Friday 2 January 2015

பூவே பூச்சூடவா



பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் இருக்கிறதா? இந்த கேள்விக்கான விடையை கடவுள் முதல் கடைகோடி மனிதன் வரை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி நாம் அறிந்தது. சங்கஇலக்கிய நூல்கள்  பெண்கள் கூந்தல் குறித்து பலகாவியங்கள் படைத்துள்ளன. பெண்கள் கூந்தல் பேணுதல் ஒரு தனி கலையே. நறுமண எண்ணெய் தடவி வகிடெடுத்து சடை பின்னி மலர்கள் சூடுதல் அப்பப்பா.. அழகிற்கு அழகு சேர்த்தல் இது தானோ? இம் மண்ணுலகில் மலருக்கு மயங்காதவர் யார் உளர்? பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் காஷ்மீர் மலர்களுக்கு பெயர் போனது.
ஆனால் அங்கு பெண்கள் மலர்களை பெருமளவில் சூடுவதில்லை. கேரளாவில் ஓனம் பண்டிகையின் பொழுது மகாபலி அரசர் வருகைக்காக மலர்களைக் கொண்டு தரைகளையே அழகுபடுத்துவர். தமிழகத்தில் மட்டும் தான் சென்ற நூற்றாண்டுகளில் ஆண்களும், பெண்களும்  கூந்தல் வளர்த்து மலர் சூடியுள்ளனர்.


பெண்கள் மலர்சூடுவது மட்டும் அவர்களின் கூந்தல் போன்று இன்று வரை நீண்டு வருகின்றது. கல்லூரிக்கு பேருந்தில் பயணிக்கும் பொழுதெல்லாம் பெண்களின் மலர்கண்காட்சி தான் அன்றைய பொழுதினை உற்சாகப்படுத்தும். வெள்ளி திங்கள் தேதிகளில் புட்போர்ட் பையன்கள் பேருந்துக்குள் பயணிப்பதன் ரகசியமும் இது தான். 



குளிர்காலங்களில் மலர்களில் நிற்கும் பனித்துளியின் அழகோ அழகு. டிசம்பர் மாதம் வந்து விட்டால் ஊட்டி ரோஸ் என்று பலவண்ணங்களில் பூக்கள் தெருக்களில் விற்பனைக்கு வரும். 
பூக்காரனின் அழைப்பு ஒலி “அம்மா பூவே” என கூவும் அழகே அருமையாக இருக்கும். பல பெண்களின் விழிப்பு அலாரம் இதுவே. பலரும் பூக்காரன் வருகைக்காக காத்திருந்து வந்தபின் அலுவலகம் செல்வதும் நடைபெறும். 

ஆடைகேற்ற வண்ணத்தில் தேர்தெடுப்பதும் சடைபின்னலுக்கு ஏற்ற வகையிலும் தேர்தெடுப்பர். பூக்களை தேர்தெடுப்பதில் நேரம் செலவிடும் பெண்களை வீட்டிலிருந்து ஆண்கள் அழைப்பர். இருங்க இதையாவது மேட்சா தேடிக்கிறேன் என்பர் பெண்கள் குறும்பாக. பெண்களின் குண,மணங்களை அறிவதும் புரிவதும் கொஞ்சம் கஷ்டம் தான். சரி விடுங்க அடிக்க வரப் போறாங்க. மலர்களின் குண,மணங்களை தெரிந்து கொள்வோம்.





மனோரஞ்சிதப்பூ நாம் மனதில் எண்ணும் எண்ணத்திற்கு தகுந்த வாசனையை தரும். குளிர் காலத்தில் ரோஜாவினை பலவண்ணங்களில் காணலாம். ரோஜா வாசனை அலாதியானது. இப்பனிகாலத்தில் பக்த கோடிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரளிப்பூ அதிகமாக கிடைக்கும். செவ்வந்திப்பூ மஞ்சள் மங்கலத்தினை குறிக்கும் வண்ணம் மாலைகளிலும் கூந்தலுக்கும் பயன்படுத்துவர். செவ்வந்திப்பூ அதிகமாக நுகர்ந்தால் தலைவலி ஏற்படுத்தும். செவ்வந்தியை மண்டைகேந்தி என்றும் அழைப்பர். கனகாம்பரம் வாசனையில்லை என்றாலும் வண்ணத்திற்காகவே அதிகவிலைக்கு விற்கப்படும்.   கல்யாணம் மற்றும் விசேஷங்களில் பன்னீர்பூ என்கின்ற சம்மங்கிப்பூ மாலையாகவும் கைச்செண்டாக பயன்படும். 




மலர்கள் வாசனைக்கானது மட்டுமல்ல, மருத்துவத்துக்குமானது. செம்பருத்திப்பூ இதயத்திற்கு நல்லது. கூந்தலுக்கு பயன்படாத வாழைப்பூ மற்றும் முருங்கைப்பூ உடல்நலத்திற்கு ஏற்றது. முல்லைப்பூ என்ற பிச்சிப்பூ கண்வலி காலத்தில் கண்களுக்கு மேல் வைக்க வலி நீங்கும். ஜாதிப்பூ என்றும் அழைக்கப்படும் இப்பூ குளிர்ச்சி நிறைந்தது. டிசம்பர் பனியில் பூக்கும் டிசம்பர் பூக்கள் அழகு பெண்களின் கூந்தலில் நாட்டியமே ஆடும்.  குளிர் காலத்தில் மல்லிகை வரத்து குறைவாகவே இருக்கும். வசிய மருந்து வகைகளில் மதுர மல்லியே முதலிடம் பிடிக்கும். பனி படர்ந்த மலர்களை ரசிக்கும் காலமிது.  பூ சூடுவதாலேயே பூவையர்கள் என அழைக்கப்படுகின்றனர் பெண்கள். 



பூ வின்றி அமையாத பூவையர்கள். மலரின்றி அமையாத மங்கையர்கள். இப்படி மலர்களையும் பெண்களையும் ஒப்பிட்டு  மலர்களை பயன்படுத்தி பின்பு கசக்கி எறிவது போல் பெண்களையும் ஆண்களின் உலகம் கசக்கி பிழிவதினை தடுப்போம்.
தற்பொழுது நர்சரி கார்டன் என்ற பெயரில் மலர் மற்றும் மர விற்பனையங்கள் உருவாகி வருவதினை வரவேற்போம். மலர் செடி கொடிகளையும் மரமும் வளர்போம். மரணத்திற்கு பின்பும் நம்முடன் வரக்கூடிய மலர்களை மலரச்செய்ய தின்ணை, மாடி, என காலி இடங்கள் அனைத்திலும் மலர் தோட்டம் அமைப்போம்.

2 comments:


  1. படிக்கிற போது, கட்டுரையின் வரிகளில் மலர்களின் மணம் உணர முடிகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் நாளெல்லாம் புழங்குகிற ஆட்களுக்குக் கூட இவ்வளவு விஷயங்கள், நுட்பங்கள் தெரிந்திருக்க சாத்தியமில்லை. குஷ்பூ தவிர மற்ற எல்லாப் பூக்கள் குறித்த விஷயங்களும் ஒரே கட்டுரையில்... ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் தேடிப் பிடித்து சேகரித்த உங்கள் உழைப்‘பூ’... அது அதிக மணம் வீசி உங்களை அடையாளப்படுத்தும். ஒரு வேண்டுகோள்: பூக்காரன், பூக்காரராக மாறினால், கூடுதல் மகிழ்ச்சி.
    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete