபடி இருந்த எனக்கு இதுவாய்ப்பாக அமைந்தது. கவலை தோய்ந்த நினைவுடன் டுவீலரினை நான்குவழிச்சாலையில் செலுத்தினேன். அப்பொழுது தான் நல்லபடியாக திரும்பினால் கடவுளுடன் பழமிடுவதாக வேண்டியது நினைவுக்கு வந்தது. உடன் கடவுளுடன் கா போடுவதற்கு இன்னும் பெரிய காரணம் வந்து விட்டதனை எண்ணியபடியே வீடு வந்தடைந்தேன்.
                                          வஹாப் ஷாஜஹான்,
                                                 திருமங்கலம்.
     நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பசுமைநடை சிவரக்கோட்டை சிங்கம்2 விரைவில்10 comments:

 1. துள்ளல் நடையில் மனதை மயக்கும் படங்களுடன் சிவரகோட்டையின் பிரச்சனைகளை உணரும் ஓர் பதிவு

  ReplyDelete
 2. நன்றி வேல்முருகன் சார்.ஒவ்வொரு பதிவுக்கும் தங்களின் கருத்து பதிவிடும் பாங்கு என்னை உற்சாகப்படுத்துகின்றது.

  ReplyDelete
 3. நல்ல பதிவு,என்ன கிராமங்கள் தன்னை இழந்து வருகின்றன என்பதே தற்பொழுது மனம் அறுக்கும் உண்மையாய் இருக்கிறது,அதுவும் இதுபோலான நகரத்தை அண்மித்திருக்கிற கிராமங்கள் சுயமுகம் இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.கிராமங்கள் சுமந்து கொண்டிருந்த விவசாயம்,மாட்டு வண்டி,மாடுகள் ஆடுகள் உழைப்பாளிகள் மற்றும் இன்னும்,இன்னுமான விவசாயி,மற்றும் விவசாயக்கூலியின் சார் குணம் எல்லாம் காணாமல் போய் இன்று வறண்டுகிடக்கிற நிலையில்,கிராமங்களின் கண்மாயைப்போல காட்சி தருகிறது/

  ReplyDelete
 4. விரைவில் எதிர்பார்க்கிறோம் சிங்கம் -2ன் கர்ஜனையை...

  ReplyDelete
 5. விரைவில் எதிர்பார்க்கிறோம் சிங்கம் -2ன் கர்ஜனையை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி உதயா . சிங்கம் 2 கூடிய விரைவில்

   Delete
 6. எளிமையான நடை; கவர்கிற மாதிரியான தலைப்பு. மனதில் பதிகிறது போல உரையாடல் பாணி எழுத்து. படிக்கப் பிடிக்கிறது.

  - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

  ReplyDelete
 7. தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்.

  ReplyDelete