Wednesday 29 October 2014

தெப்பக்குளத்து மிதவை நடை.



தொண்மை நிறைந்த மதுரையில் மக்கள் பார்வையிட வேண்டிய முக்கியப்பகுதிகளில் நாயக்கர்கால கட்டிடங்கள் மிகமுக்கிய இடங்களை பிடிக்கின்றன. அதிலும் இந்த முறை பசுமைநடைப்பயணம் தெப்பக்குளம் எனக்கு என்றும் மனங்கவர்ந்த இடமாகும். எனது தந்தை சிறுவயதில் குதிரைவண்டி பயணத்தில் அழைத்து வந்து தெப்பத்தினை காட்டி சுற்றி இருக்கும் கல்லூரியிலிருந்து அனைத்தும்  வைகை ஆற்றுக்கரைடா ஆக்கிரமிக்கப்பட்டு தெப்பத்து அழகினை கெடுக்கின்றனர் என அந்த காலத்திலேயே  விழிப்புணர்வு ஏற்படுத்தியது இன்றும் பசுமையாக நினைவிருக்கின்றது. அந்தக் குதிரைவண்டி பயணம் புட்களால் ஆன மெத்தையில் இனிவாழ்க்கையில் பயணிக்கவியலுமா? குதிரைக்காரனுக்கு பக்கத்தில் அமர்ந்து தெப்பத்தினை சுற்றிவந்ததும், ஐஸ்வண்டிகாரனிடம் சேமியாஐஸ் வாங்கி சாப்பிட்டதும் குதிரையின் கண்களை மறைத்து எப்படி செல்லுகின்றது என்ற மர்மம் விலகிய பொழுதும் தெப்பத்தினை கண்ட உடன் என்னுள் தொற்றிக்கொள்ளும்.



தெப்பப்பகுதியினை  எப்பொழுது தாண்டினாலும் பழைய நினைவலைகளில் நான் மிதக்க துவங்கிவிடுவேன். இந்த முறை பசுமைநடைபயணத்திற்காக திருமங்கலத்தில் எனது இல்லத்தில் இருந்து  அதிகாலை 4 மணிக்கே எழுந்து தம்பி இளஞ்செழியனுடன் இருசக்கர வாகனத்தில் கப்பலூரினை கடக்கும் பொழுது தான் கதிரவன் கண்விழிக்கவே செய்தான். அந்த இயற்கைக் காட்சியினை படம்பிடித்து விட்டு அங்கிருந்து அகலவே மண மில்லாத பொழுதும் பாறைத்திருவிழாவிற்கு பிறகு பசுமை நடையாளர்களை சந்திக்கவிருக்கும் மகிழ்வினை நினைத்து அங்கிருந்து கிளம்பி கூத்தியார்குண்டு பகுதி வயக்காட்டு வரப்புகளில் எங்களை கண்டவுடன் வெட்கப்பட்டு ஓடும் மயில்கள் பாரதிராஜா படத்து ஸ்ரீதேவியையும்  துணைநடிகைகளை ஞாபகப்படுத்தியது, பனிகளால் பாதி மூடப்பட்ட திருப்பரங்குன்றம் மலையானது வெட்கப்படும்  புது மணப்பெண்ணினை போன்று  காட்சியளித்தது. வழிநெடுகிலும் அதிகாலை இயற்கையினை  ரசித்தவாறு பசுமைநடையாளர்கள் கூடியிருந்த மதுரையின் தொண்மையான விளக்குத்தூண் பகுதியினை வந்தடைந்தோம்.

பசுமைநடையாளர்கள் பலரும் காத்திருந்து அய்யா சாந்தலிங்கம் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பி தெப்பக்குளம் விரைந்தோம். வைகையிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுவரும் தெப்பக்குளம் அழகும் கோபுரங்களுக்கு இடையிடையே பசுமையான மரங்களும் கண்கொள்ளா காட்சியாக்கப்பட்டது. சிவன் கோவில் எதிர்புறப்பகுதியில் முத்துகிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து நிகழ்ச்சி விபரங்களை விளக்கினார். முதலில்  தெப்பத்தினை சுற்றி ஒரு நடை நடப்பது என்று முடிவு செய்து அனைவரும் தெப்பத்தினை சுற்றினோம். 

பல  காலமாக கிரிக்கெட் மைதானமாக செயல்பட்ட தெப்பக்குள சுவர்களில் அமர்ந்து ஏக்கத்துடன் பார்த்த சிறுவர்களிடம் விசாரித்த பொழுது அனுப்பானடி டீம் எங்களை கடைசி மேட்ச்சில் ஜெயிச்சுட்டாங்கனே அவனுங்களுக்கு பதிலடி கொடுக்கலானா இப்படி தண்ணியை விட்டு கெடுத்துபுட்டாங்கண்ணே மெடிக்கல் காலேஜ் கிரவுண்டுல்லா விளையாண்டோம் அங்க என்னவோ ஆஸ்பத்திரி கட்டுறோம்னு இங்க வந்தா இங்கேயும் இப்படி பண்றாங்க என புலம்பினர். 

புதிதாக குட்டி போட்ட நாய் குட்டிகளை தெப்பக்குளத்திற்கு வெளியே அழைத்துக் கொண்டும், பல மாடுகள் தங்களின் படுக்கையறையை தண்ணீர் வந்து நனைக்கவிருப்பதினை அறியாமலும், பச்சைபசேலென்ற செடிகளில் பலவண்ணத்துப்பூச்சிகள் தங்களது முழுவடிவத்திற்கு வந்து பறக்கத்தயாராகி வருவதும், இன்னும்சில பூக்களில் தேன் அருந்தி மயங்கிய நிலையிலும், தட்டான்கள் ஜோடி சேர்ந்து ஆடி வருவதும், கொக்குகள் கூட்டம் சேர்ந்து தண்ணீர்நடை நடத்தி கொண்டிருக்க, மீன் கொத்திப்பறவையோ “ இனி இது எங்க ஏரியா உள்ளவராதே” என்றும் என்னை நோக்கி சொன்னது. 



























காலையில் நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் என்னதம்பி கூட்டமா அதுவும் கேமரா கையுமா நடக்கின்றீர்களே எனவினவ பசுமைநடையிலிருந்து வர்றோம் எனக்கூற அட ஆமா தம்பி மலைப்பயணமாக செல்லுவீர்களே நானும் படித்திருக்கிறேனு சொல்ல, வாங்க நீங்களும் நிகழ்வில் கலந்துக்குங்க என அழைக்க அவர்கள் இதோ நண்பர்களை அழைத்து வருகிறோம் என சுற்றி சிவன் கோவில் எதிர்புற படிக்கட்டினில்  மீண்டும் வந்து அமர்ந்தோம்.


அடுத்தநிகழ்வாக பேராசிரியர் சாந்தலிங்கம் அய்யா  தெப்பக்குளத்தின் வரலாற்றினை அனைவருக்கும் புரியும்வகையில் விளக்கினார். எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் சாந்தலிங்கம் அய்யாவிற்கு சிறந்த தொல்லியல் அறிஞர்விருது வழங்கப்பட்டு இருப்பதாக பலத்த கரஓசைக்கிடையே அறிவித்தார்.






காற்றின்சிற்பங்கள் புத்தக வெளியீடு
மதுரையில் வாழும் இத்தனை லட்சமக்களுக்கிடையே மதுரையின் தொண்மையினை காப்பதில் முனைப்புடனும் சூழலியல் சார்ந்த அறிவுடனும் பசுமைநடையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நடையாளரும் ஏதோ ஒருவிதத்தில் திறமையாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பது எனது எண்ணம். 
அதே போன்று தாங்கள் கண்ட பசுமைநடையின்  நிகழ்வுகளை எழுத்துகளாக இணையத்தில் தொடர்ந்து பலரும் பதிந்துவருகின்றனர். இந்த பதிவுகளை ஒருங்கிணைத்து முத்துகிருஷ்ணன் அவர்கள்  காற்றின்சிற்பங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக மாற்றி தெப்பத்தில் மூத்த பேராசிரியர் - தமிழறிஞர் இராம.சுந்தரம் அவர்களால் எழுதியவர்கள் கையில் கொடுத்து வெளியிட்டார். தெப்பக்குளம் என்றவுடனே பழையநினைவுகளில் மிதந்த நான் தற்பொழுது காற்றின் சிற்பங்கள் கொண்டு மிதக்கிறேன். இனிதே நடந்த புத்தக வெளியீட்டிற்கு பிறகு காலை உணவு கோயிலில் உண்டு களைந்தோம். ஆனால் இன்னும் தெப்பத்து நினைவில் மிதந்து கொண்டே உள்ளேன். அடுத்த பசுமைநடையில் சந்திப்போம் நண்பர்களே….      

உங்கள் இனிய வஹாப் ஷாஜஹான்.     திருமங்கலம்.

    

4 comments:

  1. சாந்தலிங்கம் ஐயாவிற்கு சிறந்த தொல்லியல் அறிஞர்விருது வழங்கப்பட்டு இருப்பதற்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  2. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல்முருகன் அண்ணனுக்கு

      Delete