Friday 16 January 2015

பொங்கல் விழா


இயற்கை செல்வங்கள் வழங்கிய கொடைகளுக்கு கைமாறு பொங்கல். நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா சற்றே இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. தங்களின் தாத்தாக்களின் தாத்தா வாழ்ந்த கிராமங்களை பற்றி நகரத்தினர் யாரும் நினைக்கக்கூட நேரமில்லை. நாம் உண்ணும் உணவினை கொடுக்கும் உழவர்கள் வாழும் உன்னதமான கிராமத்தினையும், வயல்வெளிகளையும் பார்வையிடும் எண்ணம் கூட நம் நகர மக்களிடம் இல்லை. நகர மக்கள் பலரும் தங்கள் பகுதிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தினை கூட காண செல்வது இல்லை. கிராமங்களைப் பற்றி கேட்டதினையும், படித்ததினையும், திரைப்படங்கள் மூலமும் கிராமம் என்றால் இப்படி தான் என்று நினைத்து வாழ்ந்து வருகின்றனர். கிராம மக்களும் தங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக உருவாகும் நகரங்களின் மாதிரிகளை கொண்டு தங்களை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகரின் தொண்மையான பகுதிகளுக்கு அழைத்து சென்று அதன் வரலாற்றினை உலக அறிய செய்யும் அமைப்பு பசுமைநடை இது தாங்களறிந்ததே.



இம்முறை பசுமைநடை பயணமும் தை கொண்டாட்டமும் சேர்ந்து அமைய பொங்கல் விழா ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் போல் நகர வீதியில் அல்லது திருமண  மண்டபங்களில் பொங்கல் செய்து கொண்டாட முடிவெடுக்கப் படவில்லை பசுமைநடையினர். பொங்கலை அதன் கிராமிய மனமாறாது கொண்டாட தலைப்பட்டனர் பசுமைநடையினர். அதன் முடிவாக மதுரை திருநகரிலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் உள்ள வெள்ளப்பாறைப்பட்டி கிராமத்தில் கிராம மக்களோடு பொங்கல் கொண்டாடுவது என்று முடிவெடிக்கப்பட்டது.  பொங்கல் விழா முன்னேற்பாடுக்கான பணியாக வெள்ளைப்பாறைப்பட்டி சென்ற பொழுதே கிராம மக்களின் வரவேற்பு சிறப்பாக அமைந்தது.
 கிராமத்தில் அரசமர கோயிலும், மணிகள்  கட்டப்பட்ட  தூண்கற்களும் சிறிய பாறை  மேட்டில்  ஜோதி ஏற்றப்பட்ட  தீப மேடையும் வணங்கும் தளமாக அமைந்து இருந்தது.. இக்கிராமம் வெள்ள பிரளயத்தில் சிக்கிய பொழுது இம்மலைமுகடு ஏறி மக்கள் தப்பியதாக கூறினர். அதன் காரணமாக  ஊரின் பெயரும் வெள்ளப்பாறைப்பட்டி  என பெயரிடப்பட்டுள்ளது.

11.01.2015 ஞாயிறு அதிகாலை பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன். பனியினை கிழித்து பயணித்த பொழுது எனது மகன் இன்னும் என்னப்பா ஏசி ஐ ஆப் செய்ய மாட்டேங்கிரிங்க என்றான். ஆம் என்றும் இல்லாத அளவு பனியின் தாக்குதல் அன்று சற்று அதிகம் தான். நான்குவழிச்சாலையில் இருந்து தென்பழஞ்சி செல்லும் பாதைக்குள் நுழைந்த நிமிடத்தில் நகரமயமாகி வருவதினை பெரிய வீடு ஒன்று ஞாபக படுத்தி நின்றது. அடுத்த ஒரு கி.மீட்டரில் கிராமத்திற்கான அத்தனை விஷயங்களும் வரிசையாக வரத் துவங்கின. தமிழகத்தில் விசால மனம் படைத்தவர்களை குறுகிய சாலையில் சென்று தான் சந்திக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல. 












ஊருக்குள் நாங்கள் நுழைவதும் சூரியன் தனது கதிர்களை ஊருக்குள் பாய்ச்சுவதும் ஒன்றாக அமைந்தது. கால் காயம் காரணமாக  மருத்துவர் ஆலோசனையில் ஓய்வு எடுத்ததால் முதல்நாள் கிராம சுத்தம் செய்யும் பணிக்கு நான் செல்லவில்லை. ஆனால் ஊருக்குள் நுழைந்த பொழுது ஊர் திருவிழா கோலம் பூண்டிருந்தது. வண்ண காகித தாள்களில் தோரணங்கள், முக்கரும்பு அலங்காரம், ஒலிபெருக்கி பாடல்கள், புத்தாடை அணிந்த மக்கள் என நம்மையும் திருவிழா களத்தில் குதிக்கச்செய்தது. ஒருபுறம் பசுமைநடை களப்பணியாளர்களின் மேற்பார்வையில் கிராமத்தினருக்கும் பசுமைநடையாளர்களுக்கும் காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. மறுபுறம் பெண்களால் மிகப்பெரிய வண்ண கோலங்கள் போட்டும் சாமி கும்பிட தனியாக பொங்க பானையில் பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தனர். வந்திருந்த பசுமைநடையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஊர்வலமாக ஊரின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொங்கல் விழாவிற்கான அழைப்பினை விடுத்தனர்.






ஊர்மக்களை அழைத்து கொண்டு ஊர் மந்தையில் நடையாளர்கள் ஒருங்கிணைந்தனர். ஏற்கனவே அறிவித்தப்படி பொங்கல் போட்டிகள் துவங்கின. முதலில் பலூன் போட்டி. போட்டியின் சட்ட விதிகளை வழக்கறிஞர் தம்பி பினாய்காஸ் அறிவித்தார். முதலில் ஒரு பெரிய வட்டம் கோலப் பொடியில் இடப்பட்டது. சிறுவர் சிறுமியர்களின் இடுப்பின் பின்புறம் பலூன் கட்டப்பட்டு வட்டத்தினை விட்டு வெளியேறாமல் அடுத்தவர் பலூனை உடைக்க வேண்டும். நமது பலூனை பாதுகாக்க வேண்டும். பலூன் உடைந்து விட்டால் அவுட் வட்டத்தினை விட்டு வெளியேறி விடவேண்டும். முதலில் எனது மகள் உட்பட 10 சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர். கிராமத்து சிறுவர்களோடு நமது பசுமைநடை குடும்பத்து சிறுவர்கள் ஈடுகொடுத்து விளையாடினர். முதல் போட்டியில் நான் மற்றும் யாருமே எதிர்பார்க்கா வண்ணம் எனது மகள் அப்சானியா இஷா வெற்றி பெற்றாள். அதை தொடர்ந்து கொஞ்சம் பெரிய சிறுவர்சிறுமிகள் விளையாடினர். அடுத்ததாக கயிற்றில்  முறுக்கு கட்டி சாப்பிடும் போட்டியும், பாட்டிலில் தண்ணீர் நிரம்பும் போட்டியும், இளவட்ட கல் தூக்கும் போட்டியும், உரி அடிக்கும் போட்டியும் ,கிராமத்து சிறுவர்,சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் பெண்களுடன் இணைந்து விளையாடி மகிழ்ந்தோம். இடையே காலை உணவு சர்க்கரைப் பொங்கலும், வெண்பொங்கலும் கிராமத்து மக்களுடன் இணைந்து உண்டோம். கிராமத்து மக்கள் பெரும்மகிழ்ச்சியுடன் விருந்துண்டனர்.










பின்னர் விளையாட்டில் வென்றவர்களுக்கு மதுர வரலாறு, காற்றின் சிறகுகள் புத்தகங்கள் பரிசாக பேராசிரியர். சாந்தலிங்கம் அய்யாவின் கரங்களால் வழங்கப்பட்டன. ஊர் பெரியவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றிய ஊர் இளைஞர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துகிருஷ்ணன் ஊரின் வரலாற்றினையும், கல்வியில் பின் தங்கியுள்ள நிலையையும், இதுவரை அரசுப்பணி யாரும் பெறவில்லை என்ற செய்தியினை சொன்ன போது மனம் கனத்தது. நாம் சரியான கிராமத்தினை தான்  பார்வையிட வந்துள்ளோம் என்று நினைத்தேன். ஒவ்வொரு பசுமைநடையாளர்களும் ஊர் பொதுமக்களுடன் கலந்து பேசி அவர்களின் குறைகளை அறிந்து முகநூலில் பதிவிட்டிருந்தது பசுமைநடை அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி வந்திருப்பதாகவே தோன்றியது. 




ஒரு மூத்த நடையாளர் ஒரு மிகுந்த வயதான மூதாட்டியிடம் பேசிய பொழுது தனது வீட்டில் ஒரு மகளுக்கு வாரிசு இல்லை என்பது கூட கவலையாக தெரியவில்லை என்றும் ஊரில் தண்ணீர் அறவே இல்லாத நிலை கவலையளிப்பதாகவும் தனது இறப்பிற்குள் அதனை சரிசெய்ய கோரிக்கை விடுத்ததாக பதிவிட்டிருந்தார். முடிந்த அளவு தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். தனது கவலைகளை மறந்து ஊர் பற்றிய கவலையினை நினைக்கும் எத்தனை பேர் நகரங்களில் வசிக்கின்றோம். இது போன்ற பொன்னான மக்களை தொடர்ந்து பார்வையிட பயணிப்போம். வாருங்கள் பசுமைநடையுடனே. பயணங்களே மனதின் கசடு அகற்றும் மந்திரம்.

6 comments:

  1. படங்களுடன் அழகான பதிவு படிப்பவர்கள் அடுத்த பசுமைநடையின் பொங்கல் விழாவில் கலந்து கொள்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல்முருகன் சார்

      Delete

  2. கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பது விட, ‘டிவி’யில் பார்ப்பது இன்னும் சுகம். பசுமைநடை பயணங்களை ‘உழைப்பாளி’யின் ‘கைவண்ண’த்தில் படிப்பது இன்னும் ஆனந்தம். வெள்ளப்பாறைப்பட்டி கிராமத்தின் அடிப்படை பிரச்னைகள், தேவைகள், ஊர் புராணம் (வெள்ளப் பெருக்கு, பாறை...) எல்லாம் இயல்பாகச் சொல்லி, கூடவே பசுமை நடை பொங்கல் விழாவையும் கலந்து கட்டியிருக்கிற லாவகம், தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே வாய்க்கிற வரம். விசால மனம் கொண்டவர்களைச் சந்திப்பதற்காக பனி கொட்டுகிற குறுகிய சாலையின் வழியே, காலில் ஏற்பட்ட படுகாயத்தையும் பொருட்படுத்தாது சென்று பதிவிட்டதற்காக நன்றி. வரிகளை வாசிக்கையில், பசுமைநடை குழுவினர் தயார் செய்த பொங்கலை ருசிக்க முடியவில்லையே தவிர... உணர முடிகிறது. மகளின் வெற்றியை ஒரு தந்தையாக ரசித்து மகிழ்ந்திருப்பீர்கள். இதற்காக, ஒரு குட்டி பார்ட்டி கொடுத்தால், நாங்களும் மனம் மகிழ்வோம்.
    மீண்டும் நன்றி.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete
  3. நன்றி எஸ்.கிருஷ்ணகுமார். கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் என்பது போல skk ன் நட்பின் பலனே எனது எழுத்து

    ReplyDelete
  4. தமிழகத்தில் விசால மனம் படைத்தவர்களை குறுகிய சாலையில் சென்று தான் சந்திக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி போல - Super...

    ReplyDelete