Tuesday 11 November 2014

சலீம் அலி

சலீம் அலி (1896- 1987)


இவர் அனார்கலியின் சலீம் அல்ல அன்னம் கிளிகளின் சலீம். காக்கைகுருவியும் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடலை உண்மைப்படுத்தியவர். வேட்டைக்கார குடும்பத்தில் பிறந்தாலும் பறவைகள் மீது பரிவு கொண்டார். பறவைகள் பார்வையிடுவதே பணியாக்கி கொண்டார். வேட்டையில் சிக்கிய பறவையின் கழுத்துப்பட்டையை கவனித்தார். அது மஞ்சள் நிறத்தில் இருந்தது.பறவையை பற்றிய மேல் தகவலுக்கு இயற்கை வரலாற்று மையத்தினை தொடர்புகொண்டார். பாம்பே இயற்கை வரலாற்று மையம் ஆங்கிலேயர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. மையத்தில் சின்னதும் பெரியதுமான பறவைகளை பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதினை கண்டார் சலீம். அது முதலே அவருக்கு பறவை காதல் பற்றிக்கொண்டது.



பின்பு  1917 ல்மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு படித்தார். கல்லூரி காலத்தில் பறவைகளுடைய பரம்பரை குணாதிசியம், உடல் கூறுகள், சிறப்பியல்புகளை பற்றி அறிந்தார். பலநாடுகளில் அருங்காட்சியகங்களில் பணியாற்றினார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் பறவை பகுப்பாய்வு ( டாக்சானமி) பயின்றார். பறவை பார்வையிடுதலின் முக்கிய பகுதிகளான பறவைகளுக்கு  வளையம் இடுதல், பட்டை கட்டுதலில் கைதேர்ந்தவரானார். 1930 ல் பாரதம் திரும்பிய சலீம் மும்பை கடலோர கிராமத்தில் வசித்தார். கடலோர பறவைகள் மற்றும் தூக்கனாங்குருவியின்  வாழ்வியல் முறைகளும், உணவு, இணை சேரும் விதங்கள் குறித்தும்  விளக்கமாக அறிந்தார்.

         தினகரனில் 10.11.2014 அன்று வெளிவந்த எனது கட்டுரை


சலீம் எழுதிய புத்தகங்களில் “தி புக் ஆப் இண்டியன் பேர்ட்ஸ்” இந்திய பறவைகளின் கலைக்களஞ்சியமாகும். இப்புத்தகமானது நேரு டேராடோன் சிறையிலிருந்து நைனிடால் சிறையிலிருந்த இந்திராவிற்கு பரிசாக அனுப்பிய பெருமை வாய்ந்தது. அவரது சொற்பொழிவுகளான 1971 சுந்தர்லால் ஹோரா நினைவு உரையும், 1978 ஆசாத் நினைவுரையும்  இந்திய பறவையியல் ஆய்வின் மணிமகுடமாகும்.


சலீமுக்கு பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தனர். இந்திய விவசாய ஆராய்ச்சி சபையில் (ICAR)  பறவையியல் தொடர்பான பொருளாதார பிரிவினை துவங்க காரணமாய் இருந்தார். அதை தொடர்ந்து அரசு பறவையியல் சார்ந்து நிதிஉதவிகள் ஒதுக்க வழிவகுத்தது. இங்கிலாந்து நாட்டின் சிறந்த பறவையாளருக்கான தங்கப்பதக்கம் 1967ல் பெற்றார். இப்பதக்கம் பெற்ற பிரிட்டிஷ் குடிமகன் இல்லாத ஒருவர் சலீம் மட்டுமே.


இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டம் கொடுத்து கவுரவித்தது. அவரின் நினைவாக இந்திய அரசு கோவை பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்திற்கு சலீம் அலி பெயரிட்டது. கோவா மற்றும் கேரளா அரசுகள் சலீம் அலி பெயரில் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ளன. சலீம் அலியின் பலநூல்கள் இன்றும் பறவையிலாளர்களின்  வழிகாட்டுதலுக்கு பயன்பெற்று வருகின்றது. தனது பறவை வாழ்வியல் பற்றி "THE FALL OF A SPARROW " என்ற புத்தகம் மூலம் அவர் சுயசரிதை வரலாற்றினை உலகிற்கு விளக்குகின்றது. இவ்வாறு பறவைகளுக்காக வாழ்ந்த சலீம் அலி 1987 ஜூன் 20ல் மண்ணுலகிலிருந்து விண்ணுலகத்திற்கு பறந்தார். சலீம் அலியின் உதயதினமான நவம்பர் 12ல் இந்தியாவின் பறவை மனிதனை பற்றிய நினைவலைகளில் பறப்பதே அவருக்கு நாம் ஆற்றும் கடமை.
                                         வஹாப் ஷாஜஹான்,
                                           திருமங்கலம்



2 comments:

  1. இவரை பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் அருமை அவசியமான கட்டுரை

    ReplyDelete
  2. நன்றி வேல்முருகன் சார்.

    ReplyDelete